உன் வேலையை மட்டும் பார்!
இஸ்ரேல் நாட்டவர் மத்தியில், அவர்களின் பிதாவான ஆபிரகாம் பற்றி ஒரு கதை உண்டு. மம்ரே என்ற ஊரில் ஆபிரகாம் இருந்த போது, அந்த வழியே செல்பவர்களுக்கு உணவு கொடுத்து உபசரிப்பார். ஒருநாள், முதியவர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து உணவு கொடுத்தார். சாப்பிடும் முன் கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு சாப்பிடுவது ஆபிரகாமின் வழக்கம். விருந்தினரான முதியவரும் நன்றி சொல்ல வேண்டும் என ஆபிரகாம் எதிர்பார்த்தார். அவரோ நன்றி செலுத்தாமலே சாப்பிட ஆரம்பித்தார்.கோபம் கொண்ட ஆபிரகாம், '' கடவுளுக்கு நன்றி செலுத்தாமல் சாப்பிடலாமா?'' என்று கேட்டார்.முதியவரோ,''நீர் உணவு தந்தீர். நான் சாப்பிடுகிறேன். இதில் கடவுளுக்கு ஏன் நன்றி செலுத்த வேண்டும்?'' என்று கேட்டார்.கோபமடைந்த ஆபிரகாம் அவரைச் சாப்பிட விடாமல் விரட்டினார். அப்போது தேவன் ஆபிரகாமோடு பேசினார். ''அந்த மனிதர் எனக்கு ஒருநாள் கூட நன்றி சொல்லாவிட்டாலும், நான் பொறுமையுடன் 80 ஆண்டுகளாக அந்த மனிதருக்கு சாப்பாடு கொடுத்து காப்பாற்றி வருகிறேன். ஆனால், ஒரு வேளை சாப்பாடு கொடுத்த நீ, நன்றி சொல்லவில்லை என்ற காரணத்துக்காக பொறுமை இழந்து சாப்பிட விடாமல் விரட்டி விட்டாயே!'' என்று கடிந்து கொண்டார். உலகில் ஆபிரகாமைப் போல சிலரும், தேவனுக்கு நன்றி சொல்லாத மனிதரைப் போல பலரும் இருக்கிறார்கள். ஆனால், தேவன் எல்லாரையும் ஒன்றாகவே பார்க்கிறார். உணவில்லாமல், உடையில்லாமல் இருக்கிறவர்களைப் பார்த்தால் அவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதே நமக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை. அதை நாம் சரியாகச் செய்தால் போதும். ''ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற் போனால் அது அவனுக்குப் பாவமாயிருக்கும்'' (யாக்கோபு 4:17) என்கிறது பைபிள்.எனவே, நாம் பிறருக்கு நன்மை செய்கிற வேலையை மட்டும் பார்ப்போம். நம்மிடம் இருந்து பலன் பெறுகிறவர்கள், நமக்கு பிரதிபலன் செய்கிறவர்களாகவோ, நம்மைப் போலவே பிறருக்கும் உதவுபவர்களாகவோ இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அவர்களை கண்காணிப்பது ஆண்டவரின் வேலை, நமது வேலை அல்ல என்பதை உணர்வோம்.