ஆண்டாளும் அற்புதங்களும் - 14
ஆண்டாள் சொல்லும் வானவியல் சாஸ்திரம்வானம் தன்னிடம் ஏராளமான மர்மங்களை மறைத்து வைத்துள்ளது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்குக் கூட வானத்தை பார்ப்பதென்பது அவ்வளவு பிடிக்கும். ஆனால் இன்று உலகில் யாருக்கும் நேரமில்லை. மனம் அலைபாயும்போது வானத்தைப் பார்த்தபடி மொட்டை மாடியில் கொஞ்ச நேரம் படுத்தால் போதும். மனம் இலகுவாகும். வானுக்கு நம் மனதை தன்வசப்படுத்தி அமைதியாக்கும் தன்மையுண்டு. வானத்தை சற்று நேரம் ஆழ்ந்து நோக்கும் போது மனநிலை சமன் ஆகிறது. பிரபஞ்சத்தின் மர்மங்களை அறிய மனிதன் பல ஆண்டுகளாக முயன்று வருகிறான். எல்லா விஞ்ஞானிகளும் கிரகங்கள் சூரியனை சுற்றி வருவதை ஒப்புக் கொண்டனர். ஆனால் ஏன் சூரியனை சுற்றுகின்றன என்ற கேள்விக்கு மட்டும் பதில் தர முடியவில்லை. மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் ஏன் விழுகிறது என நியூட்டனை சிந்திக்க வைத்த ஈர்ப்புவிதி இதற்கு விடை தந்தது. ஆம்! சூரியனின் ஈர்ப்பு விசையால் கிரகங்கள் சூரியனை சுற்றுகின்றன என அறிந்தனர். ஆனால் இப்படி பல ஆராய்ச்சிக்கு பின் கண்டு பிடிக்கப் பட்டதை நமது வேதங்கள் அன்றே சொல்லி இருக்கிறது எனும் போது நம் மனம் பிரமிக்கிறது. 'தைத்ரீய சம்ஹிதை' என்ற வேதநுால் சூரியனின் ஈர்ப்பு விசையால் தான் பூமியும் மற்ற கிரகங்களும் தாங்கப் படுகிறது என ஆணித்தரமாக உரைத்தது. நம் முன்னோர்களின் தவ வலிமையும் ஞானமும் மெச்சத் தக்கவை.அந்த வரிசையில் வந்தவள் தானே கோதை! விஞ்ஞானிகள் கணித்ததை கோதை மெய்ஞானத்தால் உணர்த்தியுள்ளாள். 13ம் பாசுரத்தில் வரும் வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று என்ற வரி தான் ஒட்டுமொத்த ஆய்வாளர்களுக்கும் அவள் காலம் குறித்து தீனி போட்டது. ஆண்டாளின் காலத்தை கணிக்க அவர்களை துரத்தியது. பொதுவாக வெள்ளி பூமிக்கு அருகில் இருப்பதால் விடியற்காலையில் சூரிய உதயத்துக்கு முன்பு வெள்ளி கண்களுக்கு தெரிவதுண்டு. இதை 'மார்னிங் ஸ்டார்' என்பர். நாம் விடிவெள்ளி என்போம். ஆனால் இந்த வியாழன் கிரகம் இருக்கிறதே அது பூமிக்கு தொலைவில் இருக்கும். அது நம் கண்களுக்கு தெரியாது. ஆனால் அதன் சுழலில் பூமிக்கு நெருக்கத்தில் வரும் போது தான் வியாழன் கண்களுக்கு தெரியும். இந்த இரு கிரகங்களின் இயக்கமும் வேகமும் வேறு வேறானவை. இந்த வெள்ளி ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குச் செல்ல ஒரு மாத காலமாகும். ஆனால் வியாழனுக்கு ஒரு வருட காலம் பிடிக்கும். இந்த வியாழ மாற்றம் இருக்கிறதே... அது நமக்கு தெரிந்ததுதான். எப்படி தெரியுமா? வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் குருப்பெயர்ச்சி