கரூர் கோவில்களுக்கு தீபமேற்றும் எண்ணெய்: பூசாரிகள் நல சங்கத்தினர் ஆணையருக்கு மனு
கரூர்: பெரிய கோவில்களுக்கு, பக்தர்கள் வழங்கும் தீபமேற்றும் எண்ணெய், தேவைக்கு போக மீதமுள்ளதை ஒரு கால பூஜைக்கே வழியில்லாத கிராமப்புற கோவில்களுக்கு வழங்க வேண்டும் என, பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு, இந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள பெரிய கோவில்களில் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற, தீபம் ஏற்றி வந்தனர். கடந்தாண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு, விளக்கு ஏற்றுவதற்கு பல்வேறு தடைகள் கோவில் நிர்வாகத்தினரால் பிறப்பிக்கப்பட்டன. இதனால், கோவில் சார்பில் நெய் தீபம் ஏற்றுவதற்கு பொது ஏலம் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, கோவில்களுக்கு வளாகத்தில் அணையா விளக்கு மற்றும் நந்தா விளக்கு அல்லது பெரிய விளக்கு போன்றவை மட்டும் இடம் பெற்றுள்ளன. இதனால், நெய்விளக்கு, அகல்விளக்குகளை ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அத்தகைய விளக்குகளுக்கு கொண்டு வரும் தீப எண்ணெய், நெய் ஆகியவற்றை கோவில் வளாகத்தில் இருக்கும் நந்தாவிளக்கில் (பெரியவிளக்கில்) ஊற்றி வருகின்றனர்.
மீதியாகும் தீப எண்ணெய், நெய் போன்றவைகளை, கோவில் பீப்பாய்களில் இருப்பு வைத்தி ருப்பதாக தெரிய வருகிறது. இதில், அடைத்து வைத்தால் தீ விபத்து ஏற்படும் போது, பெரும் சேதம் ஏற்படக்கூடிய நிலை வரலாம். இந்த எண்ணெய், ஒரு கால பூஜைக்கே வழியில்லாத கிராமப்புற சிறிய கோவில்களுக்கு வழங்கினால், அங்கிருக்கும் தெய்வங்கள் ஒளிபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.