உள்ளூர் செய்திகள்

பச்சைப்புடவைக்காரி - 44

காதலை நிராகரித்தவள்முன்னிரவு நேரம். நான் அமர்ந்திருந்த பூங்காவில் ஆள் நடமாட்டம் இல்லை. உருவெளிப்பாடாக தோன்றினாள் உமையவள். “உனக்கு ஏதாவது தர விரும்புகிறேன்.”“நாம் தேர்ந்தெடுப்பதுதான் வாழ்க்கை என்கிறார்களே உண்மையா?““விளக்குகிறேன்”கவிதாவிற்கு ஐந்து வயதாகும் போதே தாய் இறந்தாள். தந்தை குமணன் குடிகாரன். பச்சைப்புடவைக்காரியிடம் சரணடைந்துவிட்டிருந்தாள் கவிதா. கவிதா பேரழகி. கூடப் படித்த மாணவர்கள் பலர் காதலைக் கவிதாவிடம் சொன்னார்கள். காதலை ஏற்பதா? இல்லை, அவர்களைப் புகார் செய்து அவர்கள் வாழ்வை நாசமாக்குவதா? பெரும்பாலான மாணவிகள் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பர். கவிதா மூன்றாவது வழியைத் தேர்ந்தெடுத்தாள்.குமார் என்ற துடிப்பான மாணவன் காதலைச் சொன்னபோது கவிதா,“நீ சொன்னதக் கேக்க சந்தோஷமா இருக்கு. ஆனா இப்போ நேரத்த வீணடிச்சா படிப்பு போயிரும்டா. நீ... படிச்சி பெரிய ஆளா வரணும். நீ படிச்சி முடிச்சி வேலையில இருக்கும் போதும் மனசுல காதல் இருந்துச்சின்னா என்கிட்ட சொல்லு. நான் ஒத்துக்குவேன். பள்ளிக்கூட வயசுல காதலிக்கறது தற்கொலைக்கு சமம்டா”காலம் ஓடியது. கவிதா ஒரு தையலகத்தில் வேலை பார்த்தாள். பலர் கவிதாவைப் பெண் கேட்டு வந்தனர். குமணன் எல்லோரையும் தட்டிக் கழித்தான். இதற்கிடையில் குமணனுக்கு காசி என்ற ஒப்பந்தக்காரனுடைய நட்பு கிடைத்தது. கவிதாவை அடைய வேண்டும் என்ற வெறியில் இருந்தான் காசி. அவனுக்கு நாற்பது வயதாகிவிட்டது. விவாகரத்தாகி விட்டது. நிறையப் பணம் இருந்தது. தினமும் குமணனோடு சேர்ந்து குடிக்க ஆரம்பித்தான் காசி. கொஞ்சம் பழக்கம் ஏற்பட்டவுடன் கவிதாவை பெண் கேட்டான். கல்யாணத்திற்குப் பிறகு குமணன் வேலை செய்ய வேண்டாம். தினமும் வெளிநாட்டுச் சரக்கை அடிக்கலாம் என ஆசை காட்டினான். குமணன் சம்மதித்தான். காசியுடன் வீட்டிற்கு வந்தான்.“கவிதா, இவருதாம்மா உன் புருஷன் கும்பிட்டுக்கோ.”காசியைப் பார்த்ததுமே கவிதாவிற்கு வாந்தி வந்தது. கண்டபடி திட்டினாள். குமணனுக்குக் கோபம் வந்தது.“மாப்பிள்ளை, கவிதா உங்க பொண்டாட்டி. என்ன வேணும்னாலும் செய்யலாம். நான் வெளிய போறேன். தாப்பா போட்டுக்கங்க”வெறியுடன் கவிதாவின் மீது பாய்ந்தான் காசி. கற்பைக் காப்பாற்ற போராடினாள் கவிதா. ஒரு கட்டத்தில் 'தாயே பச்சைப்புடவைக்காரி! உன் மனம்போல் நடக்கட்டும்' என்றபடி சாய்ந்துவிட்டாள்.காசி அவளை நோக்கிச் சென்ற சமயம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. தயக்கத்துடன் கதவைத் திறந்தான் காசி. போலீஸ்காரர்கள் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். அவர்கள் எல்லோரும் அவனிடம் மாமூல் வாங்குபவர்கள். “ஒண்ணுமில்ல இன்ஸ்பெக்டர். எனக்கும் என் பொண்டாட்டிக்கும்...” சொல்லி முடிக்கும்முன் கன்னத்தில் அறை விழுந்தது. அதிர்ச்சியுடன் கீழே விழுந்தான். அப்போது அங்கே வந்த இளைஞனைப் பார்த்து விரைப்பாக சல்யூட் அடித்தார் அந்த அதிகாரி.“என்னாச்சு?”“பாத்துட்டு வரேன் சார்”இன்ஸ்பெக்டர் உள்ளே சென்று கவிதாவிடம் விசாரித்தார். கவிதாவின் தந்தையைத் தேடிக் கண்டுபிடிக்க போலீசை அனுப்பினார். அந்த இளைஞனிடம் விவரங்கள் சொன்னார். அவன் யோசித்தான்.