தான் அது. ஆண்டாள் பூமியில் வாழ்ந்ததாக கணிக்கப்பட்ட காலத்தில் சுக்கிரன் (VENUS) ஒரு பக்கம் தோன்ற வியாழன் (JUPITER) அதற்கு நேர் எதிர் பக்கம் மறைந்த அந்த அரிய நிகழ்வு நடந்துள்ளதாக வானவியல் குறிப்புகள் சொல்கின்றன. இத்தனைக்கும் தொலைநோக்கி இல்லாத காலம் அது. ஆனால் ஆண்டாள் மெய்ஞானம் என்ற தொலைநோக்கி கொண்டு விஞ்ஞானம் சொல்லும் உண்மைகளை மறைபொருளாக, தத்துவமாக உணர்த்தியுள்ளார். அதிசய வானவியல் நிகழ்வு குறித்து ஒரே வரியில் வெள்ளியெழுந்து வியாழன் உறங்கிற்று என ஆண்டாள் எளிதாக கூறியுள்ளார். இது போன்ற அதிசய நிகழ்வு டிச.௧, 2008ல் நடந்ததாக சொல்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் ஆண்டாள் சொன்னது உண்மைதானா என ஒப்பிட்டு பார்த்து வியந்தோம்? அறிவியல் காலத்தில் வாழும் போதே நாம் இப்படி அலட்சியமாக உள்ளோம். ஆனால் இந்த அரிய நிகழ்வை கண்டதோடு மட்டும் இன்றி வரும் தலைமுறையினர் தெரியும்படி திருப்பாவையில் பதிவு செய்தாள். வான சாஸ்திரத்தில் சுக்கிரனும் வியாழனும் ஒன்றாக தெரிவது அதிசய நிகழ்வு. அதிகாலையில் தெரியும் நாளிலிருந்து பத்து மாதம் முடிவில் மீண்டும் மாலை நேரத்திலும் தெரியும். அப்படி தெரிந்த நாளிலிருந்து இரண்டரை ஆண்டுகள் முடிவில் மீண்டும் காலை நேரத்திலும் தெரியும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. அதன்படி ஆண்டாள் கூறியுள்ள வெள்ளி எழுந்து வியாழன் உறங்கும் அபூர்வ நிகழ்வு, 2011 மே 11 அதிகாலையிலும் மார்ச் 2012ல் மாலையிலும் நடந்தது எனவும் அப்போது இரு கிரகங்களும் தங்கள் வட்டப்பாதையில் வரும் போது அருகில் தோன்றியுள்ளது என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சரி, அடுத்த முறை இந்நிகழ்வு எப்போது வரும் என்ற ஆர்வம் தோன்றுகிறது தானே? மீண்டும் 2065 நவம்பர் 2௨ல் இரு கிரகங்களும் தங்கள் வட்டப்பாதையில் வரும் போது இடைவெளி குறைந்து ஒரே புள்ளியாக ஒளிபிழம்பாக தோன்றக்கூடிய வாய்ப்புள்ளது என அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது வெள்ளி எழுச்சியும் வியாழன் அஸ்தமனமும் ஒரே சமயத்தில் ௮ம் நுாற்றாண்டில் நிகழ்ந்த நாள் டிச.18, 731 என ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இதில் இருவேறு கருத்துக்களும் உண்டு. இப்பாடல் வரிகளுக்கு காரணமான புராணகதை ஒன்றும் பெரியவர்கள் சொல்வார்கள். தேவகுருவான பிரகஸ்பதி அசுரர்களை எப்படி அழிக்கலாம் என திட்டமிட்டார். அவர்கள் அசுரர்களானாலும் கடவுள் பக்தியில் சிறந்தவர்கள். பக்தியை அகற்றி விட்டால் பாவ காரியங்களில் ஈடுபடுவர். பிறகு எளிதாக அழிக்க முடியும் எனக் கருதினார். அதனால் அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் தவத்தில் ஈடுபடும் சமயத்தில் அசுரர்களின் குருவாக