வெற்றி தரும் ஜெபம்!
''அதிலும் எல்லா ஜெபிக்கிறவர்களையும் அல்ல, முத்திரை பெறுகிற வண்ணம் ஜெபித்தவர்களையே அவர்கள் சங்கரிக்காமல் விலகினார்கள்'' என்று பைபிளில் ஒரு வசனம்.ஒரு ஆயக்காரனும், பரிசேயனும் ஜெபித்ததை அறிவீர்கள். ஆயக்காரன் தாழ்மையுடன் ஜெபித்தான். பரிசேயனோ தன் சுயநீதியை முன்னிறுத்தி ஜெபித்தான். நடந்தது என்ன? ஆயக்காரனின் ஜெபம் கர்த்தரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பரிசேயனுடைய ஜெபமோ தள்ளப்பட்டது. ஆனால், இதில் வேடிக்கை என்ன தெரியுமா? ஆயக்காரனுக்கு தன் ஜெபம் கேட்கப்பட்டதும் தெரியாது. பரிசேயனுக்கு தன் ஜெபம் தள்ளப்பட்டதும் தெரியாது. இருந்தாலும், அவன் வழக்கப்படி ஜெபித்துக் கொண்டேயிருந்தான்.இன்றைக்கு நம்மில் அநேகர் ஜெபத்தின் வல்லமையை அறியாமல், கடமைக்காக ஜெபித்து கடந்து போய் விடுகிறோம். தேவனுக்குள் ஜீவிக்காதவர்கள், இனி மேலும் அவரை விட்டு வெளியே இருப்பது அபாயகரமானது. சங்காரத் தூதன் வருவதற்கு முன் தேவனுடைய ஜனங்களை முத்திரையிட்டு பத்திரப்படுத்தும் தூதர்கள் புறப்படுகின்றனர் . இனிமேல் தான் நீங்கள் ஜெபத்தில் நிலைத்திருக்க வேண்டும். அப்படி நிலைத்திருப்பீர்களேயானால், உங்களுடைய வாழ்க்கை ஜெயமான வாழ்க்கையாகும். - ஜான்.டி. சுந்தர்