தியாகம் செய்யுங்கள்
இளைஞன் ஒருவன், வாங்கிய கடனைத் திருப்பித்தராத குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டான். அந்தச் சிறைக்கு ஒரு போதகர் வந்தார். ஒவ்வொருவரின் குறைகளையும் கேட்டறிந்தார். கொலைக்காக, கொள்ளைக்காக, பலாத்காரம் செய்ததற்காக...என பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் இருப்பதைத் தெரிந்து கொண்டார்.அவர்களுக்கு புத்திமதி சொல்லி நல்வாழ்வு வாழ கேட்டுக்கொண்டார். கடனுக்காக சிறையில் இருப்பவனைக் கண்டு அவரது உள்ளம் வருத்தப்பட்டது. 'பாவம்! என்ன காரணத்தாலோ இவனால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதற்காக, சிறையில் வாடுகிறானே' என்ற கவலையுடன் அவர் சிறை அதிகாரியிடம் சென்றார்.''ஐயா! இவன் செய்தது சாதாரண குற்றமே, இருப்பினும் பல ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளான். இவனுக்குப் பதிலாக நான் தண்டனையை அனுபவிக்கிறேன். குடும்பஸ்தனான இவனை விட்டு விடுங்கள். இதுவரை கடன் தொல்லையை அனுபவித்த அவனது குடும்பம், இப்போது இவனது வருமானமும் இல்லாமல் மேலும் தொல்லைகளை அனுபவிக்குமே!'' என்றார். உயரதிகாரிகளும் இதற்கு சம்மதிக்கவே, இளைஞன் விடுவிக்கப் பட்டான். சிறையில் இருந்ததால் அவரது உடல் நலிந்தது. நோய்வாய்ப்பட்டு பல சிரமங்களை அனுபவித்தார். அந்த சிறைக்கு மற்றொரு போதகர் வந்தார்.இளைஞனுக்காக சிறையில் வாடியவரிடம், ''நீங்கள் இப்படி செய்திருக்கலாமா?'' எனக் கேட்டார்.''இயேசுகிறிஸ்து உலக மக்களைக் காப்பாற்றவே, தன் இன்னுயிரைத் தந்தார். எனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் இன்னும் கிடைக்கவில்லை. இங்கென்ன அவரைப் போல சிலுவையிலா அறைந்திருக்கிறார்கள்! அவர் அனுபவித்த தண்டனையுடன் ஒப்பிடும் போது, இது சிறு உடல் துன்பம் தானே!'' என்றார்.வந்த போதகர் கண்கலங்கி விட்டார். மற்றவர்களுக்காக துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வோம்.