அள்ளித் தரும் ஆயிரம்
எண்ணம், சொல், செயல்களால் மக்கள் நாளுக்கு நாள் பாவத்தில் சிக்கித் தவிக்கிறார்களே என குறுமுனிவர் அகத்தியர் வருத்தப்பட்டார். இதைப் போக்கி மக்களைக் காப்பாற்ற வேண்டும் என புண்ணிய தலமான காஞ்சிபுரத்தில் தவத்தில் ஆழ்ந்தார். அவரது நோக்கத்தை அறிந்த காக்கும் கடவுளான திருமால் அவருக்கு அருள்புரிய பூலோகம் வந்தார். ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவ மூர்த்தியாக (குதிரைமுகம் கொண்டவர்) குருநாதரைப் போல காட்சியளித்தார். பாவம் நீங்குவதோடு புண்ணியத்தை பெருக்கும் வழிகளை உபதேசிக்கும்படி அகத்தியர் அவரிடம் வேண்டிக் கொண்டார். ஆதிசக்தியான லலிதாம்பிகையின் திருவடியைச் சிந்தித்தால் பாவம் நீங்கும். புண்ணியம் பெருகும் என்றார் ஹயக்ரீவர்.பிரமாண்ட புராணத்தில் 'லலிதோபாக்கியானம்' என்னும் பெயரில் இந்த வரலாறு இடம் பெற்றுள்ளது. அதில் ஹயக்ரீவர் உபதேசம் செய்ததாவது: பரம்பொருளான சிவபெருமானுடன் இணைந்து பிரபஞ்ச நாடகத்தை ஆடிக் களிக்கிறாள் லலிதாம்பிகை. எல்லா உயிர்களுக்கும் வேண்டிய வரங்களைத் தந்து காப்பவள் அவளே. அம்பிகையைப் போற்றும் விதமாக ஆயிரம் திருநாமங்கள் உள்ளன. அஷ்ட வாக்தேவியரான வாசினி, காமேச்வரி, அருணா, விமலா, ஜயினி, மோதினி, சர்வேச்வரி, கௌலினி ஆகியோரால் லலிதாம்பிகையின் உத்தரவுப்படி அந்த திருநாமங்கள் உருவாக்கப்பட்டன. அந்த ஆயிரம் பெயர்களையும் ஹயக்ரீவ மூர்த்தி கருணையுடன் அகத்தியருக்கு உபதேசம் செய்தார். அந்த பெயர்கள் அகத்தியரின் மூலமாக 'லலிதா சகஸ்ரநாமம்' என்னும் பெயரில் பூலோக மக்களிடம் பரவியது.பண்டாசுரனின் கொடுமை தாங்காத தேவர்கள் இந்த லலிதா சகஸ்ர நாமத்தைச் சொல்லி யாகம் செய்ய யாகத்தீயில் இருந்து லலிதாம்பிகை அவதாரம் செய்தாள். லலிதாம்பிகையின் ஈடு இணையற்ற அழகையும், அவளின் இருப்பிடமான ஸ்ரீபுரத்தின் அமைப்பு, சிறப்புகளை விவரிக்கிறது. பண்டாசுரனை வதம் செய்த வரலாறை வர்ணிக்கிறது. அனுபூதிமான்கள் மட்டுமே அறிந்த லலிதாம்பிகையின் நிர்க்குண வடிவை எடுத்துச் சொல்லும் பகுதி சிறப்பானது. சிவம், பராசக்தியின் ஐக்கிய வடிவமாகவும், மகாவிஷ்ணுவின் அம்சமாகவும் லலிதாம்பிகை திகழ்கிறாள். லலிதாம்பிகையின் ஆயிரம் திருநாமங்களை சொல்வோருக்கு என்ன கிடைக்கும் எனக் கேட்டால், என்னதான் கிடைக்காது; எல்லாமே கிடைக்கும் என்பதே பதிலாக இருக்கும். தன்னம்பிக்கை, செல்வம், நல்ல குடும்பம், மன அமைதி, நிம்மதி, ஆன்மிக முன்னேற்றம், மோட்சம் அளிக்கவல்லது இது. லலிதா சகஸ்ர நாமத்தைச் சொல்லி வழிபாடு செய்ய பல பிறவிகளில் ஒரு மனிதன் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார் ஹயக்ரீவர். இத்தனை சிறப்பு மிக்க லலிதாசகஸ்ர நாமத்தை நவராத்திரியின் போது சொன்னால் வரங்களை அள்ளித் தருவாள் அம்பிகை.