தெய்வ தரிசனம் - 2 (18)
UPDATED : மார் 01, 2019 | ADDED : மார் 01, 2019
மகா சிவராத்திரிவேதத்தில் சாமம், நதியில் கங்கை, விருட்சத்தில் அரசமரம், பஞ்சபூதத் தலங்களில் சிதம்பரம் எப்படி உயர்ந்ததோ, அதுபோல் விரதங்களில் உயர்ந்தது மகாசிவராத்திரி.திதிகளில் சதுர்த்தசிக்கு அதிபதி ஸ்ரீருத்ரன். அவருக்குரியது சிவராத்திரி. அதாவது தேய்பிறையின் பதினான்காம் நாளில் சிவனை வழிபடுவதால் நன்மை கிடைக்கும். மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி தேய்பிறை சதுர்த்தசி 'மகாசிவராத்திரி'யாக (மார்ச் 4) சிவன் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. அன்று சூரியன் மறைந்து மறுநாள் சூரியன் உதிக்கும் வரை நான்கு கால பூஜையை நடத்துவர்.ஒவ்வொரு கால பூஜையிலும் அபிஷேகம், மலர்கள், பாராயணம், நிவேதனம் என்று மகிழ்ச்சியில் திளைப்பார் சிவன். 'சிவராத்திரி' என்ற சொல்லுக்கு 'மோட்சம் அருள்வது' என பொருள்.இந்நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனை பூஜிப்பர். சிவராத்திரி பூஜையை முதலில் பார்வதியே முன்னின்று நடத்தினாள். அதில் மகிழ்ந்த சிவன் அருளை வாரி வழங்கினார். அப்போது ''நான் செய்த இந்த நான்கு கால பூஜையை யார் செய்தாலும், அவருக்கு எல்லா நலன்களையும் வழங்க வேண்டும்'' என்று பார்வதி கேட்க, சிவனும் சம்மதித்தார். தேவர்கள் அசுரர்கள் இணைந்து அமுதம் பெற வேண்டி பாற்கடல் கடைந்த வரலாறு நமக்குத் தெரியும். பாற்கடலில் திரண்ட ஆலகால விஷத்தைக் கண்டதும் தேவர்கள் அஞ்சி ஓடினர். ஆனால் அதை குடித்த சிவன் ஆனந்த தாண்டவம் புரிந்தார். ஒரு திரயோதசியன்று இந்நிகழ்வு நடந்தது. சிவனுக்கு களைப்பு ஏற்படாமல் இருக்கவும், அவரது அருள் வேண்டியும் அடுத்த நாள் சதுர்த்தசியன்று நான்கு காலங்களிலும் சிவனை வழிபட்டனர். இதுவே மகா சிவராத்திரி பூஜையாக நடக்கிறது. இந்நாளில் ஒரு வில்வ இலையால் சிவனை பூஜித்தாலும் பாவம் பறந்தோடும். கோடிக்கணக்கான பூக்களால் பூஜித்த புண்ணியம் கிடைக்கும். மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்வது எப்படி?காலையில் நீராடி சிவனை வழிபட வேண்டும். மாலை கோயிலில் நடக்கும் நான்கு கால பூஜையில் பங்கேற்க வேண்டும். ஒரே கோயிலில் வழிபடலாம் அல்லது ஒவ்வொரு கால பூஜையையும் வெவ்வேறு கோயிலில் தரிசிக்கலாம். அதன்பின் குளித்து விட்டு அடியார்களுக்கு உணவளித்து விட்டு, பின்னர் உண்ணலாம். உணவு, உறக்கத்தை விலக்கினால், நம் புலன்கள் கட்டுப்படும். புலன்கள் கட்டுப்பட்டால் மட்டுமே சிவனருளை பெற முடியும். விரதமிருக்க முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு கால பூஜை முடிந்ததும் பால், பழம் உண்ணலாம். தண்ணீர் குடிக்கலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கை உப்பின்றி வேக வைத்துச் சாப்பிடலாம். சத்துமாவை வெல்லமுடன் சேர்த்து உண்ணலாம்.சிவராத்திரியன்று கோயில், வீடுகளில் நமசிவாய மந்திரத்தை அதிகநேரம் ஜபிக்க வேண்டும். கோளறு பதிகம் படித்தால் பயம் அகலும். தைரியம் பெருகும். சிவ புராணம், லிங்காஷ்டகம், தேவாரம், திருவாசகம் படிக்கலாம். திருவிளையாடல் புராணம், பெரிய புராணத்தை பிறர் சொல்லக் கேட்டாலும், படித்தாலும் நன்மை கிடைக்கும். தரிசிக்க வேண்டிய சிவத்தலங்கள்சாபத்தின் காரணமாக ஆதிசேஷன், ராகு, கேது உள்ளிட்ட நாகங்கள் ஒருமுறை சக்தியை இழந்தன. மீண்டும் சக்தி பெற சிவனைச் சரணடைந்தன. சிவராத்திரியன்று பூலோகத்தில் உள்ள நான்கு சிவத்தலங்களில் வழிபடும்படி அவர் தெரிவித்தார்.ஆதிசேஷன், ராகு, கேது, அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் என நாகங்கள் பூலோகம் வந்தன. முதல் கால பூஜையில் கும்பகோணம் நாகேஸ்வரர், இரண்டாம் கால பூஜையில் திருநாகேஸ்வரம் நாகநாதர், மூன்றாம் கால பூஜையில் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர், நான்காம் கால பூஜையில் நாகூர் நாகநாதரை வழிபட்டு விமோசனம் பெற்றன. இத்தலங்களை வழிபட இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்.சிவராத்திரியன்று நடந்த புராண நிகழ்வுகள்* படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா.* மகாவிஷ்ணு, மகாலட்சுமி, முருகன் ஆகியோர் சிவனருளைப் பெற்றனர்.* தேவலோகத்தின் அதிபதியானார் இந்திரன்.* செல்வத்தின் அதிபதியானார் குபேரன்.* சிவனின் இடப்பாகத்தைப் பெற்றாள் பார்வதி.* தவமிருந்த அர்ஜுனன் பாசுபத அஸ்திரத்தைப் பெற்றார்.* சிவனுக்குத் தன் கண்களை கண்ணப்பர் அளித்தார்.* தவசக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார் பகீரதன்.* மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்தார் சிவபெருமான்.* பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் சிவபெருமானின் திருமுடி, திருவடியைத் தேடினர்.தரிசனம் தொடரும்தொடர்புக்கு: swami1964@gmail.comபி. சுவாமிநாதன்