உள்ளூர் செய்திகள்

ஆண்டாளும் அற்புதங்களும் - 19

கோதைக்கு கிடைத்த ஆச்சாரியர் வைணவத்தை பொறுத்தவரை குருவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. குருவின் அருளின்றி கடவுளை நேரடியாக அடைந்து விட முடியாது. அந்த அளவில் குரு முக்கியமான அங்கமாக போற்றப்படுபவர். இதை ஆச்சாரிய சம்பந்தம் என்பார்கள். கோதையின் குரு அவளின் தந்தையான பெரியாழ்வார் தான். நாச்சியார் திருமொழியில் ஒவ்வொரு 10 பாசுரம் முடிக்கும் போதும் பெரியாழ்வாரை முன்னிறுத்தி அவரது மகள் தான் 'தான்' என்பதை தெளிவாகவும், தான் இன்னார் மகள் என்றும், ஆச்சாரிய சம்மந்தம் எல்லாம் கூறி பாசுர பலன்களை சொல்கிறாள் ஆண்டாள்.ஆண்டாளின் பாசுரங்கள் இத்தனை ஏற்றம் பெற்று திகழ்கிறது என்றால் அப்பாசுரங்களை எல்லாம் குருவுடன் தொடர்புபடுத்தி பாடியிருப்பதால் தான். தந்தையிடம் கடவுள் தன்மை, பக்தி முறைகளை கற்று வளர்ந்தவள் என்பதை ஒவ்வொரு பத்து பாசுர முடிவிலும் சிறப்புடன் குரு சம்பந்தத்தின் உயர்வை புரிந்து கொள்ளும் விதமாக உயர்த்திக் கொடி பிடித்துள்ளாள். நமக்கெல்லாம் ஆண்டாளைப் பற்றி தெரியும். ஆனால் அவள் கொண்டாடும் குருவை அதிகம் தெரியுமா? கோதையை வளர்த்த பெரியாழ்வாருக்கு, பெற்றோர் இட்ட பெயர் விஷ்ணு சித்தர். இளம் வயதிலேயே எம்பெருமானுக்கு தொண்டு செய்வதே சிறந்தது என மனம் பக்திநெறியில் ஈடுபட்டது அவருக்கு. பெருமாளுக்கு எப்படி எல்லாம் தொண்டு செய்யலாம் என யோசித்தபோது கண்ணன் கம்சனின் திருமாலாகாரனிடம் பூக்களை விரும்பிக் கேட்டு சூடி மகிழ்ந்த நிகழ்வு மனதில் தோன்றியது. பெருமாளுக்கு பூக்களை அழகாக கட்டி மாலை சாற்றினால், மனம் மகிழ்வான் என நம்பினார். அதனால் நல்ல நிலத்தை தேர்ந்தெடுத்து பூச்செடிகளை பயிரிட்டு அதில் கிடைத்த பூக்களில் மாலை கட்டி வடபத்ரசாயிக்கு சார்த்தி மகிழ்ந்தார். அத்துடன் சிறப்பான வரலாற்றையும் பெற்றவர் அவர். ஒரு சமயம் அவர் மதுரை வந்திருந்த போது மதுரை மன்னர் ஸ்ரீவல்லப தேவன் நகர் வலம் வந்து கொண்டிருந்தார். உறங்கிக் கொண்டிருந்த விஷ்ணுசித்தரை பார்த்து யார் என கேட்க, ''நான் ஒரு அந்தணன்'' என்றார். மன்னர் அவரைப் பார்த்து, ''அப்படியா... தெரிந்த நீதி ஏதேனும் உண்டென்றால் சொல்” என்றார். அவரும் ''மழைக் காலத்தின் தேவையை மற்ற எட்டு மாதங்களிலும், இரவின் தேவையை பகலிலும், முதுமையின் தேவையை இளமையிலும், மறுஉலகின் தேவையை இவ்வுலகிலும் தேட வேண்டும்” என்றார். மன்னரின் மனதை இந்த வாக்கியங்கள் குடைந்து எடுத்தது. மறுநாள் குலகுருவிடம் நடந்தவற்றை சொல்லி நமக்கு இப்போது குறை ஒன்றும் இல்லை. ஆனால் மறுமைக்காக என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார். நமக்கு ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக தெரியாத பட்சத்தில் யாரிடமிருந்தாவது பெற முயற்சிப்போம் இல்லையா? குலகுருவும் அப்படித்தான். என்ன சொன்னார் தெரியுமா?