உள்ளூர் செய்திகள்

தெரிந்த பாரதம், தெரியாத பாத்திரம்!-2 (9)

சாபம் கொடுத்து விட்ட நிலையில் மைத்ரேயர் கோபமாக அவையை விட்டுப் புறப்பட திருதராஷ்டிரன் அவரைத் தடுத்தான்.''மகரிஷி....! நில்லுங்கள்.... உங்களை நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இப்படி நீங்கள் சபித்தது என்னை கலக்கமுறச் செய்து விட்டது. துரியோதனன் பக்குமில்லாதவன். அவன் பேச்சைத் தாங்கள் பொருட்படுத்தியிருக்கக் கூடாது. தயவு செய்து இந்த சாபத்திற்கு விமோசனமளியுங்கள். உங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்,'' என்றான்.விதுரனும் எழுந்து அதை வழி மொழிந்தான்.''மைத்ரேயரே! தங்களைப் போன்ற மகரிஷிகள் வரத்தையே அருள வேண்டும். சாபமிட்டு இப்படியா தங்கள் அருட்சக்தியை குறைவு படுத்திக் கொள்வது? அருள்கூர்ந்து சாபத்திற்கான விமோசனத்தைக் கூறுங்கள்!'' என்றான்.மைத்ரேயரும் தயங்கி நின்றார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ என சபையே எதிர்பார்த்து நின்றது.''கவுரவர் தலைவா! நீதிநெறிக்கு வித்தான விதுரா! நீங்கள் இருவரும் பணிவோடு கேட்டுக் கொண்டதால் ஒருவிஷயம் சொல்கிறேன். பெரிய மனதோடு பாண்டவர்களுடன் துரியோதனன் சமாதானமாகப் போக முற்பட்டாலே போதும். என் சாபம் பலிக்காது. அவ்வாறு இல்லையெனில் என் சாபம் நடந்தே தீரும்,'' என்ற மைத்ரேயர் புறப்பட்டார். அவரை தடுத்த விதுரர், ''முனி சிரேஷ்டரே! சமாதானம் தான் தீர்வா?''''ஆம்... அது மட்டுமே தீர்வு. எந்த நிலையிலும் பாண்டவர்கள் வஞ்சிக்கப்படக் கூடாது. இந்த சபையில் அறம் தெரிந்த சான்றோர்களுக்கு நான் சொல்வதன் அர்த்தம் புரிந்திருக்கும். அவர்கள் கவுரவர்களிடம் செஞ்சோற்றுக்கடன் பட்டு விட்டதால் வாய் மூடி மவுனியாகி விட்டனர். ஆனால், நான் அப்படிப்பட்டவன் அல்ல. என் விருப்பப்படி சமாதானம் இல்லையென்றால், துரியோதனன் தொடை பிளவுபட்டு துர்மரணம் நிகழ்வது நிச்சயம். அவனது மரணம் அசுர சகோதரர்களான பகாசுரன், கீர்மீரன் ஆகியோரின் மரணத்தை விடவும் கொடியதாக இருக்கும் என்பது ஞாபகமிருக்கட்டும். இனி என்னைத் தடுக்க வேண்டாம்'' - என்ற மைத்ரேய மகரிஷி அந்த அவையை விட்டே சென்று விட, விதுரன் கலக்கத்துடன் துரியோதனனைப் பார்த்தான்.உடனே சகுனி, '' என்ன விதுரா... சாபத்தை எண்ணி கலங்குகிறாயா?'' ''நீ கலங்கவில்லையா சகுனி...?''''முனிவர்களின் சாபமெல்லாம் சாதாரணமான கர்மப்பிறப்பு எடுத்தவர்களுக்குத் தான். கலயத்தில் நூறுபேர் சூழப் பிறந்த துரியோதனனை எதுவும் செய்யாது....'' ''ஹூம்.... இப்படி ஒரு எண்ணமா உனக்கு? அப்படி பார்த்தால் பகாசுரன், கீர்மீரன் இருவரும் அசுரகுடியில் மாயாவிகளாகப் பிறந்தவர்கள். அவர்களைப் பீமன் பந்தாடி விட்டான். அதனால், துரியோதனன் தூசுக்குச் சமம் என்பதை மறந்திடாதே....'' பகாசுரன், கீர்மீரன் குறித்து விதுரன் பேசவும் திருதராஷ்டிரனுக்கு பகீர் என்றிருந்தது.''விதுரா... பகாசுரனை நான் அறிவேன். அவன் அழிந்த விபரமும் அறிவேன். அது யார் கீர்மீரன். அவன் எப்படி பீமனால் கொல்லப்பட்டான்?'' என்று கேட்டான்.விதுரனும் சொல்லத் தொடங்கினான்.''