உள்ளூர் செய்திகள்

அன்றாட வாழ்வில் ஆத்திசூடி - 34

எண் எழுத்து இகழேல் படிச்சு என்ன பெரிசா கிழிக்கப் போற... அவனெல்லாம் பாரு! அஞ்சாங்கிளாஸ் தான் படிச்சான். அஞ்சு வீடு கட்டிட்டான். லட்சக்கணக்கில இன்ஜினியர், டாக்டர்கள் சும்மா திரியுறாங்க... படிச்சவனுக்கு எங்க மரியாதை? இப்படி புலம்பும் பலரைக் காண்கிறோம். காரணம் மெக்காலே கல்விக்குப் பின்னால் ஓடியதன் விளைவு. கல்வி என்பது வயிற்றுப் பிழைப்பிற்கானதாக மாற்றிவிட்டனர் ஆங்கிலேயர். கற்கும் போதே எந்த தொழிலுக்கான கல்வி அதிக பணத்தை ஈட்டித் தரும் என்பதை வைத்தே பிள்ளைகளைப் படிக்க வைக்கிறோம்.என்ன செய்வது? நம் மூளை அவ்வாறு சலவை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நம் கல்வி முறை இதுவல்ல. ஒருவன் மனதிற்குள் ஒளிந்துள்ள ஆற்றலை வெளிக் கொணர்வது. இதையே வள்ளுவரும் மணற்கேணி தோண்டத் தோண்ட எவ்வாறு நீரைத் தருகிறதோ அதுபோல ஒருவன் கற்கக் கற்க அறிவு வளரும் என்கிறார். சுவாமி விவேகானந்தரும் இதைக் குறிப்பிடுகிறார்.பாரம்பரியக் கல்வியை உற்று நோக்கினால் முன்னோர் எத்தனை அறிவாளிகளாக விளங்கினர் என்பது புலனாகும். சில அரை வேக்காடுகள் வெள்ளைக்காரன் வந்துதான் கல்வி தந்தான் அதற்கு முன்பு நாம் எழுத்தறிவற்ற முட்டாளாக இருந்தோம் என பிதற்றுகிறார்கள். நம் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களை போல எந்த இன்ஜினியராவது இன்று கட்ட இயலுமா என்ன? இயந்திர வசதி எதுவுமின்றி எத்தனை பெரிய துாண்களை நிறுவியுள்ளார்கள். தஞ்சைப் பெரிய கோயிலில் கருவறையின் மீதுள்ள விமான ஸ்துாபி ஒரே கல்லால் ஆனது. அதனை மேலே ஏற்றுவதற்காக ஐந்தாறு கிலோமீட்டர் தள்ளி சாரம் (சாய்வான ஏறும் வழி) அமைத்து கொண்டு சென்றுள்ளனர். தஞ்சைக்கு அருகில் சாரப்பள்ளம் என்ற ஊர் இருக்கிறது. ஆவுடையார்கோவில் சிற்பங்களை கனவில் கூட செய்துவிட முடியாது. செட்டி நாட்டில் ஒன்பது நகரக் கோயில் சிற்பங்களை கண்டு வியக்காதவர்களே கிடையாது. இது போலவே மருத்துவம், ஓவியம், நடனம், நாட்டியம், அறிவியல் என துறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எத்தனையோ நாடுகளில் எழுதப்படிக்கத் தெரியாத காலத்திலேயே நாம் பல்கலைக் கழகங்களை நடத்தியவர்கள். கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய ஒன்று. யாதும் ஊரே... யாவரும் கேளிர் போல எல்லாம் ஒருவனது நாடாக இருக்கும் போது, எல்லாம் ஒருவனது ஊராக இருக்கும் போது வாழும் இறுதி மூச்சு வரை ஒருவன் கல்லாமல் காலம் கழிப்பது ஏன் என தெய்வப்புலவர் கேட்கிறார். எனவே தான் அவ்வையாரும் எண் எழுத்து இகழேல் எனக் கூறினார்.கடந்த அரை நுாற்றாண்டாக தமிழகத்தை பிடித்த நோய் மொழி வெறுப்புக் கொள்கை. எந்த மொழியானாலும் விருப்பம் இருந்தால் கற்க வேண்டியது தானே. கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் எட்டாவது வரையாவது படியுங்கள் என அங்குள்ள மாணவர்களிடம் பல ஆசிரியர்கள் கெஞ்சுவார்கள். ஆனால் அவர்களுக்கு அப்போது புரியாது. பின்னர் பேருந்து நிலையங்களிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ சந்திக்கும் போது “சார்! நீங்க எவ்வளளோ சொன்னீங்க... நான் கேட்கல'' எனக் கண்ணீர் வடிப்பர். கல்வி பற்றிய விழிப்புணர்வு இன்னும் கடைக்கோடி மனிதன் வரை சென்றடைய வேண்டும்.வாளின் கூர்மையை விட நுாலின் கூர்மை அதிகமாகும் என்பர். எனவே கல்வி என்றால் என்ன என்பதையும், கற்றல் என்பது வெறும் கல்லுாரி காலங்களோடு நின்று விடக் கூடாது என்பதையும் உரக்கச் சொல்ல வேண்டும். திருமணம், புதுமனை புகுவிழா போன்ற விசேஷங்களில் கொடுக்கும் பரிசுப் பொருட்கள் நுால்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் திருக்குறள், திருவாசகம் இடம் பெற்றிருக்க வேண்டும். திருக்குறள் அறிவை மேம்படுத்தவும், திருவாசகம் பக்தியால் ஆன்மாவை அறியவும் உதவிடும்.