நாட்டிலுள்ள சான்றோர்களை திரட்டி அவர் முன் இந்த கேள்வியை வைப்போம். சரியான விளக்கம் தருபவருக்கு பொற்கிழி அளிப்போம் என்றார். மன்னருக்கும் சரி என்றுபட, பொற்கிழியை தோரணத்தில் கட்டி சான்றோரைத் திரட்ட ஆணையிட்டார். மதுரையில் ஏற்பாடு நிகழ்ந்து கொண்டிருக்க, ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய எம்பெருமான் ''பொற்கிழியை அறுத்துவா” என்றார். அத்தனை நெருக்கம் இருவர் இடையேயும்! கடவுளின் கட்டளைக்காக மதுரைக்கு புறப்படுகிறார்.''ஸ்ரீமன் நாராயணனை சரணடைவதே மறுமைக்குத் தேவையான மார்க்கம்” என புராண மேற்கோள்களால் விளக்க பொற்கிழி கட்டிய தோரணமானது அவர் முன் வளைந்து அறுக்க ஏதுவாக நின்றது. அனைவரும் ஏன் பெரியாழ்வாருமே அதிசயித்த நிகழ்வு இது. பின் விரைந்து அந்த பொற்கிழியை அறுத்தார் என்கிறது வரலாறு. மன்னரின் சந்தேகம் போக்கிய பெரியாழ்வாருக்கு பட்டர் பிரான் என்ற விருது கொடுத்து, யானையின் மீது அமர வைத்து தானும் பரிவாரங்களுடன் நகரை வலம் வந்தார் மன்னர். தன் பக்தன் பெருமைப்படுவதை காண பெருமாளும் ஓடி வந்தார். கருடன் மீதேறி காட்சி தந்தார். எம்பெருமானின் பேரழகை பார்த்து மகிழ்ந்தாலும் ஊராரின் கண் பட்டு விடுமோ என அஞ்சினார் பெரியாழ்வார். உடனே மக்கள் அனைவரின் கவனத்தை திருப்பும் வகையில் யானையின் மணியை தாளமாகக் கொண்டு, ''பல்லாண்டு பல்லாண்டு' வாழ்த்தி திருப்பல்லாண்டு பாடினார். கடவுளாகிய தனக்கே திருஷ்டி கழித்ததால் ஆழ்வார்களில் பெரியவர் எனும் பொருள்பட பெரியாழ்வார் என அரங்கன் அழைக்க, அந்த பெயர் பிரபலமானது. பெருமாளுக்கே மாமனாரான பெருமையும் பெற்றார்.பெரியாழ்வார் பொற்கிழியையும் பரிசுகளையும் ஸ்ரீவில்லிபுத்துார் பெருமாளுக்கே கொடுத்து விட்டு மாலை கட்டி சார்த்தும் தொண்டை தொடர்ந்தார். இப்படி ஒருவரை தந்தையாக பெற்றது கோதையின் பாக்கியம் அல்லவா? தந்தையாக மட்டுமின்றி ஒரு குருவாகவும் இப்படிப்பட்டவரைப் பெற்றதால் கோதையும் சிறப்பு பெற்றாள். ஒரு குருவாக அவர் சொன்ன அத்தனை வார்த்தைகளையும் அட்சர சுத்தமாக அவள் அப்படியே உள்வாங்கி இருக்கிறாள். அவருக்கு ஒரு நல்ல மாணவியாகவும் இருந்து தான் படைத்த பாசுரங்களில் நினைவு கூர்ந்து நன்றி கூறி குருவின் வழியைப் பற்றியே கடவுளை நோக்கிச் சென்றிருக்கிறாள். