திருப்பரங்குன்றத்தில் கைபாரம் திருவிழா!
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று "கைபாரம் திருவிழா நடந்தது. இங்கு பங்குனித் திருவிழா மார்ச் 27ல் துவங்கியது. தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருள்கிறார். நேற்று 5ம்நாள் விழாவில் "கைபாரம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். சேவார்த்திகள் வாகனத்தை உள்ளங்கைகள்மீது கைபாரமாக தலைக்குமேல் உயர்த்திப் பிடித்தவாறு, கோயில் வாசல் முதல் கொத்தாள முக்குவரை மூன்றுமுறை கொண்டு ஓடினர். பக்தர்களுக்கு சந்தன பிரசாதம் வழங்கப்பட்டது.
நக்கீரர் லீலை: திருப்பரங்குன்றம் மலை அடிவார குகையில் அடைக்கப்பட்ட நக்கீரர், முருகப்பெருமானை நினைத்து திருமுருகாற்றுப்படை பாடியதும், அவருக்கு சுவாமி காட்சியளித்த தினத்தை குறிக்கும் வகையிலும், நக்கீரர் லீலையும் நடந்தது. இரவு "கைபாரம் நிகழ்ச்சி முடிந்து, சொக்கநாதர் கோயில்முன்பு, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, நக்கீரர் எழுந்தருளினர். நக்கீர் லீலை புராண கதையை சிவாச்சாரியார் பக்தர்களுக்கு கூறினார். திருக்கல்யாணம்: ஏப். 5ம்தேதி பங்குனி உத்திரம், 7ல் பட்டாபிஷேகம், 8ல் பகல் 11.45 மணிக்குமேல் திருக் கல்யாணம், 9ல் தேரோட்டம், 10ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.