கவிதா வெளியே வந்தாள். அவளைப் பார்த்த இளைஞன் அதிர்ச்சி ஆனான். அதிகாரியின் கைகளைப் பற்றி அவரைத் தரதரவென இழுத்துக்கொண்டு விலகிச் சென்றான். மடமடவென இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு போட்டு விட்டுக் காத்துக்கொண்டிருந்த காரில் ஏறிப் பறந்துவிட்டான் அந்த இளைஞன்.கவிதாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவள் தந்தையையும் காசியையும் போலீஸ் வண்டியில் ஏற்றிக் கொண்டு போனார்கள். அதிகாரி கவிதாவிடம்“இனிமே நீங்க இங்க இருக்கறது நல்லதில்ல மேடம். பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கறோம்”“எங்க?”“எல்லாம் நல்லதுக்குத்தான், மேடம். உங்க வாழ்க்கையே அடியோடு மாறப் போகுது''ஒரு கார் அங்கே வந்தது. கவிதாவின் உடமைகள் காரில் ஏற்றப்பட்டன. கவிதாவுடன் இரண்டு பெண் போலீசாரும் ஏறினர். ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் போய் நின்றது கார்.ஒரு ஆடம்பரமான குடியிருப்பின் வாயிலில் காத்திருந்த பெண் கவிதாவை வரவேற்றாள். ““நீங்கள்லாம் யாரு? இது என்ன இடம்?''“அந்த ரூமுக்குப் போம்மா. தெரியும்”மெல்லிய நடுக்கத்துடன் போனாள் கவிதா. அங்கிருந்த இளைஞன் அழகாக இருந்தான் கவிதாவின் வயதுதான் அவனுக்கும்.“என்னைத் தெரியுதா கவி?”“குமார்?” கவிதா அலறினாள்.“ஆமாம் கவி. அப்பவே என் காதல தைரியமாச் சொன்ன அதே அருண்குமார்தான். நீ மட்டும் என்னப் பத்தி புகார் கொடுத்திருந்தா என் வாழ்க்கை தடம் மாறிப் போயிருக்கும். என் காதல நீ ஏத்துக்கிட்டிருந்தாக்கூட எனக்குப் பிரச்னையாப் போயிருக்கும். உன்னையே நெனச்சிக்கிட்டு நான் என் படிப்பையும் வாழ்க்கையையும் கோட்டை விட்டிருப்பேன். அன்னிக்கு நீ எனக்கு நல்ல வார்த்தை சொன்ன. நல்லாப் படிடா. காதல அப்புறம் பாத்துக்கலாம்னு சொன்ன”“இப்போ ஐ.ஏ.எஸ்., படிச்சிட்டு சப் கலெக்டரா வந்திருக்கேன். எனக்கு அப்பா, அம்மா இல்ல கவி. ஒரு அக்காதான். இது அவங்க வீடுதான். நல்ல வேலை கெடச்சப்பறமும் என் மீது காதல் இருந்துச்சின்னா வந்து சொல்லுடா' ன்னு நீ சொன்னது ஞாபகம் இருக்கா கவி?“இப்பவும் நான் உன்ன காதலிக்கறேன் கவி. எனக்குப் பொண்டாட்டியா மட்டும் இல்லாம அம்மாவா இருந்து என்னப் பாப்பியா கவி? தன் முன்னால் மண்டியிட்ட குமாரை உற்றுப் பார்த்தாள் கவிதா. ஒரு விம்மலுடன் அள்ளி அணைத்துக் கொண்டாள்.பச்சைப்புடவைக்காரி விளக்கம் கொடுத்தாள். “பார்த்தாயல்லவா? கவிதா என் அடியவள். அவள் தேர்ந்தெடுத்ததுதான் அவள் வாழ்க்கை. காதலைச் சொன்னவன் மீது கோபப்படாமல் அறிவுரை சொன்னாள். அதுதான் அவளுக்கு வாழ்வை தந்தது. என்னை வணங்கினால் மட்டும் போதாது. அறிவையும் பயன்படுத்த வேண்டும்”“யாரிடம் கதை விடுகிறீர்கள், தாயே? கவிதா சிறுவயதிலிருந்தே உங்களை வணங்குபவள். அவளது பக்தியில் மகிழ்ந்து அவளுக்குள் அன்பாய், அருளாய், ஞானமாய் உள்ளிறங்கினீர்கள். சரியான சமயத்தில் சரியான வார்த்தைகளைப் பேச வைத்தீர்கள். அவள் மூலம் குமாருக்குச் சிறந்த வாழ்வை அளித்து அவன்மூலம் கவிதாவை வாழ வைத்தீர்கள். செய்வதையெல்லாம் செய்துவிட்டு அவள் தேர்ந்தெடுத்த பாதை, அவள் அறிவு என என்னிடமே கதையளக்காதீர்கள் தாயே”அன்னை சிரித்தபடி மறைந்தாள். நான் பூங்காவில் தனியாக அமர்ந்தபடி அழுதுகொண்டிருந்தேன். -தொடரும்வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com