உள்ளூர் செய்திகள்

தைரியம் தந்த பக்தி!

நெப்போலியனை மாவீரன் என்று வர்ணிப்பார்கள். ஆனால், அந்த வீரனையே வெற்றி கொண்ட ஒன்று உண்டென்றால், அது ஆன்மிகம் தான். ஜெர்மனியில் டானகர் என்ற சிற்பி வசித்தார். அவர் இயேசுநாதரின் சிலையை செய்ய ஆரம்பித்தார். மிகுந்த ரசனையுடன் சிலையைச் செய்து முடிக்க 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு சிறுமியை அழைத்தார்.''இது யாருடைய சிலை, சொல் பார்க்கலாம்,'' என்றார்.அவள் மிகவும் அமைதியாக, ''இவர் யாரெனத் தெரியவில்லை, ஆனால், ஏதோ ஒரு மகான்,'' என்று பதிலளித்தாள்.டானகருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.'இவ்வளவு சிரமப்பட்டு செய்தும், இவர் இயேசு என்பதை அந்தச் சிறுமியால் அடையாளம் காண முடியவில்லையே! அப்படியானால், தனது பணி சரியில்லை' என்ற முடிவுக்கு வந்தார். மேலும், சிரமம் எடுத்து ஆறு ஆண்டுகள் அந்தச்சிலைக்கு மெருகூட்டினார். இப்போது, இன்னொரு சிறுமியை அழைத்தார்.''இவர் யார் என்று சொல்'' எனக் கேட்டார்.அந்தச் சிறுமி தன்னையறியாமல் கைகளை எடுத்து வணங்கி கண்ணீர் சிந்தினாள். ''இவரா! சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடம் கொடுங்கள்,'' என்று சொன்ன இயேசுபிரான் அல்லவா இந்த புனிதர். கன்னி மரியாளின் தவப்புதல்வர் அல்லவா!'' என்றாள்.டானகர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். தன் வேலைக்கு கிடைத்த மதிப்புக்காக கர்த்தருக்கு நன்றி தெரிவித்தார்.சிறப்பு வாய்ந்த இந்த சிற்பி பற்றி, மாவீரன் நெப்போலியன் கேள்விப்பட்டான். காதல் தேவதையான வீனசின் சிலையை தத்ரூபமாக வடித்துத் தரும்படி டானகரிடம் கேட்டான். அவர் மறுத்து விட்டார்.''இயேசுவின் சிலையை வடித்த இந்தக் கைகள், பிற சிலைகளை வடிக்காது,'' என சொல்லிவிட்டார்.''ஆவியிலே அனலாயிருங்கள். கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்,'' என்று பைபிள் கூறுகிறபடி, மாவீரனான மன்னன் என்றும் பாராமல், அவனையும் எதிர்க்கும் தைரியத்தை ஆன்மிகமே அந்த சிற்பிக்குத் தந்தது. நெப்போலியனுக்கு, அந்த ஆன்மிகவாதியின் பதிலே சம்மட்டி அடியாகவும் விழுந்தது.மனிதனுக்கு உடல்பயிற்சியோ, வீர விளையாட்டுகளோ தைரியத்தை தந்து விடாது. பக்திக்கு மட்டுமே தைரியத்தை கொடுக்கும் சக்தி உண்டு.