உள்ளூர் செய்திகள்

திருடனைத் திருத்திய கருணை

ஒருமுறை திருச்சி அருகிலுள்ள கிராமம் ஒன்றில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். அன்றிரவு அங்குள்ள அம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. அதன்பின் திறந்த வெளியில் தியானம் செய்தார். கண் விழித்ததும் சீடர் ஒருவரை அழைத்து குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி, ''இருளில் நடமாட்டம் இருப்பது போல தெரிகிறதே'' என்றார். தொண்டரும் செல்ல தயக்கத்துடன் அங்கு சிலர் நின்றிருந்தனர். அவர்களை அழைத்து வந்த போது 'பசியுடன் இருக்கும் இவர்களுக்கு நைவேத்ய பிரசாதம் கொடுங்கள்' என்றார். அதைச் சாப்பிட்டு பசியாறினாலும் அவர்களின் முகத்தில் குற்ற உணர்வு வெளிப்பட்டது. ஏனென்றால் பூஜையில் இடம் பெற்ற தங்கம், வெள்ளிப் பொருட்களை அவர்கள் திருட திட்டமிட்டிருந்தனர். மஹாபெரியவர் நீண்ட நேரம் தியானம் செய்ததால் இருளில் மறைவாகக் காத்திருந்தனர். தீயநோக்கமுடன் வந்த தங்கள் மீதும் பரிவு காட்டிய மஹாபெரியவரின் கருணையை எண்ணி கண்ணீர் சிந்தினர். மற்றொரு முறை தீபாவளியை முன்னிட்டு ஆசி பெற வந்த பக்தர்கள் சிலர், நிறைய வேட்டி, துண்டுகளை மஹாபெரியவருக்கு சமர்ப்பித்தனர். அவற்றை ராமகிருஷ்ணன் என்ற தொண்டரை அழைத்து எடுத்து வைக்குமாறு கூறினார். மூடையாகக் கட்டி மடத்தின் பின்புறம் ஓரிடத்தில் மறைவாக வைத்தார். அன்று மாலையில் மஹாபெரியவர், வேட்டிகளை எடுத்து வரச் சொன்னார். ஆனால் அவற்றைக் காணவில்லை. பரபரப்புடன் நடந்ததைச் சொல்லி வருந்தினார்.திருடியவன் யார் என ஊகித்து, ''மடத்திலுள்ள பசுக்களை பராமரிப்பது யார்'' எனக் கேட்டார். குறிப்பிட்ட ஒருவனின் பெயரை சொன்னதும் மஹாபெரியவர், '' இனிப்பு, பட்டாசுடன் அவனது வீட்டிற்கு போய், 'வேட்டி மட்டும் போதாது; இனிப்பும், பட்டாசும் இருந்தால் தான் தீபாவளி சிறப்பாக இருக்கும்' எனச் சொல்லி விட்டு வா'' என்றார். தொண்டரும் சென்றார். திருடியவரோ சுவாமிகளின் பெருந்தன்மையை எண்ணி தலை குனிந்தார். மடத்திற்கு ஓடி வந்து, ''இனி இப்படி கீழ்த்தரமாக நடக்க மாட்டேன்'' என வருந்தினார். மஹாபெரியவரும் மன்னித்து பிரசாதம் வழங்கினார். காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்எஸ்.கணேச சர்மாganesasarma57@gmail.com