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதும் குருவருள் இருந்தால் தான் திருவருள் கிடைக்கும் என்னும் இரண்டு கூற்றுகளும் கோதைக்கு பொருத்தமாக அமைந்து நல்ல பெண்ணாகவும் நல்ல மாணவியாகவும் இருந்து சரியாக பின்பற்றியும் இருக்கிறாள். நம் கோதை தந்தையை போற்றியதுடன் அவரை குருவாகவும் ஏற்றது அவளின் நற்பேறு. பெரியாழ்வாரின் 225வது தலைமுறையைச் சேர்ந்த வேதபிரான் பட்டர் சுதர்ஷனன், ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் தொண்டு செய்து வருகிறார். பெரியாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்கள் மண்ணில் பிறந்து வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரம் இது. கோதை, நாயகியாக இருந்து நாயகனான பெருமாளை மணம் செய்து கொள்ள வேண்டும் என பாசுரங்களில் பாடினாள். பெரியாழ்வாரோ பெருமாளுக்கு ஒரு தாய் ஸ்தானத்தில் அத்தனை பரிவுடன் பாசுரங்களை படைத்தார். ஒரே குடும்பத்தில் இப்படி இருவர் அமைவது அரிது. ஆனால் அப்படி ஒரே வீட்டில் அமைந்திருக்கிறார்கள் இங்கே. அதனாலேயே ஸ்ரீவில்லிபுத்துாரும் இவ்விருவராலும் பெரும் புகழ் பெற்றிருக்கிறது. இங்கு அமைந்துள்ள ஆண்டாள் கோயிலாலும் அதிகம் அறியப்படுகிறது. 11 அடுக்குகளைக் கொண்ட கோபுரம் கொண்ட கோயில் இது. கலையம்சம் நிறைந்த இந்த கோபுரம் தான் தமிழக அரசு சின்னமாக உள்ளது. ஈடு இணையற்ற நம் கட்டடக்கலை, கலாசாரத்தின் பிரதிபலிப்பாக திகழ்கிறது. பெண்ணின் பெருமை பேசும் இந்த கோபுரமும் ஆண்டாளைப் போன்றே பிரமிக்கத்தக்க, பிரம்மாண்ட, மாயத் தோற்றத்தைத் தரும்.இது மட்டுமல்லாமல் தந்தையும் மகளும் செம்மையாக வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் ஆண்டாளும் ரங்க மன்னாரும் எப்பொழுதும் திருவிழா கோலத்திலேயே காட்சியளிக்கிறார்கள். மாதம் தவறினாலும் திருவிழாக்கள் தவறுவதில்லை. இதில் முக்கியமானது ஆடிப்பூரத் தேரோட்டம். அவள் அவதரித்த ஆடிப்பூரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. ''கோவிந்தா கோபாலா” என்ற கோஷம் விண்ணைப் பிளக்கும்படி பக்தர்கள் புடை சூழ மாட வீதிகளில் உலா வரும். இப்படி கோதை தொட்டதெல்லாம் துலங்குகிறது. பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்தவள் என்பதோடு அவள் எங்கெங்கு நிறைந்திருக்கிறாளோ அங்கெல்லாம் உயர்வு நிச்சயம். சரி, நமக்கெல்லாம் யார் இப்படி குருவாகக் கிடைப்பார் என்று யோசிக்க வேண்டியதில்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல தெய்வமான ஆண்டாளே குருவுமாகி அருள தயாராய் இருக்கிறாள். அவள் கரம் பற்றி அற்புதங்களை தொடர்ந்து அனுபவிப்போம் வாருங்கள்!.--தொடரும்பவித்ரா நந்தகுமார்82204 78043arninpavi@gmail.com