உழைப்பே நிரந்தரம்
பணக்காரத்தந்தை ஒருவர் தன் மகனுக்கு தங்கப் பொம்மையை பரிசளித்தார் ''மகனே! எதைத் தொலைத்தாலும், இதை தொலைத்து விடாதே. கஷ்டம் வரும்போது இது உனக்கு கைகொடுக்கும்'' என்றார். திடீரென தந்தை காலமானார். மகனும் தங்கப் பொம்மையை பாதுகாத்தான். ஒருநாள் பொம்மை இருக்கும் பெட்டியை பார்க்கும்போது அதில் பொம்மையை காணவில்லை. அந்த நினைப்பிலேயே அன்றாட வேலைகளை மறந்தான். ஒரு கட்டத்தில் பெரும் நஷ்டமாகி, பண்ணையை விற்க வேண்டிய நிலை வந்தது. ஒருநாள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கிராமத்துக்கு நடந்து சென்றான். அப்போது அங்கு இருந்த விவசாயக் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தான். அந்த வீட்டுப் பெரியவர் மகன்களிடம் பேசிக்கொண்டிருந்தார். ''பிள்ளைகளே! நீங்கள் இன்றிருக்கும் நிலம், பொருள் ஆகியவற்றை நம்பாதீர்கள். இவை ஏதோ ஒரு காரணத்தால், நம் கையை விட்டுப் போய்விடும் நாள் வரலாம். உழைப்பே என்றும் நிலையானது. அது என்றைக்கும் சோறு போடும். நாம் இந்த நிலத்திற்கு எஜமானர்கள் என்பதற்காகவும், செல்வம் இருக்கிறதே என்பதற்காகவும் வயலுக்குள் இறங்கி உழைக்க தயங்கக் கூடாது. ஒருவேளை இந்த செல்வம் நம்மை விட்டுப் போனாலும், உழைப்பு கைவிடாது'' என்றார்.அவர்களும் அப்படியே செய்வதாக வாக்களித்தனர். இதைக் கேட்ட செல்வந்தரின் மகன், தனது தந்தையும் இப்படி ஒரு அறிவுரையை சொல்லிஇருந்தால் பண்ணையை விற்றிருக்க மாட்டேனே என்று ஆதங்கப்பட்டான்.ஆம்...உழைப்பு மட்டுமே நிரந்தரச் சொத்து. மற்றவை அழியக்கூடியவை. இதை பின்பற்றி நாமும் முன்னேறுவோமே.