தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 3 (3)
பரசுராமர் பிருகு தீர்த்தத்தில் நீராடி நன்மை பெற்றதாக லோமசர் கூறவும், பாண்டவர்களும் அந்த தீர்த்தத்தில் நீராடினர்.லோமசர் மூலமாக கடந்த காலத்தில் நிகழ்ந்த அரிய சம்பவங்களை அறிந்து கொண்டதற்காக, தர்மர் நன்றி கூறினான். நகுல, சகாதேவர்கள் தங்களின் மனம் அமைதி பெற்றதாக கூறினர். பீமனும் அதை வழிமொழிந்தான். திரவுபதியும் இதை ஆமோதித்தவளாய், ''வலியே வலிமை தருவதாக உள்ளது. காண்டவப் பிரஸ்தத்தில், நாம் நல்லாட்சி நடத்திக் கொண்டிருந்தால், இந்த உலகத்தின் ராஜாக்களுள் ஒருவராகத் தான் இருந்திருப்போம். இத்தனை அரிய தகவல்கள் நமக்கு தெரிந்திருக்காது. எனவே, வனவாச காலத்தை, ஒரு வரப்பிரசாதமாகவே நான் கருதுகிறேன் ,'' என்றாள்.இதையடுத்து தர்மன், ''மகரிஷியே! அகத்தியர் சிரஞ்சீவியாயிற்றே... இப்போதும் அவர் சஞ்சாரம் செய்கிறாரா? '' என்று தர்மன் கேட்கவும், லோமசர் அகத்தியர் பற்றிய எண்ணத்தில் மூழ்க ஆரம்பித்தார்.''பாண்டவர்களே! அகத்தியர் பற்றி முழுமையாக அறிய விரும்பும் உங்களின் எண்ணம் எனக்கு மனநிறைவு தருகிறது. வலாசுரன், வாதாபி மட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான அசுரர்கள் அழிய அவர் காரணமாக இருந்தார். குறுமுனியான அவர் ஏழுகடலையும் கமண்டலத்தில் அடக்கியவர். பின் அதைக் குடித்து ஜீரணமும் செய்தவர்,'' என்று பீடிகையுடன் தொடங்கினார். பாண்டவர்களும் அதுபற்றி கேட்கத் தயாராயினர்.'முன்னதாக விருத்திகாசுரன் என்னும் அசுரனைப் பற்றி அறிய வேண்டியது அவசியம். இவன் எப்படி தோன்றினான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். திரேதாயுகத்தில், விண்ணிலுள்ள இந்திரன் சபை கேளிக்கை நிறைந்ததாக இருந்தது. ஒருநாள் ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் நடனமாடியதில், இந்திரன் தன்னையே மறந்து விட்டான். இந்த வேளையில், பிரஹஸ்பதி என்னும் தேவகுரு சபைக்கு வந்தார். பலத்த குரலில், இந்திரனை அழைத்தும், அவன் நடனத்திலேயே கண்ணாய் இருந்தான். இதனால், மனம் வெதும்பிய குரு, இனி இந்திரசபைக்கே வரமாட்டேன் என்று சொல்லிப் புறப்பட்டார்.குருவருள் இருந்தால் தானே செல்வம் நிலைக்கும். குரு விலகியதால், இந்திரனை இருள் சூழ்ந்தது. அவனது தேஜசும் குறையத் தொடங்கியது. கலக்கமுற்ற இந்திரன், குருவைத் தேடினான். அவரோ, பாதாள லோகம் சென்று விட்டார். தேவர்களை சோர்வு ஆட்கொண்டது. இந்திரன் ஒரு முடிவுக்கு வந்தவனாய், வியாழ குருவுக்கு பதிலாக வேறொரு குருவை ஏற்று, நலம் வேண்டி வேள்வி செய்யும் முடிவுக்கு வந்தான்.பாண்டவர்கள் அதிர்ச்சியுடன், 'குரு பகவான் விலகினால், இப்படியும் கூட ஆகுமா?'' என்று கேட்டனர்.'ஆம். நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானால் செல்வம், புகழ், ஆரோக்கியம், மகிழ்ச்சி எல்லாம் கிடைக்கும். அவர் பார்வை பட்டால் போதும். அனைத்தும் வசமாகும். இப்படி ஒரு வல்லமை அவருக்கு இருக்கிறது.'' 'இப்படிப்பட்டவரை இந்திரன் அலட்சியப்படுத்தலாமா?'' 'என்ன செய்வது? கேளிக்கையால் இந்திரனும் சிரமத்திற்கு ஆளானான் என்று வருங்காலம் தெரிந்து கொள்ள வேண்டாமா?'' 'அப்படியானால், இவை எல்லாம் திட்டமிட்ட செயல்பாடுகளா?'''ஒரு கோணத்தில் பார்த்தால், திட்டமிட்டது தான். இன்னொரு கோணத்தில் ஒன்றைத் தொட்டு ஒன்று என்ற இயல்பான போக்கு என்றும் கொள்ளலாம்'' 'முடிவாக என்னவாயிற்று?'' 'இந்திரன், புதிய குருவாக விஸ்வரூபன் என்ற அசுரச் சார்பானவரைக் குருவாக ஏற்றுக் கொண்டான்'' 'ஆச்சரியமாக இருக்கிறதே?'''அவனுக்கு வேறு வழியில்லை. விஸ்வ ரூபனுக்குத் தான் தகுதி அனைத்தும் இருந்தது'''பிறகு?'''பிறகென்ன.. அமரலோகத்தின் நலனை உத்தேசித்து, இந்திரன் விஸ்வரூபனைக் கொண்டு வேள்வி புரிந்தான். மூன்று சிரசுகளைக் கொண்ட இந்த விஸ்வரூபன், துவட்டா என்பவனின் மகன்'''மூன்று சிரசுகளா?'''ஆம்.... தேவர்களுக்கு எதிரானவனும் கூட...'''எதிரியோடு இந்திரன் எப்படி இணைந்தான்?'''குருவருள் விலகினால் தீயதெல்லாம் நல்லது போலத் தோன்றும். விஸ்வரூபனைக் கொண்டு வேள்வி புரிந்தான் இந்திரன். மனதில் அசுரர்களையும், உதட்டில் தேவர்களையும் சொல்லி விஸ்வரூபன் அவிர்பாகம் அளித்தான்.'''முடிவாக என்ன நடந்தது?'''முடிவில் இந்திரன் விழித்துக் கொண்டான். நன்மை செய்வது போல, துரோகம் செய்த விஸ்வரூபனின் மூன்று தலைகளையும் வஜ்ராயுதத்தால் வெட்டி விட்டான். இதனால், அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. அதை தேவர்கள், பெண்கள், தண்ணீர், மரம், மண் என ஐந்து அம்சங்கள் மீது ஏற்றி விலகிக் கொண்டான். அது முதல் தேவர்களுக்கு அச்சமும், பெண்களுக்கு மாதவிடாயும், தண்ணீரில் நுரையும், மரத்தில் பிசினும், மண்ணில் உவர்தன்மையும் உருவாயிற்று.''- இதைக் கேட்ட திரவுபதியின் மனம் அதிர்ச்சி அடைந்தது. ''சரி....பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விலக்கு பெற்ற இந்திரனிடம், வியாழ குரு திரும்ப வந்தாரா?'' ''அது எப்படி வருவார்? .... இந்திரனுக்கு இதன் பிறகே கடுமையான சோதனைகள் காத்திருந்தன'' என்றார் லோமசர். இதையடுத்து மீதிக்கதையையும் கேட்க பாண்டவர்கள் ஆர்வமாயினர். - தொடரும் இந்திரா சவுந்தர்ராஜன்