உள்ளூர் செய்திகள்

பச்சைப்புடவைக்காரி - 47

கர்மக் கணக்கையும் தாண்டி… “என் அனுபவத்துல இது மாதிரி ஒரு கேசப் பார்த்ததேயில்ல. நிலைமை மோசமா இருக்கு. நீங்க வந்தாலும் பெரிசா எதுவும் செய்யமுடியும்னு எனக்குத் தோணல. உலகத்துல இப்படியும் நடக்கும்னு தெரிஞ்சிக்கணும்னா வாங்க”பேசியது நண்பரின் மகளான நர்ஸ் சந்தியா. மருத்துவமனைக்கு ஓடினேன்.“அந்தாளுக்கு அம்பது வயசு இருக்கும். முகத்துல கேன்சர். உயிரக் காப்பாத்த ஆப்பரேஷன் பண்ணலாம். ஆனா முகத்துல முக்காவாசிய எடுக்க வேண்டியதிருக்கும்னு டாக்டருங்க சொல்றாங்க. அதுக்கப்பறம் வாழறதுல அர்த்தமேயில்ல”சந்தியா விலகிச் சென்றவுடன் ஓரிடத்தில் அமர்ந்து பிரார்த்தித்தேன். அப்படியே அசந்துவிட்டேன் போலும். யாரோ என்னை உலுக்கினார்கள்.“யாரப் பார்க்க வந்தீங்க?”என் முன் நின்றவள் உலகாளும் உமையவள் என்பதை அறிந்து வணங்கினேன்.“மாரி யாருன்னு தெரியாமலேயே அவனுக்காக மனு கொடுக்கிறாயா?”“யார் தாயே?”“முகத்தில் புற்று. சாகக் கிடக்கிறான். அவன் எத்தனை கொடிய பாவி தெரியுமா?”“தெரியாது”“மாரி தீமையின் மொத்த உருவம். அரசியல் செல்வாக்கும் இருந்தது. எத்தனை பெண்களைக் கெடுத்திருக்கிறான் தெரியுமா? ஆசைக்கு இணங்காத பெண்ணின் முகத்தில் அமிலத்தை ஊற்றி சிதைப்பது மாரியின் பாணி. இதுவரை பத்து பெண்களை அப்படி சிதைத்திருக்கிறான். கர்மவினை சும்மா விடுமா? முகத்தில் புற்று நோய் வந்திருக்கிறது. முகத்தில் முக்கால்வாசியை எடுத்துவிட்டால் அவனை யாராலும் பார்க்க முடியாது.“தீமையும் ஒரு நோய்தான் என ஆரம்பிக்கப் போகிறாயா?”“இல்லை, தாயே!. மாரி முற்பிறவியில் எப்படி இருந்தான்”“பத்து பிறவிகளுக்கு முன் நல்லவனாக இருந்தான். பாதை தவறி படுவேகமாக சரிந்து இன்று மிக மோசமான நிலையில் இருக்கிறான்”“மாரியின் கர்மக்கணக்கு இவ்வளவு மோசமாக இருக்கிறதே''“கர்மக்கணக்கோடு என் எல்லை முடிவதில்லை. அதையும் தாண்டி அன்பின் கணக்கு ஒன்று இருக்கிறது”“மாரியைப் போன்றவர்களை அன்பு திருத்தும் என நான் நம்பவில்லை”“மனித அன்பால் அவனைத் திருத்த முடியாது”“பின்”“மாரி இன்னும் சில நொடிகளில் இறப்பான். அதன்பின் அவன் ஆன்மாவின் பயணம் எப்படி நடக்கிறது எனக் காட்டுகிறேன்”“தெரியும், தாயே! உங்கள் அன்பால் அவனுக்கு சொர்க்கம் தருவீர்கள். அப்புறம் கர்மக் கணக்கு பொய்த்துவிடுமே”“மாரிக்கு நரகம் உறுதி. ஆனால் சின்ன நாடகம் மூலம் அவன் ஆன்மாவை நல்வழிப்படுத்தமுடியுமா என பார்க்கலாம்''மாரியின் ஆன்மா பயணிக்கும் பாதை தெளிவாகத் தெரிந்தது. யம துாதர்கள் மாரியின் ஆன்மாவைக் கைப்பற்றி நரகத்திற்கு இழுத்துச் சென்றனர். பின்னணியில் தெரிந்த பச்சைப்புடவைக்காரி கண்ணசைத்தாள். இரண்டு சக்தி கணங்கள் யம துாதர்களின் பாதையை மறுத்தன.“இவன் கொடியவன். நரகத்தில் வேக வேண்டியவன். நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?”“அன்னை பராசக்தி இந்த ஆன்மாவைப் பார்க்கவேண்டுமாம். உடனே சக்தி லோகத்திற்கு வாருங்கள்”யம துாதர்கள் மாரியின் ஆன்மாவை இழுத்துக்கொண்டு சக்திலோகம் சென்றனர். அங்கு அன்பென்னும் அரியாசனத்தில் அன்னை அமர்ந்திருந்தாள். யம துாதர்கள் அன்னையை வணங்கினர். “இவன் செய்த பாவத்தை அன்னையிடம் சொல்” ஆணையிட்டாள் ஒரு தேவதை. மாரியின் ஆன்மா நடப்பதை வேடிக்கை பார்த்தபடி இருந்தது. இந்த பாவிக்காக அந்த பராசக்தியே ஏன் தலையிடவேண்டும் என அதற்குப் புரியவில்லை.மாரி செய்த பாவங்களின் பட்டியலை வாசித்தான் யம துாதன்.