சொத்து கையை விட்டு போகாமல் இருக்க வழி
தன் ஒரே மகனுக்கு பிறந்தநாள் பரிசாக தந்தை ஒரு தங்கப் பொம்மையை பரிசளித்தார். 'மகனே! வாழ்க்கையில் எதைத் தொலைத்தாலும் இதை தொலைத்து விடாதே. ஏதாவது சிரமம் ஏற்பட்டால், இந்த பொம்மையின் மதிப்பு உயர்ந்து அப்போது உனக்கு கைகொடுக்கும்,'' என்றார். சில காலத்துக்குப் பின் அவர் இறந்து விட்டார்.அந்த மகனும் தங்கப் பொம்மையை கண்ணுக்கு ஈடாகப் பாதுகாத்து வந்தான். ஒருநாள் தனது பண்ணைக்குச் சென்று விட்டு திரும்பியவன், பொம்மை இருந்த பெட்டகத்தை திறந்தான். உள்ளே பொம்மையைக் காணவில்லை. யாரோ அதை திருடிவிட்டது தெரிந்தது. அவன் மிகவும் வேதனைப்பட்டான்.அந்த நினைப்பிலேயே பண்ணை வேலைகளை மறந்தான். ஒரு கட்டத்தில் பெரும் நஷ்டமாகி பண்ணையை விற்றுவிட்டான்.ஒருநாள் ஒரு கிராமத்துக்குச் சென்றான். அங்கிருந்த விவசாயக் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தான். அந்த வீட்டுப் பெரியவர் தன் மகன்களிடம், 'மக்களே! நீங்கள் இன்றிருக்கும் நிலம், பொருள் ஆகியவற்றை நம்பாதீர்கள். இவை ஏதோ ஒரு காரணத்தால் நம் கையை விட்டுப் போய்விடும் நாள் வரலாம். உழைப்பே என்றும் நிஜமானது. அது என்றைக்கும் சோறு போடும். நாம் பல பண்ணைகளின் எஜமானர்கள் என்பதற்காகவும், செல்வம் இருக்கிறதே என்பதற்காகவும் வயலுக்குள் இறங்கி உழைக்க தயங்கக்கூடாது. ஒருவேளை இந்த செல்வங்கள் நம்மை விட்டுப் போய்விட்டாலும் உழைப்பு உங்களை கைவிடாது,'' என்றார்.அவர்களும் அப்படியே செய்வதாக வாக்களித்தனர். இதைக்கேட்ட அந்த மகன், தனது தந்தையும் தனக்கு தங்கப் பொம்மைக்கு பதிலாக இத்தகைய அறிவுரையைத் தந்திருந்தால், தனது செல்வம் பறிபோயிருக்காதே என்று ஆதங்கப்பட்டான்.ஆம்...உழைப்பு மட்டுமே நமது நிரந்தரச் சொத்து. மற்றவையெல்லாம் சூழ்நிலைகளால் அழியக்கூடியவை.உழைப்பைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைக் கேளுங்கள்.* வேலை செய்ய விரும்பாதவன் சாப்பிடவும் விரும்பாதிருக்கட்டும்.* உழைப்பாளி அவமானப்படத் தேவையில்லை.* உண்மையில் அறுவடை செய்ய வேண்டியதோ ஏராளமாயிருக்கிறது. ஆனால், வேலையாட்களோ வெகுசிலர் தான் இருக்கிறார்கள். (பணிகள் ஏராளமாக இருந்தும் யாரும் வேலை செய்ய விரும்புவதில்லை என்பது இதன் பொருள்)* உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக.* உழைக்கும் குடியானவனே விளைச்சல் கனிகளில் முதல்பங்கு பெற வேண்டும்.* போரடிக்கிற மாட்டிற்கு வாயைக் கட்டாதே. (உழைப்பவர்க்கு சரியான கூலியைக் கொடு என்று அர்த்தம்) * உழைப்பாளி தன் வெகுமதிக்கு தகுதியானவனாகிறான்.