கேளுங்க சொல்கிறோம்
ப.தங்கவேலு, மறைமலைநகர், செங்கல்பட்டு. *புதுவீட்டில் குடியேறும் முன் என்ன செய்ய வேண்டும்?வாஸ்து சாந்தி, கோபூஜை, நிலைபூஜை, கணபதி ஹோமம் நடத்திய பின் குடியேறுங்கள். டி.பவித்ரா, செஞ்சி, விழுப்புரம்.*நதிகளின் பெயரைச் சொன்னால் புண்ணியமா...ஆம். நீராடும் போது இந்த ஸ்லோகம் சொன்னால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும். கங்கேச யமுனே சைவகோதாவரி சரஸ்வதீநர்மதே சிந்து காவேரீஜலேஸ்மின் சன்னிதிம் குருகங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி நதி தெய்வங்களே! நான் குளிக்கப் போகும் இந்த தண்ணீரில் எழுந்தருளுங்கள் என்பது பொருள். சி.கோதண்டராமன், டில்லி.*தீர்க்காயுசு என்பது எத்தனை ஆண்டுகளைக் குறிக்கும்?'தீர்க்க' என்பதற்கு நீண்ட என்று பொருள். நுாறு ஆண்டுகளை இது குறிக்கும். எஸ்.லட்சுமி, கழுகுமலை, துாத்துக்குடி. *சிவ நாமத்தை தினமும் எத்தனை முறை சொல்லலாம்?“நான் மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே” என்கிறது தேவார பதிகம். எண்ணிக்கையில் கவனம் வேண்டாம். எந்த நேரத்திலும் சொல்லுங்கள். கே.ராகவன், சித்துராஜபுரம், சிவகாசி.*பிறந்த நாள், அஷ்டமி, நவமியன்று முடி காணிக்கை செலுத்தலாமா?பிறந்த நாளன்று முடி காணிக்கை செலுத்தலாம். அஷ்டமி, நவமியைத் தவிர்ப்பது நல்லது. அ.ரவீந்திரன், மணிகெட்டிபொட்டல், கன்னியாகுமரி. *விரத நாட்களில் பரமபதம், தாயம் விளையாடலாமா?வைகுண்ட ஏகாதசியன்று பரமபதம் விளையாடுவது வழக்கம். ஆனால் தாயம் விளையாடுவதில்லை. மற்ற விரத நாட்களில் ராமாயணம், சிவபுராணம் போன்றவற்றை படிப்பது, பாடுவது நல்லது. வி.சங்கர், கன்னிவாடி, திண்டுக்கல்.*குழந்தைப்பேறுக்கு யாரை வழிபடலாம்?சந்தான கோபாலர் (கிருஷ்ணர்) வழிபாடு செய்யுங்கள். சில கோயில்களில் பக்தர்களின் மடியில் கிருஷ்ணரை படுக்க வைத்து பிரசாதம் கொடுப்பது கூட உண்டு.எஸ்.பத்மநாபன், உடுமலைபேட்டை.*பெண்கள் தனியாளாக அங்கப்பிரதட்சணம் செய்யலாமா?வேண்டாம். ஒருவரை உதவிக்கு வைத்து கொள்வது நல்லது.எல்.மைதிலி, மைசூரு.*தேங்காயில் மூன்று கண்கள் இருப்பதன் தத்துவம் என்ன?முக்கண்ணன் சிவன் என்பதை உணர்த்த இயற்கையாகவே தேங்காயில் மூன்று கண்கள் உள்ளன. இதனாலேயே பூஜையில் தேங்காய்க்கு முதலிடம் தரப்படுகிறது.கே.கவிதா, திருத்தணி, திருவள்ளூர்.*நல்ல செயல் தடைபட்டால் என்ன செய்யலாம்?தேங்காயை சிதறுகாயாக உடைத்து விநாயகரை வழிபடுங்கள். தடைகள் பறந்தோடும்.