பலம் தருபவர் ஆண்டவரே!
ஒரு காட்டில் வசித்த யானையும், சுண்டெலியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. அவை காட்டாற்றின் நடுவில் இருந்த மரப்பாலத்தைக் கடந்து சென்றன. யானையின் கனம் தாங்காத பாலம் அதிர ஆரம்பித்தது. ஒரு வழியாக அவை அக்கரையை அடைந்தன.சுண்டெலி யானையிடம், ''யானை நண்பா! நான் மரப்பாலத்தைக் கடக்கும் போது என் வலிமையால் பாலத்தை அதிர வைத்தேன், கவனித்தாயா?'' என்றது. சுண்டெலியின் நினைப்பைப் பார்த்தீர்களா?இதே போலத்தான் நாம் ஆண்டவரோடு நடக்கும்போது, யானையின் பலமுள்ள அவரைப் பற்றி சிந்திக்காமல், சுண்டெலியைப் போல நம்மைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையின் கொடிய தொல்லைகளை ஆண்டவரோடு வெற்றிகரமாக கடந்து வந்தபின் ஆண்டவரைப்பார்த்து, ''பிரச்னையை நான் நடுங்க வைத்து விட்டேன், இல்லையா?'' என்று சொல்லுகிறோம். அவர் தமது கிருபையால், நம்மை தாங்கி நடத்தாதிருப்பாரானால், நம்முடைய பிரச்னையில் சிக்கி நாம் அழிந்து போயிருப்போம்.''ஆண்டவரே! நான் முற்றிலும் உம்முடைய பெலத்தில் சார்ந்து கொள்ளுகிறேன். நீரே என்னை நடத்தும்,'' என்று நம்மை ஒப்புவித்து விடுவோம். அவர் நம்மை நாம் நடக்க வேண்டிய வழியில் நடத்துவார். ''என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்கும் பெலனுண்டு'' (பிலி4:13) என்று சொல்லுவோம்.