ஆண்டாளும் அற்புதங்களும் - 12
கோதை கண்ணனிடம் கேட்ட பறைகோதை, திருப்பாவை 30 பாசுரங்களில் பறை என்ற சொல்லை மட்டும் பத்து முறை பயன்படுத்தியிருக்கிறாள். பறை என்ற சொல் இரு வேறு அர்த்தங்களை தாங்கி நிற்கிறது. முதல் பறை ஒரு இசைக் கருவி. இது வேளாண் மக்களின் இசைக் கருவி. இந்தப் பறை பாவை நோன்பின் போது சிறுமியரால் கொட்டப்படுவது. பாவை நோன்பு இருக்க வேண்டி மற்ற சிறுமியரை அழைக்கும் ஆண்டாள் பறை கொட்டி இருக்கிறாள். சரி, இது எப்படிப்பட்ட பறை? ஐந்திணைக்குரிய பறைகள் ஒருபுறமிருக்க வேறு சிலவும் அந்த நாளிலிருந்து இருந்திருக்கின்றன. புறநானுாறில் 12விதமான பறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அரிப்பறை, அந்தன்பறை, ஆகுளிப்பறை, சிறுபறை, சல்லிப்பறை, சாக்காட்டுப்பறை, செருப்பறை, போர்ப்பறை, நெய்தல்பறை, தடாரிப்பறை, ஒரு கண்பறை, மணப்பறை என புறநானுாறில் பேசப்படும் இந்த பறைகளில் ஆகுளிபறையும் சிறுபறையும் மென்மையாகவும் பாடலுக்கு இசைத்தும் கொட்டப்படுவது ஆகும். கடவுளைக் குறித்து விடிவதற்கு முன்பே கொட்டப்படுவதால் கோதையும் அவள் தோழிகளும் சேர்ந்து கொட்டிய பறை சிறுபறை அல்லது ஆகுளிப் பறை எனக் கொள்ளலாம். இப்படி ஆண்டாள் கொட்டப் படுவதாக சொல்லப்படும் பறை மாலே மணிவண்ணா எனத் தொடங்கும் 2௬ம் பாசுரத்தில் சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே என்பதாக வருகிறது. மாலே மணிவண்ணா எனத் தொடங்கும் பாடல் வைகுண்ட ஏகாதசி அன்று பாடப்பட்டு இருக்கலாம் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அன்று எம்பெருமான் வீதிவலம் வரும் ஊர்வலத்தில் கொட்டப்படும் சல்லிப்பறையை சாலப்பெரும்பறை என்கிறாள்.ஆம்! இந்த பறை என்ற சொல்லுக்கு இருவேறு பொருள்கள் உண்டு. எப்படி நுால் என்ற சொல்லுக்கு புத்தகம் என்றும், தைக்கும் நுால் என்றும் இரு பொருள் உண்டோ அதுபோல பறை என்ற சொல் கொட்டும் பறையையும், கடவுள் தந்தருளும் மோட்சம் என்பதாகவும் பொருள் தரும். அப்படி அவன் தரும் மோட்சம் தான் என்ன? முதல் பாசுரமான மார்கழித்திங்களிலேயே அழகாக குறிப்பிட்டிருக்கிறாள்! நாராயணனே நமக்கே பறை தருவான் என்று. அதாவது நாராயணன் தருவான் எனச் சொல்லும் பறை என்பது தோல் கருவி போலான தட்டும் பறை அல்ல. அவள் பெற வேண்டும் என்று கேட்கும் அந்த பறை எப்படிப்பட்டது என்பது மீதமிருக்கும் ஒன்பது இடங்களில் அவள் சொல்லும் பறையை இணைத்து தொடர்புபடுத்திப் பார்த்தால் நமக்கு விளங்குகிறது. அன்று கண்ணன் அர்ஜுனனுக்கு பறை என்னும் உரை தந்தான். அர்ஜுனனைப் போல நாமும் அவனை அடைவோம். நமக்கும் அந்த உரை தந்து உறுதி அளிப்பான் என்று பொருள்பட சொல்கிறாள். அடுத்த பறை 8 ஆம் பாசுரத்தில் இடம்பெறுகிறது. பாவை எழுந்திராய் பாடிப் பறைகொண்டு என்னும் வரிகளில் கண்ணன் கொடுத்த உரை என்னும் பறையை நம்பி, அவனிடம் சென்று நாம் வணங்கி இது நீ கொடுத்த உறுதி தானே எங்களையும் ஏற்றுக்கொள் என்று சொன்னால், கொஞ்சம் யோசித்து சொல்கிறேன் என்பான். இதே ராமனாக இருந்தால் கேட்பதை வாரி வழங்குவான். இவனோ கண்ணன். போக்குக் காட்டுவதில் வல்லவன். அதனால் விரைந்து போவோம் என கோதை இந்த பாசுரத்தில் பறை என்னும் சொல்லை இப்படி கையாண்டுள்ளாள்.மூன்றாவதாக 10ம் பாசுரத்தில் போற்றப் பறைதரும் புண்ணியன் என்கிறாள். கண்ணன்தான் வித்தைக்காரன் ஆயிற்றே. அவனை விடாது தொடர்ந்து போற்றிப் பாடுவோம். நமக்கும் உறுதி கொடுத்து விடுவான் என்கிறாள். அர்ஜுனன் கூட இப்படித்தான் அவனை விடாது இருந்தான். அவனுக்கு உறுதி கொடுத்து இருக்கிறானே என்கிறாள். அடுத்தது மாயன் மணிவண்ணன் நென்னேலே வாய் நேர்ந்தான் என்னும் 16ம் பாசுர வரிகளில் அறை பறை என்னும் இணைப்பு வருகிறது. ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை பகிரங்கமாக சொல்லுவது அறை பறை என்பர். எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் அடை. நான் பாவங்களிலிருந்து உன்னை விடுதலை செய்கிறேன் என கண்ணன் கூறுவது தான் அந்த அறை பறை. அட, ஊரறிந்த சேதியாச்சே! இதையா அவள் பரமரகசியம் என்கிறாள் எனப் பார்த்தால் அந்த காலத்தில் மக்கள் இதை கடுமையான ஆன்மிக பயண பாதையில் தான் அறிந்து கொண்டார்கள். எனவே இது ரகசியம் எனப்பட்டது. சரி, நாம் அடுத்த பறை பயன்பாட்டுக்கு வருவோம். இது 25ம் பாசுரத்தில் இடம்பெறுகிறது. 'நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருகியாகில்' என்ற வரியில் அன்றைக்கு உன்னை கொண்டாடிய அர்ச்சுனனுக்கு தந்தாயே ஒரு உறுதிமொழி. அதைப்போல நாங்களும் உன்னை கொண்டாடிக் கேட்கிறோம். அந்த உறுதிமொழியை எங்களுக்கும் கொடுத்துவிடேன் என்பதாக. அடுத்து 27ம் பாசுரத்தில் உன்னைப் பாடிப் பறை கொண்டு என பயன்படுத்தியிருக்கிறார். இங்கே அந்தப் பறை என்னும் உரையான உறுதிமொழி கிடைத்தபின் நமக்கு வரக்கூடிய பலன் கூறப்படுகிறது. கோவிந்தா உன்னை பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் எதுவென்றால் கூடி இருந்து குளிர்ந்து இருத்தல் என்று முடிக்கிறாள். அன்று போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உரை தந்தபின் அவனை விட்டு நீங்காமல் சாரதியாக இருந்து அவன் மனதை ஓட்டுபவனாகவும் இருந்தாயே. அதைப்போன்ற கூடியிருக்கும் தன்மையைத்தான் நான் பரிசாக கேட்பது என்று இங்கு கூறுகிறாள். 28ம் பாசுரத்தில் அன்பினால் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே, இறைவா நீ தாராய் பறை என்கிறாள். உன்னை எப்படி எல்லாமோ சிறுமைப்படுத்தி பேசியுள்ளோம். அதை பொருட்படுத்தாமல் பறை என்னும் உறுதிமொழியை தா என்கிறாள். பலர் இப்படித்தானே! ''என் கஷ்டத்தை தீர்க்காத நீ எல்லாம் கடவுளா?” கல் தான் என்று. அதற்கெல்லாம் எங்கள் மீது கோபம் கொண்டு தராமல் இருந்து விடாதே. பறை என்னும் உறுதிமொழியை நிச்சயம் தர வேண்டும் என இங்கு வேண்டுகிறாள். இத்துடன் விடுகிறாளா? அந்த பறை என்னும் வார்த்தையை பற்றிக்கொண்டு தொடர்ந்து வர்ணஜாலம் புரிகிறாள். 29ம் பாசுரத்தில் இற்றைப் பறை கொள்வான் என்கிறாள். ஏதோ இன்றைக்கு மட்டும் நீ பறை கொடுத்தால் போதும் என எண்ணி விடாதே. என்றென்றும் ஏழேழு பிறவிக்கும் எங்களை ஆட்கொள்ள வேண்டும் என்கிறாள். அங்கப்பறை கொண்ட ஆற்றை என வரும் 30ம் பாசுரத்தில் அனைத்து பறைகளுக்கும் பலன் கூறுவது போல் அமைந்துள்ளன. அங்கு அன்று அப்பறை கொண்ட விதத்தை பெரியாழ்வார் மகளான ஆண்டாள் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டு எம்பெருமானின் அடிபணிபவர்கள், என்றும் அவனது திருவருள் பெற்று இனிதுடன் வாழ்வர் எனத் திருப்பாவை முடிகிறது. அவன் கொடுக்கும் பறையால் நமக்கு என்ன பயன் என்றால் எமபயம் வராது, பாவங்கள் தீண்டாது, தீவினை சேராது, இறப்பையும் வெல்லும் ஆற்றல் கிடைக்கும் என்பதாகும். அந்தப் பரம்பொருள் தரும் பறையை வேதமும் ஆழ்வார்களும் பலவிதமாகச் சொன்னாலும் கோதை தன் எளிய மொழியால் பறை என்னும் ஒரு சொல்லில் புதையலை கொடுத்திருக்கிறாள்.பறை கொட்டி, பறை கேட்டு இந்த மாதவனை பணிந்தாலே போதும். அதாவது அவள் சொன்ன இந்த திருப்பாவை பாசுரங்களை படித்தாலே போதும். மங்களங்கள் கிடைக்க வழி ஏற்படும்.பறை என்னும் வார்த்தையை பிடித்து இப்படி விளையாடிய ஆண்டாள் பெயர்களிலேயே மிகச்சிறந்த பெயரும், மந்திரமுமாகிய 'நாராயணன்' என்ற அவனது திருப்பெயரை திருப்பாவையில் மொத்தம் மூன்று முறை பயன்படுத்துகிறாள். இப்படி நாராயணா என்ற திருப்பெயரும் பறை என்ற கடவுளின் அருளும், திருப்பாவையில் திரும்பத் திரும்ப இடம்பெற்று நம்மையும் அதை நோக்கி பயணப்படுத்த ஏற்றதாக இருக்கிறது. வாருங்கள்... தொடர்ந்து பயணிப்போம்!. -தொடரும்பவித்ரா நந்தகுமார்82204 78043arninpavi@gmail.com