உள்ளூர் செய்திகள்

நாளை நமதே... இன்றும் நமதே!

ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது, ''மாணவர்களே... நாம் எவ்வளவு காலம் இந்த பூமியில் வாழ்வோம்'' என்று கேட்டார். ஒவ்வொரு மாணவரும் பதிலை சொல்ல, ஆசிரியர் இல்லை என தெரிவித்தார். 'நாம் செல்வது ஒன்றுகூட சரியில்லையா' என திகைத்தனர். அங்கே சில நிமிடம் அமைதி சூழ்ந்தது. மாணவர்களை பார்த்து சிரித்த ஆசிரியர், ''நமது வாழ்க்கை என்பது மூச்சிருக்கும் வரை'' என்றார் முத்தாய்ப்பாக. ''வாழ்க்கை என்பது வெறும் மூச்சுவிடும் நேரம்தானா'' என்று மாணவன் ஒருவன் கேட்க, ''அப்படியல்ல. ஒவ்வொரு நிமிடமும் முழுமையாக வாழ வேண்டும்'' என்றார். இதைக்கேட்டவர்கள் விழித்தனர். இதை நோட்டமிட்டவர், ''நம்மில் சிலர் நேற்றில் வாழ்கிறார்கள். அதாவது நேற்றைய நினைவுகளில் மூழ்கி இறந்த காலத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கை என்பது என்றும் 'மலரும் நினைவுகள்'தான். இன்னும் சிலர் அறியப்படாத எதிர்கால ஏக்கத்திலேயே வாழ்கிறார்கள். எனவே இவர்கள் அனைவரும் நிகழ்காலத்தை இழக்கிறார்கள். நம் கைவசம் உள்ளது நிகழ்காலம் மட்டுமே. இதை சரியாக பயன்படுத்தினாலே போதும் நீங்கள் வெற்றி பெற்ற மனிதராகிவிடலாம்'' என்றார். இனி எதற்காகவும் நாளை என்று நாளை தள்ளிப்போடாமல், இன்றைய நாளை பயன்படுத்துவோமே!