உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லடம் மாரியம்மன் கோவிலில் நூதன வழிபாடு

பல்லடம் மாரியம்மன் கோவிலில் நூதன வழிபாடு

பல்லடம்: நவராத்திரியை முன்னிட்டு, பல்லடம் பனப்பாளையம் மாரியம்மன் கோவிலில், நூதன வழிபாடு நடந்தது. நவராத்திரியை முன்னிட்டு, கோவில்கள், மற்றும் இல்லங்களில், கொலு வைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பல்லடம் பணப்பாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, நூதன வழிபாடு நடந்து வருகிறது. சிறுமிகளுக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோற்றமுடைய, அம்மன் அலங்காரம் செய்விக்கப்பட்டு, அவர்களை அம்மனாக பாவித்து வழிபாடு நடக்கிறது. அது குறித்து கோவில் பூசாரிகள் கூறியதாவது: நவராத்திரியின் ஒன்பது நாளும், அம்மன் ஒவ்வொரு ரூபத்தில் காட்சி தருகிறாள். மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, மற்றும் சாமுண்டி உள்ளிட்ட ரூபங்களில் காட்சி தருவாள். அதன்படி, வயதுக்கு வராத சிறுமிகளுக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூபம் கொண்ட அம்மனாக அலங்கரிக்கப்படுவர். அவர்களை அம்மனாக பாவித்து, வழிபாடு நடக்கும். அதேபோல், அந்நாளில் மூலவருக்கும் அதே ரூபத்தில் அலங்காரம் நடக்கும். கடைசி நாள், ஒன்பது ரூபங்களில் அலங்கரிக்கப்பட்ட சிறுமிகளும், ஒன்றாக காட்சி தருவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !