உள்ளூர் செய்திகள்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 2 (7)

எப்படியோ அர்ஜூனனின் திக்விஜயம் பெரும் வெற்றியோடு முடிந்தது. அர்ஜூனனைப் போலவே பீமன், நகுலன், சகாதேவனும் தங்கள் திக்விஜயங்களை வெற்றிகரமாக முடித்து திரும்புகின்றனர். இதில் சேதி நாட்டு அரசனான சிசுபாலனை பீமன் வென்றது முக்கியமானது. சகாதேவன் இலங்கை சென்று நித்ய சிரஞ்சீவியான விபீஷணரிடம் கப்பம் பெற்றதும் குறிப்பிடப்பட வேண்டியது. சகாதேவனுக்கு கடோத்கஜன் துணை நிற்கிறான். இப்படி நான்கு திசைகளிலும் சென்றவர்கள் யாகத்திற்கு வர அத்தனை பேருக்கும் அழைப்பு விடுத்து திரும்பிய நிலையில் தர்மரும், கிருஷ்ணனின் வழிகாட்டுதலோடு ராஜசூய யாகத்தை நிறைவு செய்தார்.இந்த யாகத்தின் போது தர்மர், முதல் மரியாதையை கிருஷ்ணருக்குத் தர முடிவெடுத்த போது அதை சேதிநாட்டு அரசனான சிசுபாலன் ஆட்சேபிக்கிறான். இதனால் சிசு பாலனுக்கும், கிருஷ்ணனுக்கும் போர் மூண்டது. அதில் சிசுபாலன் கொல்லப்படுகிறான்.ராஜசூய யாகம் நிறைவேறிய பின், அனைவரும் நாடு திரும்புகின்றனர். துரியோதனனும் ஹஸ்தினாபுரத்திற்கு திரும்புகிறான். அவனால் யாகத்தையொட்டி நடந்த எந்த ஒரு விஷயத்தையும் ஜீரணிக்க முடியவில்லை.அவன் தந்தையான திருதராஷ்டிரன் துரியோதனனை அழைத்து, 'வேள்வி எப்படி நடந்தது?' என்று கேட்கிறான்.துரியோதனனும் பெருமூச்சோடு நடந்தவைகளை கூறத் தொடங்குகிறான். தன் தந்தையான திருதராஷ்டிரனை இந்த நேரத்தில் 'தந்தையே' என்று அழைத்துப் பேசவில்லை. மாறாக 'பாரதரே!' என்று அழைக்கிறான்.உண்மையில் இந்த நேரத்தில், 'பாரதன்' என்ற பட்டத்திற்குரிய தகுதி படைத்தவன் தர்மன் தான்! ஏனைய நால்வரும் கூட தகுதி படைத்தவர்களே.... ராஜசூய வேள்வி மூலம் இந்த தகுதியை அவர்கள் பெற்று விட்டார்கள். ஆனால், அதை துரியோதனனின் மனம் ஏற்கவில்லை என்பது தெளிவாகிறது. திருதராஷ்டிரனும், காந்தாரியும் நொடியில் துரியோதனனின் மனநிலையைப் புரிந்து கொள்ள மேலும் விஷயத்தை விவரிக்கத் தொடங்குகிறான்.துரியோதனன் தான் கண்டதை எல்லாம் கூறும் இந்த இடத்தில் தான், மகாபாரத காலத்தில் பூவுலகில் எந்தெந்த மன்னர்கள் எல்லாம் ஆட்சி செய்தனர் என்ற செய்தியை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.ஒரு வகையில் உலக வரைபடத்தைப் பார்த்துக் கொண்டு எந்தெந்த நாடு எங்கிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது போன்றது இது. துரியோதனன் தன் தந்தையிடம் சொல்வதைக் கேளுங்கள்.''பாரதரே! அங்கே நடந்ததை நான் இமைக்கக் கூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். தர்மனை இந்த பூவுலகில் சக்கரவர்த்தி என்று ஒப்புக் கொண்டு வரிசையில் நின்று கொண்டு அரசர் பெருமக்கள் எல்லாம் கப்பங்களைச் செலுத்தினர்.அப்படி நின்ற அரசர்களின் வரிசை ஒருபுறம், அவர்கள் கொண்டு வந்த கப்பப் பொருட்களின் வரிசை மறுபுறம்... அவைகளை நான் இருந்த இடத்தில் இருந்து முழுமையாகப் பார்க்க முடியவில்லை. குறிப்பிட்ட தூரம் வரை தான் என்னால் பார்க்க முடிந்தது.இந்த கப்பச் சடங்கிற்காகவே ஒரு பெரிய மைதானத்தை நகுலனும், சகாதேவனும் தேர்வு செய்திருந்தனர். அந்த மைதானம் முழுவதும் பந்தல் அமைத்திருந்தனர்.யதுகுலத்து கண்ணன் மேற்பார்வை செய்து, பலருக்கும் கட்டளை பிறப்பித்த வண்ணம் இருந்தான். அர்ஜூனன் தர்மன் அருகில் இருந்து கொண்டு கப்பம் கட்ட வந்த மன்னர்களை எல்லாம் அறிமுகம் செய்து வைக்க, எனது அருமைச் சித்தப்பாவும், பாண்டவர்களின் பாசத்திற்குரியவருமான விதுரர், அர்ஜூனனுக்கு துணையாக உதவி செய்து கொண்டிருந்தார்.ஆடுகளின் ரோமம், பெருச்சாளி, பூனைகளின் தோல் கொண்டு பொன்னாலான ஜரிகையால் நெய்யப்பட்ட போர்வை, சால்வைகளை காம்போஜ ராஜன் கொடுத்தான். அடுத்த திரிகர்த்த தேசத்தார் 300 குதிரைகளையும், 400 ஒட்டகங்களையும் பரிசளித்தான்.குவிந்தன் என்னும் பிராமணன், ஒரு அபூர்வ சங்கினை தர்மனிடம் தர அர்ஜூனன் அதை வாங்கி உற்சாகமாக ஊதினான். அந்த முழக்கம் என்னை மூர்ச்சிக்க வைத்து விட்டது. பிராமணனுக்கு தர்மனும் தன் பரிசாக 500 ரிஷப காளைகளைப் பரிசாக அளித்தான்.அடுத்து காஷ்மீர தேசத்து மன்னன் திராட்சை ரசம், அபூர்வ பழ வகைகள், கம்பளிகளையும் அளித்தான். யவனர்கள் மலைநாட்டு குதிரை, விலையுயர்ந்த சால்வைகளை அளித்தனர். கலிங்க மன்னன் 'ச்ருதாயு' என்பவன் முத்து, ரத்தினங்களை குவித்து வைத்தான். அங்க நாட்டரசன் அழகிய பணிப்பெண்களை பரிசாக்கினான். வங்க நாட்டு மன்னன் பொற்காசுகளை கொட்டி வைத்தான்.பாண்டிய மன்னன் 96 பார அளவிற்கு சந்தனக் கட்டைகளையும், பொற்காசுகளையும் வழங்கினான். சோழராஜன், கேரள மன்னர்கள் தன் பங்கிற்கு சந்தனம், முத்துக்களை வழங்கினர். அச்மக ராஜன் குடம் குடமாக பால் தரும் 10,000 பசுக்களை கொடுத்தான். சிந்து நாட்டரசன் 20,000 குதிரைகளையும், ஸெளவீர தேசத்து மன்னன் 300 யானைகளையும், அவந்தி நாட்டரசன் 14,000 பணியாளர்களையும் அளிக்க வெகுநேரம் காத்திருந்தனர்.தசார்ண தேசம், சூரசேனம், விதேகம், கோசலம், பாருகச்சம் ஆகிய தேச மன்னர்களும், திருமர், பாரதர், காசியர், கிராதகர் போன்ற அரசர்களும் வெள்ளாடு, செம்மறியாடு, பசு, கோவேறு கழுதை, ஒட்டக மந்தைகளை கப்பமாக அளிக்க காத்திருந்தனர். பிராக் ஜ்யோதிஷ மன்னன் பகதத்தன், பீமனுடன் மோதி தோல்வி கண்டதால், உண்டான காயம் கூட ஆறாத நிலையில் நின்றது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இவர்கள் போக, அயல் தேசத்தவரான பர்ப்பயேர், சைலேயர், சீனர், ஹூனர், கஷர், காசர், பிராக்கோடர், நாடகேயர், நாபிதர், ரோமகர், ஊருமகர், துஷாரர் போன்றவர்கள் அவரவர் நாட்டு விளைபொருளோடு அணிவகுத்து நின்றது கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. உண்மையில் குபேரன் வந்தால் கூட நடந்ததைக் கண்டு மூர்ச்சையாகி இருப்பான். அங்கு குவிந்த பரிசுப் பொருட்களில் அபூர்வமானவற்றையும் கண்டேன். எறும்புகள் புற்றில் இருந்து கொண்டு வரும் 'பிபீலதம்' என்னும் அபூர்வ தங்கத்தை, தீர்க்கவேணு என்னும் அரசன் மரக்காலில் அளந்து கொடுத்தான். கறுத்த, வெளுத்த வால் கொண்டகவரிமான்கள், இமயமலையில் விளைந்த தேன், கைலாயத்துக்கு வடக்கில் விளையும் அபூர்வ மூலிகையை வியூடமால்யர்கள் என்பவர்கள் வாரி வழங்கினர். துரியோதனன் சொல்வதைக் கேட்ட அவர்கள் பிரம்மித்து நின்றனர். களைத்துப் போன துரியோதனனோ பழரசம் பருகினான். பின் மீண்டும், 'திரவுபதியின் தந்தை துருபதன் 14,000 தாசிகளையும், 26 யானைகள் பூட்டிய தேரையும் வழங்கியதை விட்டு விட்டேனே!' என்று சொல்ல, காந்தாரி குறுக்கிட்டு, ''கண்ணன் கப்பமாக என்ன கொடுத்தான்?'' எனக் கேட்டாள்.- தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்