உள்ளூர் செய்திகள்

நிஜமான மகிழ்ச்சி எது

அந்த இரு நண்பர்களும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அங்கு லஞ்ச லாவண்யம் அதிகம். ஒரு நண்பர் ஏராளமாக லஞ்சம் வாங்குவார். இஷ்டம்போல் செலவு செய்வார். மனைவி, மக்களுக்கும் கொடுப்பார். அவர்களும் செலவழித்து மகிழ்ந்தார்கள். ஆனாலும் என்றாவது மாட்டிக்கொள்வோமோ என்ற பயமும் அவரை ஆக்கிரமித்திருந்தது. இந்த சூழ்நிலையில் தனது நண்பரின் நடவடிக்கைகளை அவர் கவனித்தார். நண்பரோ ஒரு காசு கூட யாரிடமும் கைநீட்டி வாங்க மாட்டார். அவரது முகம் எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும். எதற்காகவும் கவலைப்பட மாட்டார்.அவர் லஞ்சம் வாங்கும் தன் நண்பரிடம், 'நண்பனே! லஞ்சம் வாங்குவதிலும், அதை செலவழிப்பதிலும் நிச்சயமாக மகிழ்ச்சி உண்டாகாது. எந்த நேரமும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டுமானால், ஆண்டவனின் நினைவு வேண்டும். அவரது நினைவு இருந்தால் அவர் நம்மை ஆனந்தம் என்னும் தைலத்தால் அபிஷேகம் பண்ணுவார். பணத்தாலோ, சினிமாவாலோ, கெட்ட நண்பர்களாலோ, கூத்தினாலோ, குடியினாலோ வரும் சந்தோஷம் தற்காலிகமானது. ஒழுக்கமான வாழ்க்கை நடத்துபவன், தேவாதிதேவனைப் போல சந்தோஷமாக இருக்கிறான். எனவே, இனியாவது லஞ்சம் வாங்காதே! உன் மனம் அமைதியடையும். பேரின்ப நதி உனது தாகத்தை தீர்க்கும். நியாயமான வாழ்க்கையில் இருக்கும் ஆனந்தத்தை யாராலும் உன்னிடமிருந்து பறிக்க முடியாது,'' என்றார் நண்பர்.அந்த நண்பர் இந்த அறிவுரையை ஏற்றாரா என்பது நமக்கு தெரியாது. ஆனால் லஞ்சம் வாங்கும் ஒவ்வொருவரும் இதை ஏற்கலாமே!