உள்ளூர் செய்திகள்

கையளவு இதயத்தில் கடலளவு ஆசை

ஒரு குருவும் அவருடைய மூன்று சீடர்களும் அடர்ந்த காட்டின் வழியாக நடந்து கொண்டிருந்தனர். வழியில் மூன்று விலை மதிப்புள்ள கற்கள் கிடப்பதைக் கண்டார்கள். அதை எடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று, விற்றுக் கிடைக்கின்ற பணத்தில் வசதியாக வாழலாம் என்று எண்ணினார்கள். ஆனால், அவற்றை எடுக்கக்கூடாது என குரு தடுத்து விட்டார்.''ஐஸ்வரியம் அதை விரும்புகிறவர்களை சோதனையிலும் கண்ணியிலும் சிக்க வைக்கும். சேதத்திலும் அழிவிலும் கொண்டு போய் நிறுத்தும். ஆகவே அதை இச்சிக்கக்கூடாது,'' என்ற பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டினார். சீடர்கள் குருவின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து பயணத்தைத் தொடர்ந்தனர்.அந்த வழியாக மூன்று நண்பர்கள் வந்தார்கள். அவர்கள் அந்தக் கற்களை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். அதை ஒருவன் எடுத்தான்.''நாம் மூவரும் ஆளுக்கொரு கல்லை வைத்துக் கொள்வோம்,'' என்று சொன்னான். அவர்களுக்கு பசி ஏற்பட்டது.ஒரு நண்பன், ''நான் போய் சாப்பிட்டு விட்டு, உங்களுக்கு சாப்பாடு கொண்டு வருகிறேன்,'' என்று சொல்லிக் கிளம்பினான். நன்றாகச் சாப்பிட்டு விட்டு, இருவருக்கும் சாப்பாடு வாங்கி வந்தான். வரும் வழியில் அவனது மனதில் விபரீதமான சிந்தனை ஏற்பட்டது. மூன்று கற்களையும் தானே வைத்துக் கொண்டால் என்ன என்பதே அவனது சிந்தனை. இந்த பேராசையால், இருவரையும் கொன்று விட திட்டமிட்டான். தான் கொண்டு வந்த உணவில் காட்டில் கிடந்த விஷக்காய்களை அரைத்து கலந்தான்.அதே நேரம், காட்டில் இருந்த இரண்டு நண்பர்களுக்கும் இதே போன்ற விபரீத சிந்தனை ஏற்பட்டது. ''நாம் இருவரும் சமபங்காக ஆளுக்கு ஒன்றரை கல் வீதம் எடுத்துக் கொள்வோம். உணவு வாங்கச் சென்ற நண்பனைக் கொன்று விடுவோம்,'' என திட்டமிட்டனர். மூன்றாவது நண்பன் சாப்பாட்டு பொட்டலத்துடன் வந்தான். அவனிடம் சாப்பாட்டை வாங்கிய நண்பர்கள் அவனைக் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டனர். பின்னர், அவர்கள் நண்பன் வாங்கி வந்த உணவைச் சாப்பிட்டனர். விஷத்தின் விளைவாக அவர்களும் இறந்து போனார்கள்.மறுநாள் காலை குருவும் மூன்று சீடர்களும் அவ்வழியே திரும்பி வந்தனர். கற்கள் கிடந்த அந்த இடத்தில் மூவரது உடலையும் கண்டனர். குரு கூறிய அறிவுரைக்காக நன்றி கூறினார்கள்.''பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்'' (நீதி 28:16) என்ற வேத வசனமும், ''பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே. இது தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும்,'' (நீதி1:19 ) என்ற வசனமும் இங்கே குறிப்பிடத்தக்கவை.கையளவு இதயத்தில் கடலளவு ஆசை வைப்பதால் தானே இந்த நிலைமை! இனியும் ஆசை தோன்றுமா!