உள்ளூர் செய்திகள்

ஆண்டாளும் அற்புதங்களும் - 17

கைத்தலம் பற்ற கனவு கண்ட கோதைகனவு காண்பது என்பது உலகளாவிய செயல். நம் நாடு சுதந்திரம் அடையும் முன்பே, 'ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே' எனக் கனவு கண்டவர் மகாகவி பாரதியார். ஒரு நம்பிக்கையை மனதில் ஆழமாக ஏற்படுத்திக் கொண்டு அப்படி நடந்து விட்டதாக கனவு கண்டால், எதிர்காலத்தில் அந்த கனவு உண்மையாகும் என உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.அடக்கப்பட்ட ஆசைகளும் நிறைவேறாத விருப்பங்களும் கனவுகளில் அதிகம் தோன்றுகின்றன என்கிறது நவீன உளவியல். கனவு பற்றிய வரலாறு மிகவும் பழமையானது. ஏனெனில் மனிதன் தோன்றிய மட்டும் அவனுடன் கனவுகளும் தோன்றியிருக்க வேண்டும். உளவியல் நிபுணர் சிக்மண்ட் பிராய்ட் ஒருவர் காணும் கனவை ஆராய்ந்து பார்த்தால் அதன் மூலம் ஆழ்மன எண்ணங் களை அறியலாம் என்கிறார். கோதையின் தந்தையான பெரியாழ்வாருக்கு கோதையின் பிறப்பிற்கு பிறகு இருமுறை கடவுள் கனவில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசாயிக்கு சார்த்த பெரியாழ்வார் தொடுத்து வைத்திருந்த மாலையை அவருக்கு தெரியாமல் தான் அணிந்து பெருமாளுக்கு ஏற்றவளாக இருக்கிறோமா எனக் கண்ணாடியில் பார்த்தாள் கோதை. அதைக் கண்டுவிட்ட பெரியாழ்வார் மகளைக் கடிந்து கொண்டார். கோதை சூடிய மாலையை ஒதுக்கிவிட்டு புது மாலையை தொடுத்து பெருமாளுக்கு அணிவித்தார். அன்றிரவே பெருமாள் கனவில் தோன்றி கோதைசூடிய மாலைகளே தனக்கு உகந்தவை எனவும் அவற்றையே தனக்கு சூட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அவருக்கு ஏற்பட்ட அடுத்த கனவும் ஒரு நல்வாக்கியம்தான். கோதை பருவ வயதை அடைந்த பின் ஸ்ரீரங்கம் ரங்கநாதரையே மணப்பது என பிடிவாதம் செய்தாள். என்ன செய்வது என அறியாது கவலையுடன் இருந்த பெரியாழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றி, கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அழைத்து வருமாறு கூறினார். இந்த இரண்டு கனவுகளும் பெரியாழ்வாரின் மனக்கவலையை தீர்த்த கனவுகள்.நம் நாயகியான கோதை, நாச்சியார் திருமொழியில் தான் கண்ட கனவாக தோழிக்கு எடுத்துக் கூறுவது அத்தனையும் கொள்ளை அழகு! நாச்சியார் திருமொழியில் 143 பாசுரங்களில் 14 தலைப்புகளில் பத்து பத்தாக பாசுரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஆறாம் பத்தில் உள்ள பாசுரம் அனைத்தும் கண்ணனை மணப்பது போல் கோதை கண்ட கனவு தான். அதை தோழியிடம் சுவை ததும்ப கூறுகிறாள்.வாரண மாயிரம் சூழ வலம் செய்து... எனத் தொடங்கும் இந்த பாசுரம் அத்தனை சுவை நிறைந்தது. இனி அவள் கனவுகளில் பயணிப்போம். அதோ... ஆயிரம் யானைகள் சூழ்ந்து வருகின்றன. அவற்றின் நடுவே கண்ணன் வந்து கொண்டிருக்கிறான். அவனை வரவேற்கும் வகையில் நகர் முழுவதும் பூரணக் கும்பம் வைத்த தோரணக் கம்பங்கள் நடப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட காட்சியை கனவில் கண்டு மகிழ்ந்தேன் தோழி என்கிறாள் கோதை. கனவில் கூட எப்படி தொடங்குகிறாள் பாருங்கள்! ஆயிரம் யானைகளாம்! என்ன ஒரு பிரம்மாண்டம்! அப்படி வந்த மாதவன் நாளை திருமணம் என்றும் இன்று நிச்சயதார்த்தம் என்றும் பாளைகளோடு கூடிய பாக்கு மரங்கள் கட்டிய பந்தலின் கீழ் காளையைப் போல மிடுக்குடன் புகுந்தான் என தோழியிடம் சொல்லி அதிசயிக்கிறாள் கோதை. கண்ணன் எப்போது வருவான் என கோதை அனுதினமும் காத்திருந்தாலும் இதோ இன்றே இப்போதே திருமணம் என கண்ணன் அவளது கரம் பிடித்தால் மயங்கி கீழே விழுந்து விடுவாள் அல்லவா! அதனாலேயே இன்று நிச்சயம், நாளை திருமணம் எனக் கனவு கண்டாளோ என்னவோ!