சகிப்புத்தன்மை
மார்க்ட்வைன் என்ற அறிஞர் மக்களின் மத்தியில் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மைதானத்தில் மக்கள் கூடினர். ஆனால் பேச்சாளர் வரவில்லை. கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் நாளை இரவு நிகழ்ச்சி நடக்கும் என அறிவித்தனர். கூடியிருந்தவர்கள் சலிப்புடன் கலைந்தனர். வெளியூரில் இருந்து வந்தவர்கள் வருத்தமுடன் புறப்பட்டனர். மறுநாள் ஓரளவுக்கு மக்கள் வந்தனர். அன்றும் ட்வைன் வரவில்லை, 'பேச்சாளருக்கு உடம்பு சரியில்லை. நாளை நடக்கும்' என அறிவிக்கப்பட்டது. மக்கள் திட்டிக் கொண்டே புறப்பட்டனர். மறுநாள் கூட்டம் சுமாராக இருந்தது. சரியாக 7:00 மணிக்கு மேடையேறிய மார்க், “மக்களே! இரண்டு நாளாக இந்த ஊரில் தான் இருந்தேன். ஆனால் வராததற்கு காரணம், யாருக்கு சகிப்புத்தன்மை அதிகம் என்பதை அறிய விரும்பினேன். அவர்களால் மட்டுமே நிம்மதியுடன் வாழ முடியும். இங்குள்ள அனைவருக்கும் சகிப்புத்தன்மை அதிகம். துன்பம் நேரும் காலத்தில் நீங்கள் பொறுமையுடன் ஏற்பீர்கள்'' என்றார்.