பெற்றோர் கவனத்திற்கு
குதுாகலம் நிறைந்தது குழந்தைப் பருவம். கள்ளம் கபடம் இல்லாத இவர்களது மனதில் தங்களது எதிர்பார்ப்புகளை பெற்றோர் பலரும் திணிக்கின்றனர். குழந்தைகளிடம், ''நீ டாக்டரா, இன்ஜினியரா... என்னவாக விரும்புகிறாய்?'' என கேட்கிறார்களே, தவிர அவர்களது விருப்பத்தை கேட்பதில்லை. அந்தப் பிஞ்சு மனதுக்குள் ஓர் கவிஞனோ, ஓவியனோ உறங்கிக் கொண்டிருக்கலாம் அல்லவா! அவனைத் தட்டி எழுப்ப பலருக்குத் தெரிவதே இல்லை.இந்த உலகில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு நோக்கத்திற்காகவே பிறக்கின்றனர். அவர்கள் மீது நமது கருத்தை திணிக்கக் கூடாது. 'உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர். உங்களை ஊடகமாகக் கொண்டு அவர்கள் தோன்றினார்களேயன்றி உங்களிடமிருந்து அவர்கள் தோன்றவில்லை' என்பது அமெரிக்க எழுத்தாளரான கலீல் ஜிப்ரானின் வரிகள். குழந்தைகளுக்கு அன்பினை அள்ளிக் கொடுங்கள். உங்கள் சிந்தனைகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள்.