ஒரு காதல் திருமணம் பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணமாக முடியும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுவது போல! இவை மட்டுமா கனவில் வந்தது? நிச்சயத்திற்கு யார் யார் வந்திருந்தார்கள் என்ற பட்டியலும் அவளிடம் உள்ளது. கனவைக் கூட அத்தனை திருத்தமாக கண்டிருக்கிறாள். அவள் மேலும் தோழியிடம் இப்படி தொடர்கிறாள். திருமாலுக்கு என்னைத் திருமணம் பேச இந்திரன் முதலான தேவர்கள் பூமிக்கு வந்திருந்தனர். பிறகு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர் திருமாலின் தங்கை துர்கை திருமணப் புடவையை எனக்கு உடுத்தி மணமாலை அணிவித்தது போல கனவு கண்டேன் தோழி எனச் சொல்லி மகிழ்கிறாள். நம் வீட்டுப் பெண் பிள்ளைகள் சிறு குழந்தைகளாக இருக்கும்போது புடவை கட்டிக் கொள்ள ஆசைப்பட்டு அவ்வாறு உடுத்திக் கொள்வர். திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் கலந்து கொண்டால் எனக்கும் நலுங்கிட்டு சடங்கு நடத்துவீர்களா என குறுகுறுப்புடன் கேட்பர். இது பெண் குழந்தைகளுக்கே உள்ள இயல்பு. வளர வளர வெட்கம் பூசி அமைதியாகி விடுவர். கோதையும் அப்படித்தான். பெண்மைக்கே உரிய அத்தனை இலக்கணமும் கொண்டவள் அல்லவா. அந்த அற்புதக் கனவை இன்னும் எத்தனை அழகாய் தொடர்கிறாள் பாருங்கள்.அந்தணர்கள் நான்கு திசைகளில் இருந்தும் புனித நீரைக் கொண்டு வந்து நன்றாக தெளித்து எங்களை வாழ்த்தி அந்த மாதவனோடு என்னை இணைத்து காப்பு கட்டினர் என்கிறாள் பெருமையுடன். அட, இவ்வளவு நேரம் முன்னோட்டம் தான். இனி தான் முக்கியக் காட்சி என்பது போல் திருமண தடபுடலுக்கு வருகிறாள் கோதை. மணமகனை வரவேற்க, அழகிய இளம் பெண்கள் மங்கள தீபத்தையும் பொற்கலசங்களையும் ஏந்தி வந்தனர். அப்போது கூட மதுரைக்கு அரசனான கண்ணன் கம்பீர நடையுடன் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தான். மத்தளம் கொட்டவும், சங்குகள் முழங்கவும், முத்து மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் கண்ணன் என்னை கைத்தலம் பற்றக் கனவு கண்டேன் தோழி என வெட்கத்துடன் பகிர்கிறாள். அது மட்டுமா... மந்திரம் ஓதும் வைதீகர்கள் வேதம் ஓத மணச்சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. அப்போது என்னவன் என்ன செய்தான் தெரியுமா? திருமால் முதலில் என் கரம் பிடித்தார். பின் இருவரும் தீயை வலம் வந்தோம். இந்த பிறவிக்கும் ஏழேழு பிறவிக்கும் காவலனான கண்ணன், அவனது திருக்கையால் என் காலை பிடித்து ஏழு அடிகள் எடுத்து வைத்து அம்மி மீது வைப்பதாக கனவு கண்டேன் தோழி என்கிறாள். 'அம்மி மிதித்து அருந்ததி பார்த்து' என திருமணச் சடங்குகள் அன்றும் இருந்திருக்கின்றன. இறுதியில் என் சகோதரர்கள் அக்னி முன் என்னை நிறுத்தி கண்ணனின் கை மீது என் கையை வைத்து பொரிகளை அள்ளி பரிமாறினர். அத்துடன் விட்டார்களா என்னை! குங்குமம், சந்தனத்தை நன்றாகத் தடவி யானை மீது அமர வைத்தனர். என்னவனோடு சேர்ந்து அலங்கரிக்கப்பட்ட வீதிகளில் வலம் வந்தேன். அதன் பின் மங்கல நீரால் நீராட்டுவதாக கனவு கண்டேன் தோழி என்கிறாள்.அப்பாடா! ஒரு திருமண நிகழ்வுக்கு சென்று வந்தது போலான நிறைவு ஏற்படுகிறது அவள் கண்ட கனவை தோழியிடம் விவரிக்கும் அழகில்! திரைப்படம் சுபத்துடன் முடித்தால் திருப்தியாக திரையரங்கை விட்டு வெளியேறுவோம் தானே? அது போல நாராயணனை கைத்தலம் பற்றுவதாக கனவு கண்ட நாச்சியாரின் கனவு நனவானதில் நமக்கெல்லாம் ஆனந்தம் தான். இங்கே நமக்கு திருப்தியுடன் மங்கலங்களும் கிடைக்கிறது. “ துாய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்வாயு நன்மக்களை பெற்று மகிழ்வரே'' என்கிறாள் ஆண்டாள். அதாவது பெரியாழ்வாரின் திருமகளான கோதை, கோவிந்தனுக்கு வாழ்க்கைப்பட்டதாக எண்ணி கனவு கண்டதை படிப்பவர்கள் நற்குணங்கள் மிக்க கணவர், நல்ல பிள்ளைகளை பெற்று மகிழ்வர் என்கிறார். அவள் அருளுடன் தொடர்ந்து பயணிப்போம்... வாருங்கள்.-தொடரும்பவித்ரா நந்தகுமார்82204 78043arninpavi@gmail.com