உள்ளூர் செய்திகள்

சாதிக்கப் பிறந்தவன்

கொலம்பியா பல்கலையில் பேராசிரியர் ஒருவர் கணிதம் நடத்தினார். வகுப்பில் மாணவன் ஒருவன் அயர்ந்து துாங்கினான். அவனை ஆசிரியர் எழுப்பவில்லை. வகுப்பு முடிந்து அனைவரும் சென்ற பிறகே துாங்கியவன் எழுந்தான். பலகையில் இரண்டு கேள்விகள் எழுதப்பட்டிருந்தது. விடுமுறை நாளுக்கான வீட்டுப்பாடமாக கொடுத்திருப்பதாக கருதி நோட்டில் குறித்துக் கொண்டான். அதற்கு விடை காண சம்பந்தப்பட்ட புத்தகங்களை நுாலகத்தில் தேடிப் பிடித்து விடை கண்டுபிடித்தான். மீண்டும் வகுப்பிற்கு பேராசிரியர் வந்த போது, ''தாங்கள் பாடம் நடத்தும் போது துாங்கி விட்டேன். ேஹாம்ஒர்க்காக இரண்டு கணக்குகள் கொடுத்திருப்பதைக் கண்டேன். அதில் ஒன்றிற்கு மட்டும் விடை கண்டுபிடிக்க முடிந்தது'' என்றான். ''கணித நிபுணர்களால் தீர்வு காண முடியாத கணக்கிற்கு உதாரணம் அவை. ஆனால் நீ விடை கண்டுபிடித்தது ஆச்சரியம் தான். உண்மையில் சாதிக்கப் பிறந்தவன் நீ'' என பாராட்டினார். அந்த சாதனை மாணவனின் பெயர் ஜார்ஜர் பெர்னாடு டான்சிக். பின்னாளில் விஞ்ஞானியாக திகழ்ந்தான்.