துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க!
துன்பம் வரும்போது சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்பது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், பக்தி உள்ளவர்கள் இது பற்றி கவலைப்படுவது இல்லை. ஒரு பணக்காரர் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி காயமடைந்தார். அவர் பல தர்மங்களை செய்தவர். இருந்தாலும், தனக்கு இப்படி ஒரு வேதனை ஏன் ஏற்பட்டது என வருந்தவில்லை.ஏன் தெரியுமா? ''என் ரட்சகர் இயேசு பட்ட பாடுகளை விட, வேதனைகளை விட எனக்கு ஏற்பட்டுள்ள வேதனை அப்படி ஒன்றும் அதிகமானது அல்ல'' என்று தன்னை பார்க்க வருபவர்களிடம் சொன்னார். இயேசுவும் மக்களுக்கு நன்மையையே செய்தார். நல்லதையே போதித்தார். ஆனாலும், அவர் சோதனைகளைத் தானே அனுபவித்தார்! ஆண்டவரின் குமாரனுக்கே அப்படி ஒரு நிலை என்னும் போது, சாதாரணமானவனான தனக்கு விபத்து ஏற்பட்டது ஒன்றும் பெரிதல்ல என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டார்.அதனால் அவருக்கு தேவனின் ஆசிர்வாதம் கிடைத்து விரைவில் குணமடைந்தார்.வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அந்த வேளையில் கர்த்தரை துணைக்கு அழைத்தால் அவர் ஆசிர்வதிப்பார்.