வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே!
முயல், காகம், மீன் ஆகிய மூன்றும் நண்பர்களாக இருந்தன. விலங்குகளுக்கு என பள்ளி ஒன்றை தொடங்கி, அதில் என்னென்ன கற்றுத் தரலாம் என பேசிக்கொண்டன. 'அனைவருக்கும் ஓடத்தெரிய வேண்டும்' என்று முயலும், 'பறப்பதை எல்லோரும் கற்றே தீரணும்' என்று காகமும், 'நீச்சல் இல்லாமல் ஒருவரும் இருக்க முடியாது' என்று மீனும் சொல்லியது. ஓடுதல், பறத்தல், நீச்சல் ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டன. ஓட்டத்தில் நல்ல மதிப்பெண் வாங்கிய முயல், மான், நரிகளால் பறக்க முடியவில்லை. காகம், கழுகு, குருவிகள் அபாரமாகப் பறந்தன. நீச்சலிலும் பரிசுகள் வாங்க ஆசைப்பட்ட இவை, அருகில் ஓடிய ஆற்றில் பாய்ந்தபோது மூச்சுவிட முடியாமல் தத்தளித்தது. தரைக்கு வந்த மீன்கள் உயிருக்குப் போராடின. இப்படி எல்லோராலும் அனைத்திலும் வெற்றி பெற முடியவில்லை. திறந்த அன்றே பள்ளி மூடப்பட்டது. இதன் மூலம் ஓடுவதுதான் தனது தனித்திறமை என்று முயல் புரிந்து கொண்டது. நீந்த ஆசைப்பட்டால் வாழ்க்கையே திண்டாட்டம்தான் என்று காகம் அறிந்து கொண்டது. நீச்சலே தன் உயிர்மூச்சு என்று மீன் உணர்ந்து கொண்டது. இப்படித்தான் பலரும் மீனாக இருந்து கொண்டு முயலாக மாற நினைக்கின்றனர். பக்கத்து வீட்டுக்காரர் கார் வாங்கினால் நமக்கும் வேண்டும். உறவினர் வெளிநாடு சென்றால், நாம் அங்கு போகமுடியவில்லையே என ஏங்குகின்றனர். இப்படி பல நபர்களுடன் நம்மை ஒப்பிடுகிறோம். இதனால் என்ன நடக்கிறது தெரியுமா. நம்மை விட எல்லோரும் திறமையானவர்கள் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. இந்த தாழ்வு மனப்பான்மையால் பிறர் வீட்டு விசேஷங்களுக்கு செல்வதை தவிர்க்கிறோம். இது தவறான விஷயம். உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிக்கும் ஒரு திறமை உண்டு. எனவே பிறரை பார்த்து பொறாமையோ, தாழ்வு மனப்பான்மையோ வேண்டாம். நீங்கள் நுாறு பேருக்கு கைதட்டினால், நீங்கள் ஜெயிக்கும்போது இருநுாறு கரவொலிகள் உங்களை வாழ்த்தும். இதை நடைமுறைபடுத்துங்கள். வாழ்க்கைக்கான அர்த்தம் புரியவரும்.