ஓஷோ சொல்லுவார் நீ படிக்கும் நுாலில் ஏதோ ஒரு புத்தகத்தில் ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ வரியில் ஞானம் ஒளிந்திருக்கிறது என்று. எனவே படிக்க வேண்டும். காஞ்சி மஹாபெரியவர் சொல்லுவார். படிக்க வேண்டும் எனச் சொல்வதை விட வாசிக்க வேண்டும் என்று சொன்னால் இன்னும் நிறைய புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். காரணம் வாசி... வாசி.... என்று திரும்பத் திரும்பச் சொன்னால் சிவா... சிவா... என்று வந்து விடுமே... அந்தப் புண்ணியமும் கிடைத்தும் விடும் என்பார்கள்.படிக்கப் படிக்க மனிதனின் நுண்ணறிவு கூடுகிறது. காரணம் உலக அனுபவங்களின் அத்தனை குவியலும் நுால்களில் உள்ளது. எனவே தான் அவ்வையாரும் நுாலறிவே ஆகுமாம் நுண்ணறிவு என்பார். சரி படிக்காதவர்களின் கதி தான் என்ன? ஒரு ஊரில் ஒரு படிக்காதவன் இருந்தான். சாப்பாட்டிற்கு என்ன செய்வது? ஒரு சங்கு வைத்திருந்தான். அதை ஊதிக் கொண்டே போய் வீடு, வீடாகப் பிச்சை எடுப்பான். சாப்பிடுவான். ஊருக்கு வெளியே இருந்த பாழடைந்த மண்டபத்தில் துாங்குவான். சில சமயங்களில் திருடர்கள் அங்கு உட்கார்ந்து திருடிய பொருட்களைப் பிரித்துக் கொண்டிருப்பார்கள். இவன் துார இருந்து பார்ப்பான். ஆஹா.... எவ்வளவு பணம்? வீடு வீடாகக் சென்று பிச்சை எடுப்பதை விட்டு விட்டு இவர்களுடன் சேர்ந்து திருடப் போனால் நாமும் சந்தோஷமாக இருக்கலாமே என நினைத்தான். திருடர்களின் தலைவனிடம் தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினான். அவன் உடனே கோபமாக போ... போ... உனக்கெல்லாம் ஒத்து வராது என விரட்டினான். பிச்சைக்காரனும் விடாமல் கெஞ்சினான். ஒருநாள் திருடர் தலைவன் இதுக்கெல்லாம் கூறு (நுண்ணறிவு) வேணும்டா.... சொன்னாக் கேளு என்றான். கால்களிலே விழுந்து கண்ணீர் விட்டான். மனம் இரங்கிய தலைவன் சரி நாளை பார்க்கலாம் என்றான்.மறுநாள் இரவு கிராமத்துப் பண்ணையாரின் ஆட்டுக் கொட்டிலில், ஆடு திருடப் போனார்கள், இவனும் குஷியாகச் சேர்ந்து கொண்டான். ஆட்டைப் பிடித்துப் பழக்கமுள்ள மற்ற திருடர்கள் அது கத்த முடியாதபடி கழுத்தைப் பிடித்து லாவகமாகப் பிடித்து சாக்கில் கட்டினர். இவனோ காலைப் பிடித்துத் துாக்கினான். ஆடு கத்த ஆரம்பித்தது. திருடன் தலைவன் மெதுவாக அருகில் வந்து டேய்! சொன்னா கேளுடா! காலைப் பிடிக்கக் கூடாது. சங்கைப் பிடிக்கணும் என்று சொல்லிவிட்டுப் போனான். கழுத்தை சங்கு என்றும் சொல்வதுண்டு. உடனே இவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்துப் பலம் கொண்ட மட்டும் ஊதினான். உடனே காவலர்கள் விழித்துக் கொண்டனர். ஊரார் கூடிவிட்டனர். அப்புறம் நடந்தது தான் உங்களுக்கே புரிந்திருக்குமே! கல்வி அறிவு என்பது எத்தனை இன்றியமையாதது என்பதை இதற்கு மேலும் விளக்க முடியுமா என்ன?படிக்காமல் இருப்பதை விடப் பிறக்காமல் இருப்பதே மேல் என்றார் பிளாட்டோ. இன்றைக்கு கல்வி கற்க நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. எத்தனையோ அறக்கட்டளைகள் தாமே முன் வந்து பிறருக்குத் தெரியாமல் உதவி செய்து கொண்டிருக்கின்றன. எத்தனையோ ஆசிரியர்கள் தாங்களே குழந்தைகளைத் தத்தெடுத்து படிக்க வைக்கிறார்கள். இது பருவம் தொடர்பான கல்வியாகும். இதனையும் கடந்து பணிக்குச் சென்றவர்கள் இதோடு படிப்பு முடிந்தது என நினைக்காமல் தங்களுக்குப் பிடித்த துறையில் உள்ள நுால்களை வாங்கிப் படிக்கப் பழக வேண்டும். ஒன்றிவிட்டால் நுாலாசிரியரும் நீங்களும் நேருக்கு நேர் பேசுவது போன்ற உணர்வு ஏற்படும். மனம் கெடுக்கும் சீரியல்களை விட்டு விட்டு பெண்கள் நல்ல நுால்களைப் படிக்கத் தொடங்கினால் அடுத்த தலைமுறையும் அறிவு சார்ந்ததாக அமையும். படிப்பால் மட்டுமே பாரதத்தை பாராள வைக்க இயலும். துாக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் வரை படித்துக் கொண்டிருந்தான் மாவீரன் பகத்சிங். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய நுாலகம் இருக்க வேண்டும். வாசிப்போம். நுால்களையே சுவாசிப்போம். அதன் மூலம் இந்த உலகம் நம்மை நிச்சயம் நேசிக்கும் என்பது உண்மை. -தொடரும்இலக்கியமேகம் ஸ்ரீநிவாசன் ilakkiamegamns@gmail.com