“ஒரு ஊழிக்காலம் நரகத்தீயில் எரிய வேண்டும் என உத்தராவாகியுள்ளது தேவி”சரியாக அந்தக் கணத்தில்தான் ஒரு அற்புதம் நிகழ்ந்தது.பச்சைப்புடவைக்காரி மாரியைப் பார்த்தாள். அப்பப்பா! அவள் கண்களில் இருந்த அன்பு மாரியை அழவைத்தது. சக்திகணங்களும் அழுதன. உடனே அடுத்த அற்புதத்தை நிகழ்த்தினாள் உமையவள்.“ஏனப்பா இப்படி செய்தாய்?”மூன்றே வார்த்தைகள்தான். மூவுலகிற்கும் தலைவி பேசும்போது வெளிப்பட்ட அன்பால் மாரியின் ஆன்மா கதறிக்கொண்டிருந்தது. “எத்தனை பிறவிகள், தாயே, உங்கள் அன்பைப் பற்றி அறியாமல் வீணாக்கிவிட்டேன்! அன்பே வடிவான தாய் எனக்கே எனக்கென்று இருக்கிறாள் என்பதை மறந்ததுதான் நான் செய்த பெரும் பாவம்! உங்கள் அன்பை தாங்கமுடியவில்லை, தாயே”“செய்த தவறை உணர்ந்துவிட்டாயே! என் விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி உன்னை சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்கட்டுமா?”ஐயோ! கர்மக் கணக்கு கந்தலாகிவிடுமே என நான் நடுங்கினேன். மாரியின் ஆன்மா வீறிட்டது.“வேண்டாம்! இந்தப் பாவியால் உங்களுக்கு அவப்பெயர் வேண்டாம். எனக்கு சொர்க்கம் வேண்டாம். வேறு வரம் வேண்டும்”“கேளப்பா!” இந்த கொடியவனிடமே இவ்வளவு அன்பு காண்பிப்பவள் தன் அடியவர்களிடம் எத்துணை அன்பு காண்பிப்பாள்!“யமன் விதித்தபடி ஒரு ஊழிக்காலம் நரகில் எரிகிறேன். நரகத்தின் தாங்கமுடியாத கொடுமைகளை அனுபவிக்கும் அந்த நிலையிலும் உங்களை மறவாத நிலை வேண்டும். தண்டனையை ஒரு ஊழிக்காலத்திலிருந்து நுாறு ஊழிக்காலங்களாக மாற்றுங்கள். ஆனால் அங்கிருக்கும் ஒவ்வொரு கணமும் உங்கள் திருவடிகளை தியானிக்கும் பேற்றை வரமாகக் கொடுங்கள். உங்களிடம் எதையும் கேட்கத் தகுதியற்ற பாவி நான். தகுதியில்லாதவர்களுக்கும் கொடுக்கும் தாய் நீங்கள். பிறவாத வரம்கூட வேண்டாம், தாயே. உங்களை மறவாத வரம்தான் வேண்டும்.”பச்சைப்புடவைக்காரி வலதுகையை உயர்த்திக் காட்டினாள். மாரியை நரகத்திற்கு இழுத்துச் சென்றார்கள். மாரியின் மனதில் அந்த மகமாயியின் நினைவு நீங்காமல் இருந்ததால் நரகத்தில் மாரியின் ஆன்மா எந்தத் துன்பத்தையும் அனுபவிக்கவில்லை.காட்சி முடிந்தது. மருத்துவமனையில் என் முன் நின்ற மகா மருத்துவச்சியின் கால்களில் அழுதபடி விழுந்தேன்.“பார்த்தாயல்லவா, கர்மக் கணக்கும் பொய்க்கவில்லை. மாரியின் ஆன்மாவையும் கடைத்தேற்றியாகிவிட்டது”“ஆனால் நரகத்தில் ஒரு ஊழிக்காலம் அந்த ஆன்மா இருக்கவேண்டுமே!”“என் ராஜ்ஜியத்தில் காலம் என்பதே கிடையாது. மாரியின் ஆன்மாவைப் பொறுத்தமட்டில் ஒரு ஊழிக்காலம் என்பது ஓரிரு நொடியாக ஓடிவிடும். மாரியின் ஆன்மா இனி ஆன்மிகப் பாதையில் முன்னேறிச் செல்லும். உனக்கு என்ன வேண்டும் என்று சொல், தருகிறேன். மனிதர்களின் துன்பங்களை தீர்க்கும் சக்தி தரட்டுமா? மண்ணுலகை ஆளும் மாட்சியைத் தரட்டுமா?”“வேண்டாம் தாயே! இரண்டும் ஆபத்தானவை”“வேறு என்ன வேண்டும்?”“மாரியின் ஆன்மாவை என் ஞானகுருவாக வரித்து அது கேட்ட வரத்தையே நானும் கேட்கிறேன் தாயே! என் கர்மக் கணக்கின் காரணமாக சொர்க்கத்தில் சுகித்திருந்தாலும் சரி, நரகத்தீயில் வெந்தாலும் சரி எந்தக் காலத்திலும் உங்கள் கொத்தடிமை என்பதை மறவாத வரம் வேண்டும். உங்கள் திருப்பாத கமலங்கள் என் இதயத்தைவிட்டு அகலாத பேரின்ப நிலையே வரமாக வேண்டும்”சிரித்தபடி காற்றோடு கலந்தாள் கனகவல்லி. -தொடரும்வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com