உள்ளூர் செய்திகள்

பத்தாவது மனிதன்

 பத்து விதமான மனிதர்கள் தங்களின் எதிர்பார்ப்பை ஆண்டவரிடம் தெரிவித்தனர். முதல் மனிதன், “ கோடி கோடியாக பணம் வேண்டும்.” என்றான்.இரண்டாவது மனிதன், “அரசியலில் ஈடுபட்டு பெரிய பதவியை அடைய வேண்டும்”மூன்றாவது மனிதன், “ திரைப்பட நடிகராக புகழுடன் வாழ வேண்டும்.”நான்காவதாக நின்ற ஒரு பெண், “உலக அழகி என உலகமே பாராட்ட வேண்டும்”ஒன்பது பேர் இப்படியே ஆசைப்பட பத்தாவது மனிதனோ, '' நிம்மதியோடும், நிறைவோடும் வாழ விரும்புகிறேன்'' என்றான். இதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்தனர்.“நிம்மதிக்காக தானே நாங்களும் கேட்டோம். விருப்பம் நிறைவேறினால் நிறைவு வந்து விடுமே?” என விளக்கம் அளித்தனர். ''நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன் போகலாம்.” என்றார். பத்தாவது மனிதனிடம், ''நீ மட்டும் இங்கு காத்திரு. சற்று நேரத்தில் வருகிறேன்'' என சொல்லி விட்டு புறப்பட்டார். ஒன்பது பேருக்கும் செல்ல மனமில்லை. 'அவனிடம் ஆண்டவர் என்ன சொல்லப் போகிறார்; அவனுக்கு என்ன தரப் போகிறார்' என்பதை அறிய துடித்தனர். எதுவும் பெறாத பத்தாவது மனிதன் மீது பொறாமை ஏற்படவே அவர்களின் நிம்மதி குலைந்தது. பத்தாவது மனிதன் மட்டும் மனநிறைவுடன் காத்திருந்தான். 'பத்தாவது மனிதனா... இல்லை பத்தாது என்ற மனிதனா...' என நீங்களே முடிவு செய்யுங்கள்.