அரசே...! காம்யகம் என்னும் கொடிய வனத்தில் பகாசுரனின் சகோதரனான கீர்மீரன் இருந்தான். அதிக பலம் கொண்ட அவன் ஒரு மாயாவி. பெரிய மலையாக, சிறிய மடுவாக எப்படி வேண்டுமானாலும் காட்சியளிப்பான். மடுவாக இருக்கும் போது யானைகளும், எருமைகளும் தண்ணீர் குடிக்க வரும். அப்போது அவைகளை அப்படியே அள்ளி விழுங்கி விடுவான். அவனுக்குப் பசித்தால் ஒரு வேளைக்கு பத்து யானையும், பத்து எருமையும் தேவைப்படும். அதுபோக ஒரு கிணறு கொள்ளும், தண்ணீரும் தேவை. இந்த கீர்மீரனைத் தான் பீமன் போராடிக் கொன்றான். தன் சகோதரனான பகாசுரனைப் பீமன் கொன்று விட்டான் என்ற கோபத்தில் இருந்தான் கீர்மீரன். பாண்டவர் ஐவரும் திரவுபதியோடு காம்யக வனத்தில் அவனிடம் வசமாகச் சிக்கிக் கொண்டனர். பழி வாங்கும் உணர்வோடு மூன்று நாள் யுத்தம் நடந்தது. பெரிய மரங்களை எல்லாம் வேரோடு பிடுங்கி ஆயுதமாகப் பயன்படுத்தினான் பீமன். பீமனுக்குத்துணையாக அர்ஜூனன் வந்தபோது, ''தம்பி... இவனை என்கையால் கொன்றால் தான் திருப்தி,'' என்று கூறி, மலை போல நின்ற கீர்மீரனின் கால்களைப் பற்றி நூறு முறை சுழற்றி எறிந்தான். கீர்மீரன் வதம் நடந்தபின் அங்கிருந்த ரிஷிகளும், ரிஷிபத்தினிகளும் பாண்டவர்களை மனதார வாழ்த்தினர். மைத்ரேயர், கீர்மீரனோடு துரியோதனனை ஒப்பிட்டதை நானே எதிர்பார்க்கவில்லை,'' என்று முடித்தான் விதுரன்.விதுரனின் விளக்கம் துரியோதனனையே கலங்கச் செய்தது. அப்போது சகுனி, ''துரியோதனா... அச்சப்படாதே! பகாசுரன், கீர்மீரன் என்று சொல்லி விதுரன் உன்னை மிரட்டப் பார்க்கிறான். பீமன் பலசாலி தான்.. ஆனால், அவனை விட நீயே பெரும் பலசாலி... அதுவுமில்லாமல், அஞ்ஞாத வாசத்தின் போது பாண்டவர்களை நாம் அடையாளம் கண்டு விட்டால் தீர்ந்தது சிக்கல். அதன்பின் இன்னொரு 12 ஆண்டுகள் வனவாசிகளாகத் திரிந்தாக வேண்டும். எனவே கவலையை விடு,'' என்றான்.சகுனியின் பேச்சு துரியோதனனுக்கு ஆறுதலாக இருந்தது.இதனிடையே அசுரவதம் முடிந்ததால், காம்யக வனம் ரிஷிகள் தவம் செய்ய ஏற்ற இடமாக மாறியிருந்தது. அங்கு தற்காலிக குடில் அமைத்து பாண்டவர்கள் வசிக்கத் தொடங்கினர். அங்கு ஒருநாள் திரவுபதி சோகமாக மரத்தடியில் அமர்ந்திருந்தாள்.தர்மர் அவளிடம், ''திரவுபதி .... இங்கே தனிமையில் என்ன செய்கிறாய்?'' ''ஒன்றுமில்லை... நடந்தவற்றை எல்லாம் அசை போட்டுப் பார்த்தேன். எல்லாமே கனவு போலிருக்கிறது,''. ''நடந்தவை எப்படியிருந்தால் என்ன... இனி நடக்க வேண்டியது நல்லதாக அமைந்தால் அது போதும்.''''நானும் அது குறித்தே சிந்தித்தபடி இருக்கிறேன். குறிப்பாக நமக்கு இந்த கதி நேர்ந்ததற்கு, நாம் கிருஷ்ணப்பிரபுவை மறந்ததும் ஒரு காரணம்!'' என்றாள் திரவுபதி. அதைக் கேட்ட தர்மர் திகைத்தார். அவள் சொன்ன உண்மை தர்மரை மவுனமாக்கியது. அவள் மேலும், '' துரியோதனன் தனக்குப் பதிலாக சகுனியை சூதாடச்செய்தான். அதைப் போல நாமும் உங்களுக்குப் பதிலாக கிருஷ்ணபிரபுவை அழைத்திருக்கலாம். இது தோன்றாமல் போனது கூட விதிப்பாடு தானோ?'' என்று கேட்கவும் தர்மரும் தலையசைத்தார்.''அந்த துவாரகாபதி கிருஷ்ணன் அருகில் இருந்தால் நிச்சயம் நல்லதே நடந்திருக்கும். அவருக்கும் நம் துன்பம் தெரியாமலேயே போய் விட்டது,'' என்ற நேரத்தில் ''திரவுபதி... திரவுபதி....'' என கிருஷ்ணனின் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். அங்கே ரதத்தில் இருந்து கிருஷ்ணன் வந்து கொண்டிருந்தான்.கிருஷ்ணன், ''தர்மா! நடந்ததை நான் அறிவேன். திரவுபதி வருந்துவது போல நீங்களும் என்னை அழைக்கவில்லை. என்னாலும் உங்களை நினைக்க முடியவில்லை. இதற்கு காரணம் யார் தெரியுமா?'' என்று கேட்ட கிருஷ்ணனே ''சால்வன் தான்'' என்று பதிலும் சொன்னான்.- தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்