உள்ளூர் செய்திகள்

பாரத்தை அவர் சுமப்பார்

ஒருவர், கனவு ஒன்று கண்டார். கடற்கரையோரம், கர்த்தராகிய இயேசுவோடு கைகோர்த்து நடந்து போவது அவர் கண்ட காட்சி. இப்படிப் போகும்போது, அவருக்கு முன்னிருந்து திறந்த ஆகாயத்தில், இயேசுவின் வாழ்க்கைக் காட்சிகள் ஒவ்வொன்றாக தென்பட்டது. ஒவ்வொரு காட்சியிலும், இரண்டு ஜோடி அடிச்சுவடுகளைக் காண முடிந்தது. அதில் ஒன்று தன்னுடையது, மற்றது கர்த்தருடையது என அவர் அறிந்து கொண்டார்.கடைசி காட்சியைக் காணும் வேளையில், அவர் திரும்பி பார்த்தார். அடிச்சுவடுகளை உற்று நோக்கினார். அதில், அநேக சமயங்களில் ஒரு ஜோடி அடிச்சுவடுகள் மாத்திரமே காணப்பட்டன. அதிலும் அப்படிப்பட்ட காலங்கள் தான், அவரது வாழ்க்கையில் மிகவும் சோர்ந்து, நம்பிக்கையற்ற நிலைகளில் காணப்பட்ட வேளையாக இருந்தது. இக்காட்சி அவரை அதிகமாகக் குழப்பியது. ஆண்டவரை நோக்கி, ''ஆண்டவரே!! நான் உம்மைப் பின்செல்வேன்'' என்று உம்மை என் உள்ளத்தில் அங்கீகரித்து என் புதுவாழ்வைத் தொடங்கின நாளிலே, நீர் என்னிடம், ''கடைசி வரை உன்னை கை விட மாட்டேன்' என்று சொன்னீரே! ஆகிலும், நான் எந்த சமயங்களிலெல்லாம் மிகுதியான கஷ்டம் வேதனைப்பாடுகள் சகித்துச் சோர்ந்து போனேனோ அவ்வேளைகளில் என்னைத் தனியாக விட்டு விட்டீரே!'' என்று புலம்பினார்.அதற்கு ஆண்டவர், ''மகனே! நான் உன்னை ஒருக்காலும் கைவிடுவதில்லை. நீ சோதனைகளையும், பாடுகளையும் அனுபவித்த காலங்களிலெல்லாம் நீ ஒரு ஜோடி அடிச்சுவடுகளை கண்டாயே ! அவை உன்னுடையவைகள் அல்ல. உன்னை அவ்வேளைகளிலெல்லாம் தூக்கிச் சுமந்து சென்றஎன்னுடைய பாதத்தின் அடிச்சுவடுகளே!'' என்றார்.ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்து கொண்டு போவது போல, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை இம்மட்டும் சுமந்து வந்திருக்கிறார். இனி வருகிற காலத்திலும், நம்மைச் சுமந்து கொள்ள போதுமான தெய்வமாக இருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் சுமந்து வந்தார். (உபாகமமம்1:31) என வேதம் கூறுகிறது. ''தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயது வரைக்கும்நான் அப்படிச் செய்வேன். நரை வயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன். நான் அப்படிச் செய்து வந்தேன். இனி மேலும் நான் ஏந்துவேன். நான் சுமப்பேன். தப்புவிப்பேன்'' (ஏசா.46:3,4) என்கிறது பைபிள்.