பெரியவரும் மரகதலிங்கமும்
சிவராத்திரியை ஒட்டி, காஞ்சி மகாபெரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட மரகதலிங்கம் பற்றிக் கேளுங்கள்.நன்னிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மரகதலிங்கம் ஒன்றைப் பூஜித்து வந்தார். சில சூழ்நிலைகளால் அவரால் தொடர்ந்து பூஜை செய்ய இயலவில்லை. எனவே, நெல்லூரில் முகாமிட்டிருந்த காஞ்சி மகாபெரியவரிடம் சென்று, தனது சூழ்நிலையைச் சொல்லி ஒப்படைத்து விட்டார். பெரியவர் நெல்லூரில் வசித்த அல்லாடி வாசுதேவன், அல்லாடி கிருஷ்ணய்யா என்பவர்களை அழைத்தார்.''நீங்கள் உங்கள் வீட்டிற்கு இந்த லிங்கத்தை எடுத்துச் செல்லுங்கள். ஒரு வேத விற்பன்னரைக் கொண்டு பூஜை செய்து வாருங்கள். நான் கேட்கும் போது என்னிடமோ அல்லது நான் குறிப்பிடும் நபரிடமோ இதை ஒப்படைத்து விடுங்கள்,'' என்று உத்தரவிட்டார்.இருவரும் அதைப் பெற்றுக் கொண்டனர். பெரியவர் சொன்னபடியே மரகத லிங்கத்திற்கு பூஜை பிரமாதமாக நடந்து வந்தது.இந்நிலையில், பெரியவரிடம் லிங்கத்தை ஒப்படைத்த பக்தரின் வீட்டில் பல சிரமமான சூழ்நிலைகள் ஏற்பட்டன. அவர்களும் ஜோதிடம், இன்னும் பல வகைகளில் இதற்கான காரணத்தை அறிய முற்பட்ட போது, லிங்கத்தை வீட்டை விட்டு வெளியேற்றியது தான் சிரமங்களுக்கு காரணம் என தெரிய வந்தது.அந்த சமயத்தில் பெரியவர், கர்நாடக மாநிலம் சகாபாத்தில் முகாமிட்டிருந்தார். அங்கு சென்று பெரியவரை நமஸ்கரித்து தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட நிலையை விவரித்து, லிங்கத்தை மீண்டும் பெறச் சென்றார்.பெரியவரிடம் இதுபற்றிய தகவலைச் சொல்லவே, அவரும் அதை ஏற்று தன் சிஷ்யர் சந்திரமவுலியை, அல்லாடி குடும்பத்தினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். சிஷ்யரும் அங்கு சென்று மரகதலிங்கத்தைப் பெற்று பெரியவரிடம் ஒப்படைத்தார். பெரியவர் அந்த லிங்கத்தை வணங்கினார். நன்னிலம் சென்று பக்தரிடம் ஒப்படைத்து வர உத்தரவிட்டார்.அந்த லிங்கத்தைப் பெற்றுக்கொண்டதும், அந்தக் குடும்பத்தில் சிரமங்கள் படிப்படியாக தீர்ந்தது. எந்த ஒரு மனிதருக்கும் வாழ்வில் சிரமங்கள் வாழ்வில் தவிர்க்க முடியாதவை. அவை ஏதோ ஒரு ரூபத்தில் வருகின்றன. அதற்கு பல காரணங்களை நமக்கு நாமே கற்பித்துக் கொள்கிறோம். அந்தக் குறைகளை மகான்களிடம் தெரிவித்தால் போதும். அவற்றை அவர்கள் தீர்த்து விடுகிறார்கள். அப்படி ஒரு தெய்வீக சக்தி அவர்களிடம் இருக்கிறது. வாழும் தெய்வமான காஞ்சிப்பெரியவரை பிரார்த்திப்பவர்கள் சிரமங்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெறலாம்.