சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நவராத்திரி லட்சார்ச்சனை நிறைவு!
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், நாளை நடைபெறும் வசந்த நவராத்திரி லட்சார்ச்சனை நிறைவு விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு இலவச செம்பு டாலர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவில், புராண சிறப்பு மிக்கது. சுகவனேஸ்வரர் கோவிலில், வசந்த லட்சார்ச்சனை விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு லட்சார்ச்சனை விழா, கடந்த 23ம் தேதி முதல் நடந்து வருகிறது. நவராத்திரி லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபராதனை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. வசந்த நவராத்திரி லட்சார்ச்னை விழாவை முன்னிட்டு, இன்று காலை 8 மணிக்கு ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஹோமம், 108 மூலிகைகளால் செய்யப்படுகிறது. ஏழை, எளிய மக்களின் பொருளாதார வாழ்க்கை நிலை உயர்ந்திடும் வகையில், ஆதிசங்கரரால் அருளப்பட்ட ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திர பாராயணம் செய்யப்படுகிறது. நாளை, நவராத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு மாலை 6.30 மணிக்கு கோவிலில் சொர்ணாம்பிகை அம்மன் திருக்கோவில் வலம் வரும்போது, மகா புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, சொர்ணாம்பிகை அம்மன் திருவுருவம் பொறிக்கப்பட்ட செம்பு டாலர் இலவசமாக வழங்கப்படுகிறது. நன்மைகள் பல அருளும் சொர்ணாம்பிகை அம்மன் பொறித்த செம்பு டாலரை, பெண்கள் எவ்வித தோஷமுமின்றி திருமாங்கல்யத்தில் அணிந்து கொள்ளலாம்.