சேலத்தில் கோகுலாஷ்டமி விழா கோலாகலம்
சேலம்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்(இஸ்கான்) சார்பில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, சேலம், சோனா கல்லூரி வளாகத்தில், நேற்று 23ல் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, கிருஷ்ண பலராமரின் விக்கிரகங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆரத்தி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் கீர்த்தனம் பாடி வழிபட்டனர். மேலும், பஜனை, உபன்யாசம் நடந்தது. இஸ்கான் திரைப்படம், பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. சென்னை, பிரபுபாதர் தியேட்டர்ஸ் குழுவினரால், ’கிருஷ்ண லீலா’ எனும் நாடகம், ஆன்மிக அன்பர்களை மெய் சிலிர்க்க வைத்தது. இரவு, 10:30 மணிக்கு, கிருஷ்ண பலராமனு க்கு, அபிஷேகம், ஆரத்தி நடந்தது. பின், பக்தர்களுக்கு பிரசாத விருந்து அளிக்கப்பட்டது.
கிருஷ்ணன் அலங்காரம்: சங்ககிரி, நாட்டாம் பாளையம், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள கண்ணபிரான் கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, திரளான பக்தர்கள், உற்சவர் கண்ணபிரானை, பல்லக்கில் வைத்து, கோவிலைச்சுற்றி வலம் வந்து, தரிசனம் செய்தனர். அப்போது, கிருஷ்ணன் அலங்காரத்தில், சுவாமி காட்சியளித்தார்.
வெள்ளி கவசம்: ஆத்தூர், கோட்டை, வெங்கடேச பெருமாள் கோவிலில், பெருமாள், கிருஷ் ணர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு, பூஜை நடந்தது. பின், பூதேவி, ஸ்ரீதேவி சமேத பெருமாள், தங்கம், வெள்ளி கவசங்களுடன், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். அதேபோல், ஆறகளூர் கரிவரதராஜ பெருமாள், வீரகனூர் கஜவரதராஜ பெருமாள், தலைவாசல் வரதராஜ பெருமாள், வீரகனூர் ராயர்பாளையம் கிருஷ்ணர் உள்ளிட்ட கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.