உள்ளூர் செய்திகள்

திருட்டுப் பொருளை மீட்க மிளகாய்ப் பொடி அபிஷேகம் - திருத்தல உலா

அம்பாளுடன் கூடிய சக்தி  தட்சிணாமூர்த்தியை திருவள்ளூர் மாவட்டம் கண்டலத்திலுள்ள சிவாநந்தீஸ்வரர் கோயிலில் தரிசிக்கலாம். திருட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்க, இங்குள்ள பைரவருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்கின்றனர்.தல வரலாறு: கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது, வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. பூமியைச் சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார் சிவன். திருப்பாலைவனம் என்ற தலத்துக்கு வந்த அகத்தியரிடம், கண்டலம் என்னும் தலத்துக்கு செல்லும்படி சிவன் அறிவுறுத்தினார். அகத்தியர் இத்தலம் வந்து சுவாமியை வழிபட்டார். சிவன், அம்பாளுடன் திருமணக்காட்சி காட்டியருளினார். தனக்கு காட்சி தந்தது போலவே இத்தலத்தில் இருந்து அனைவருக்கும் அருளவேண்டும் என வேண்டினார். சிவனும் இங்கு சுயம்புவாக எழுந்தருளி "சிவாநந்தீஸ்வரர்' என்ற பெயரும் பெற்றார்.சக்தி தட்சிணாமூர்த்தி: பிருகு முனிவர் சிவனை வணங்கும் பழக்கம் உடையவர். ஒருசமயம் சிவனைப் பார்க்க வந்த அவர், பார்வதியை வணங்காமல் சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார். தன்னை வணங்காமல், தன் கணவரை மட்டும் வணங்கிய பிருகுவிடம் பார்வதி கோபம் கொண்டாள். பிருகு தன்னையும் சேர்த்து வணங்க வேண்டும் என நினைத்த அவள் சிவனை ஒட்டி அமர்ந்தாள். உடனே, பிருகு வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றினார். சிவமும், சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன், தன் இடப்பாகத்தில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அப்போதும் பிருகு முனிவருக்கு சக்தியை வணங்கும் எண்ணமில்லை. கள்ளி மலர்களால் சுவாமி பகுதியை மட்டும் அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்போது சிவன், சக்தியை மடியில் வைத்து, தட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து, ""சக்தியின்றி சிவமில்லை'' என்று உபதேசித்தார். பிருகுவும் உண்மையை உணர்ந்து இருவரையும் வழிபட்டார். இந்த "சக்தி தட்சிணாமூர்த்தி' தனி சன்னதியில் இருக்கிறார். இடது கைகளில் அமுத கலசமும், ஏடும் ஏந்தி அம்பாளை அணைத்தபடி காட்சி தருகிறார். அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார்.ஆனந்தவல்லி அம்பாள்: சக்தியின் பெருமையை உணர்ந்த பிருகு முனிவர், அம்பாளிடம் தன் செயலை மன்னிக்கும்படி வேண்டினார். இதனால் அம்பாள் மனதில் ஆனந்தம் கொண்டாள். எனவே அவளுக்கு "ஆனந்தவல்லி' என்ற பெயர் ஏற்பட்டது. சிறப்பம்சம்: இக்கோயில் குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. பிருகு முனிவர் கள்ளி மலர்களால் பூஜித்த சிவன் என்பதால் சுவாமிக்கு "திருக்கள்ளீஸ்வரர்' என்ற பெயரும், தலத்திற்கு "திருக்கள்ளில்' என்ற புராணப்பெயரும் இருக்கிறது. சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் பாலசுப்பிரமணியர் சன்னதி உள்ளதால், இது சோமாஸ்கந்த வடிவ கோயிலாக உள்ளது. பாலசுப்பிரமணியரின் கைகளில் ஜெபமாலை, தீர்த்தக் கலசம் ஆகியவை உள்ளதால், பிரம்மாவின் அம்சமாக காட்சியளிக்கிறார். இவரை வணங்கினால் நம் தீவினைகளை மாற்றி நல்லருள் புரிவார் என்பது ஐதீகம்.இங்குள்ள நந்தி மிகவும் விசேஷமானது. இவரது பெயரிலேயே சிவனை "சிவா நந்தீஸ்வரர்' என்றும், தீர்த்தத்தை "நந்தி தீர்த்தம்' என்றும் அழைக்கின்றனர். பிரகாரத்தில் சுந்தர விநாயகர், காளத்தீஸ்வரர், ஆஞ்சநேயர், நாகர், நவக்கிரகங்கள், பைரவர் உள்ளனர். பொருள்களை திருட்டு கொடுத்தவர்கள் பைரவருக்கு மிளகாய்ப்பொடி அபிஷேகம் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால், திருடியவர்களுக்கு துன்பம் ஏற்படும் என்றும், அவர்கள் சட்டத்திடம் சிக்கிக்கொள்வர் என்பதும் நம்பிக்கை. பொருள்கள் கிடைத்துவிட்டால் இவருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.இருப்பிடம்:சென்னை- பெரிய பாளையம் ரோட்டில் (36 கி.மீ.,) கன்னிகைப்பேர் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 4 கி.மீ., ஆட்டோவில் சென்றால் கோயிலை அடையலாம். திருவள்ளூரில் இருந்து பெரியபாளையம் சென்று அங்கிருந்தும் கன்னிகைப்பேர் வழியே கோயிலுக்குச் செல்லலாம். போன்: 99412 22814, 044 - 2762 9144.