பிரகஸ்பதி மாறினார். அவர்கள் மனதில் கடவுள் எதிர்ப்பு உணர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் அசுரர்கள் கடவுளை மறந்தனர். அந்த சமயத்தில் தவத்திலிருந்து தன் நிலைக்கு வந்த பூர்வகுருவான சுக்கிராச்சாரியார் உண்மையை உணர்ந்தார். உடனடியாக கடவுள் கருணையை போதித்து அவர்களை ஆத்திகத்திற்கு மாற்றி பிரகஸ்பதியின் உண்மை சொரூபத்தையும் நிரூபித்து வெளியே அனுப்பினார். நாத்திகத்தை பரப்பிய பிரகஸ்பதி, அதாவது வியாழம் உறங்க, சுக்கிரர் எழுந்து கடவுளின் பரம்பொருள் தத்துவத்தை பரப்ப, தங்கள் குருவான பிரகஸ்பதி இப்படி செய்து விட்டாரே என தேவர்கள் அதன் பின்பு புலம்பினர். நம் மரபில் அனைத்தையும் கதை மூலம் நம்மிடம் பதிய வைக்க முயற்சித்தனர். அவ்வகையில் இக்கதை ஒரு தத்துவத்தை நாம் உணரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது.சின்ன வயதில் கடவுள் எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு வானத்தில் இருக்கிறார் என பதில் கிடைத்தது. வானம் என்பது கடவுள் வசிக்கும் வீடு என்பதாக உற்று நோக்கப்பட்டு உருமாறும் மேகக் கூட்டங்களை எல்லாம் அவ்வப்போது பார்த்து அதிசயப்பட்டதுண்டு. அப்படி வானம் எப்பொழுதும் ஒரு ஆச்சரியம்தான்! எதையாவது மறந்து விட்டால் கூட நம் தலை தானாகவே நிமிர்ந்து மேல் நோக்கிப் பார்த்து யோசனை செய்யும். நிலவைப் பற்றி மேகங்களைப் பற்றி, நட்சத்திரங்களைப் பற்றி பாடாத கவிஞர் இல்லை. பரீட்சையில் கூட பிள்ளைகளுக்கு பதில்களின் தொடர்பு இடையில் விடுபட்டு விட்டால் தலையை மேல் நோக்கி அதாவது வானத்தை நோக்கி பார்த்தபடி தானே சிந்திக்கிறார்கள்? வானிலிருந்து ஏதோ சிந்தனை ஊற்று கொப்பளிக்க வாய்ப்புண்டா என்ன? தெரியாது. ஆனால் அந்த வானம், கேட்பதனைத்தையும் கொடுக்கும் காமதேனுவாக இருந்து நம்மையெல்லாம் சிறப்பாக ஆசீர்வதிக்கிறது என்றுதான் தோன்றும். இந்த பூமி செழிப்பாக இருக்க முக்கியமாக மழையைக் கொடுத்து நம்மை வாழ்விக்கிறது அல்லவா! ஆன்மிகமும் விஞ்ஞானமும் வெவ்வேறானதல்ல. இரண்டும் சொல்வது ஒன்றைத் தான் பிரபஞ்சத்தின் உண்மை மனித வாழ்வியலின் உண்மையாக பார்க்கப்படுகிறது. கற்றுத் தேர்ந்து, பண்பாட்டில் சிறந்து விளங்கும் ஒரு இனத்தால் தான் இப்படி ஒரு சிறப்பான பங்களிப்பை மக்கள் அனைவருக்குமானதாக தர முடியும். அப்படி ஒரு சிறப்பான கலாசார பண்பாட்டின் வழி வந்த ஆண்டாளால் காலத்தையும் நேரத்தையும் கூட இயற்கையில் உள்ள அறிவியலைக் கொண்டே கண்டறிந்து சொன்னது தான் இன்று வரலாறாகிப் போய் நமக்கு பல உண்மைகளை தெரிவிக்கிறது. அவளுடன் தொடர்ந்து பயணித்து அற்புதங்களை உணர்வோம்... வாருங்கள்!-தொடரும்பவித்ரா நந்தகுமார்82204 78043arninpavi@gmail.com