உள்ளூர் செய்திகள்

பலவீனங்களை நேசியுங்கள்!

ஒருசெல்வந்தரின் வீட்டில் மிகப்பெரிய விருந்து நடக்க இருந்தது. அவரது வீட்டில் ஏராளமான பாத்திரங்கள் இருந்தன.அதில் ஒன்றான தங்கப்பாத்திரம் அவரை அழைத்து, ''நான் ஒளியாய் பிரகாசிக்கிறேன். என் மதிப்போ மிகப்பெரிது. என் அழகும், ஜொலிப்பும் மற்ற எல்லோரைக் காட்டிலும் மிஞ்சியது. உம்மைப்போன்ற எஜமானர்களின் கவுரவத்தை பொன் பாத்திரமாகிய நானே காப்பாற்றுவேன்,'' என்றது. அடுத்து வெள்ளிப் பாத்திரத்தை அவர் பார்த்தார். அது அவரிடம், ''நான் உம்மையே சேவிப்பேன். உமக்கும், உம் விருந்தினர்களுக்கும் திராட்சை ரசத்தை ஊற்றித் தருவேன். நீர் உண்ணும்போது என்னைப் பார்த்துப்பார்த்து பெருமைப்படலாம். என் மீது செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலை, எவ்வளவு அழகு என்பதை இங்கு வரும் எல்லாரும் புகழப்போகிறார்கள். நான் உமக்கு நிச்சயமாக பாராட்டுதலை பெற்றுத் தருவேன்,'' என்றது. அதையும் தாண்டிச் சென்றார் செல்வந்தர். இப்போது, வெண்கல பாத்திரம் அவரை மறித்தது. ''எஜமானே! நான் மஞ்சள் நிறமாக மிகுந்த பளபளப்புடன் அமர்ந்திருக்கிறேன். என்னைத் தட்டினால் ஓசை எழும். அது இனிய இசையாக இருக்கும். என்னையே இந்த விருந்திற்கு பயன்படுத்துங்கள்,'' என்று கேட்டது. அதற்கும் செல்வந்தர் பதில் சொல்லவில்லை. இதையடுத்து, பளிங்கு பாத்திரம், மர பாத்திரம் ஆகியவற்றையெல்லாம் செல்வந்தர் பார்த்தார். அவையும் தங்கள் சிறப்புகளை எடுத்துக்கூறின. ஆனால், எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு செல்வந்தர், களிமண் பாத்திரம் அருகில் வந்தார். அதை பரிவோடு பார்த்தார். அது ஏக்கத்துடன் அவரைப் பார்த்தது. எதுவும் பேசவில்லை. செல்வந்தர் அந்த பாத்திரத்தை எடுத்துச் சென்று மேஜையில் வைத்தார். ''உன்னைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன். உன்னை என் உபயோகத்திற்கு வைத்துக்கொள்வேன். பெருமை பாராட்டும் பாத்திரங்கள் எனக்குத் தேவையில்லை. அலமாரியில் அலங்காரமாக வைக்கவே அவை பயன்படும். உன்னையே விருந்துக்குப் பயன்படுத்துவேன்,'' என்றார்.''பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளை தெரிந்து கொண்டான். உள்ளவைகளை அவமாக்கும்படி உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்து கொண்டார்,'' என்று பைபிளில் ஒரு வசனம் வருகிறது. இதன் கருத்து என்னவென்றால், பலவீனர்களையும், பின்தங்கியவர்களையும், அற்பம் என நினைத்து ஒதுக்கப் படும் கல்வி அறிவில்லாதவர்களையும், ஏழைகளையும் நாம் நேசிக்க வேண்டும் என்பதே! சாதுவான குணம் கொண்ட பலவீனர்களை இனியேனும் உதாசீனப்படுத்தாதீர்கள்.