உள்ளூர் செய்திகள்

தவறு செய்தவர்களையும் திருத்தலாமே !

ரஷ்யாவில் உள்ள பழத்தோட்டம் ஒன்றில் ஒருவர் தோட்டக்காரராக பணிபுரிந்தார். அவர் அயர்ந்த சமயம் பார்த்து, பின்னால் இருந்த வேலி  வழியாக உள்ளே நுழைந்த ஒரு சிறுவன், அங்கிருந்த ஆப்பிள் பழங்களைப் பறித்து சாப்பிட ஆரம்பித்தான்.  சிலவற்றை ஒரு பையில் எடுத்துக்கொண்டு மீண்டும் வேலி ஏறி குதிக்கப்போகும் நேரத்தில், தோட்டக் காரர் அவனைப் பிடித்து விட்டார்.இவர் உறங்கிக்கொண்டிருந்தாரே...எப்படி எழுந்து வந்தார் என சிறுவனுக்கு ஒரே குழப்பம். அத்துடன் மாட்டிக்கொண்டோமே, மரத்தில் கட்டி வைத்து தோலை உறித்து  விடுவாரே என்று பயம்..அவர் அவன் கையில் இருந்த பையை வாங்கினார். அவன் நடுங்கியபடியே கொடுத்தான். ஆனால், என்ன ஆச்சரியம். பழங்களைக் கொட்டிக் கொண்டு, தன்னையும் நையப்புடைத்து வெளியே தள்ளுவார் என எதிர்பார்த்திருந்தவன் ஆச்சரியப்படும் வகையில், இன்னும் சில பழங்களை பையில் போட்டார்.''தம்பி! பழம் வேண்டுமானால் நேர்வழியில் வந்து என்னிடமே கேட்டிருக்கலாமே! பரவாயில்லை, நாளை உன் நண்பர்களையும் அழைத்து வா, அவர்களுக்கும் தருகிறேன்,'' என்றார். பையன் அவரை பயம் கலந்த நன்றிப் பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டான். மறுநாள் நண்பர்களுடன் அங்கு வந்தான். தோட்டக்காரர் அவர்களுக்கு பழங்கள் கொடுத்து, இயேசு கிறிஸ்துவின்  வரலாற்றைச் சொன்னார். அநேக சிறுவர்கள் அவர் கல்வாரியில் பட்ட கொடுமைகளைக் கேட்டு அழுதனர். அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். அந்த இடத்தில் தினமும் கூடி ஜெபம் செய்தனர். இவ்வாறு பிரசங்கம் செய்வது ரஷ்யாவில் சட்டவிரோதமான செயல். அதிகாரிகள் தோட்டத்தில் நடந்த பிரசங்கத்தை அறிந்து, தோட்டக்காரரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் ஆச்சரியம்! சிறையில் அவரைக் காணவில்லை. தோட்டத்தில் வந்து பார்த்தனர். அங்கே அவர் இருந்தார்.  அதிகாரிகள் அவரை நெருங்கவே அவர் மறைந்து விட்டார். அவரை இறுதிவரை கைது செய்ய முடியவே இல்லை. அவர் ஒரு தேவதூதர் என்பதை அவர்கள் அறிந்திராமல் அவ்வாறு செய்தனர். ''அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள். அதனாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு,'' (எபி.13:2)  என்கிறது பைபிள்.* நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன். உங்களிடத்தில் வருவேன்.* என்னிடத்தில் வருகிறவன் ஒருநாளும் பசியடையான். ஜீவஅப்பம் நானே!* நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்.- இயேசுநாதர்