பாலக்காட்டில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்
பாலக்காடு: விநாயகர் விசர்ஜன ஊர்வலம் பாலக்காட்டில் விமர்சையாக நடந்தது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. தாரேக்காடு நீராட்டு கணபதி கோவில், மகா கணபதி கோவில், சாத்தபுரம் பிரசன்ன கணபதி கோவில், கொடுவாயூர் ஆல் மரத்தடி கணபதி கோவில் ஆகிய முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கொழுக்கட்டையுடன் எள்ளுருண்டை, பாயசம், வடை, பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் ஆகியவை கலந்து நிவேத்யம் செய்து வழிபட்டதோடு மூலவர் தரிசனத்திற்கு எட்டியது பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர்.
நேற்று மாலை 2.30 மணியளவில் செண்டை மேள-தாள-தப்பட்டை வாத்தியம் முழங்க, யானைகள் அணிவகுப்புடன் 150க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக, பெரிய கடைவீதி, பி.ஓ.சி., சாலை, தலைமை தபால் அலுவலகம் சாலை, விக்டோரியா சாலை, சேகரிபுரம் வழியாக, ஊர்வலம் சென்று கல்பாத்தி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. ஊர்வலம் காரணமாக நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் வாகனப் போக்குவரத்து கட்டுப்பாடு ஏற்படுத்தியிருந்தன. நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதியானத்திற்கு பிறகு விடுமுறையும் அளிக்கப்பட்டிருந்தன.