தேசியமும் தெய்வீகமும்
மகாபெரியவர் ஒருசமயம் மேற்கு வங்காள மாநிலம், மித்னாபூருக்கு விஜயம் செய்தார். அவர் அங்கு வந்த தகவல், சிறைச்சாலையில் இருந்த கைதிகளுக்கு தெரிந்து விட்டது. அவர்கள் எல்லாருமே, தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள். தேசபக்தியுடன் இந்து மத உணர்வும் அவர்கள் ரத்தத்தில் கலந்திருந்தது. அவர்களில் பட்டதாரிகள், மாணவர்கள், வக்கீல்கள், டாக்டர்களும் இருந்தனர். தேசத்தின் நலனைப் பெரிதெனக் கருதி, சிறைக்கம்பிகளுக்குள் சிக்குண்டு போனவர்கள்.அவர்களில் பலருக்கு ஸ்ரீசுவாமிகளை எப்படியாவது தரிசித்து விடவேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. அவர்கள் சிறை அதிகாரியைச் சந்தித்து, ''நாங்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ள மகாசுவாமிகளைத் தரிசிக்க விரும்புகிறோம். நீங்கள் என்ன நிபந்தனை விதித்தாலும், அதற்கு கட்டுப்படுகிறோம். எங்களை வெளியே அனுப்ப வேண்டும்,'' என்று கோரிக்கை விடுத்தனர்.அதிகாரியும் சில நிபந்தனைகளை விதித்து, மாலை ஆறுமணிக்குள் நிச்சயம் ஜெயிலுக்கு வந்து விட வேண்டும் எனக்கூறி அனுமதி வழங்கினார். எல்லாக் கைதிகளும் அவரிடம் அவ்வாறே செய்வதாக உறுதி அளித்து, மகாசுவாமிகள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தனர். அதற்கே மாலை 5.30 மணி ஆகி விட்டது. சுவாமிகள், அப்போது தான் நித்ய பூஜையை முடித்து விட்டு, சிறிது ஓய்வு எடுப்பதற்காக, ஒரு தனி இடத்திற்குச் சென்றிருந்தார்.கைதிகள் எல்லாரும் மடத்து ஊழியர்களிடம் தாங்கள் அவசரமாக ஜெயிலுக்குத் திரும்ப வேண்டும் என்பதால், சுவாமியை உடனே தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்கள். ஊழியர்களும், ''இன்னும் பத்து நிமிடம் மட்டும் பொறுங்கள். சுவாமி தரிசனம் தந்து விடுவார்,'' என உறுதியளித்தனர்.ஆனால் கைதிகளோ''ஐயா! நாங்கள் ஆறு மணிக்குள் சிறைக்கு செல்லா விட்டால், அதிகாரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக வேண்டியிருக்கும். அப்படி நாங்கள் உயிர்விடவும் அஞ்சவில்லை. ஆனால், ஆறு மணி வரை சுவாமிகள் வராவிட்டால், அவரது தரிசனம் கிடைக்காமலேயே இறந்து போவோமே என்று தான் வருந்துகிறோம்,'' என்று உருக்கமாகக் வேண்டுகோள் வைத்தார்கள். இதற்குள் நேரம் ஆறுமணியை நெருங்கி விட்டது. கைதிகள் வருத்தத்துடன் சிறை நோக்கி நகர்ந்தார்கள். அப்போது, சுவாமிகள் வெளியே வந்து ஊழியர்களிடம், ''தரிசனத்துக்கு யாராவது வந்தார்களா?'' என்று கேட்டார்கள். கைதிகள் சிலர் வந்து இப்போது தான் போகிறார்கள் என்ற தகவலை ஊழியர்கள் சொன்னார்கள்.அவர்களை உடனே அழைத்து வாருங்கள் என்று ஊழியர்களை அவசரப்படுத்தினார் மகாசுவாமி. ஊழியர்களும் ஓடிச்சென்று அவர்களை அழைத்து வந்தனர். எல்லாரும் சுவாமியின் திருப்பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தார்கள். இனி உயிரே போனாலும் பரவாயில்லை என்ற பெருமித உணர்வு அவர்களின் முகங்களில் தெரிந்தது.அவர்கள் சுவாமியிடம், ''இந்த தேசம் அந்நியர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது. மக்கள் சிரமப்படுகிறார்கள். நாடு சுதந்திரம் அடைய சுவாமிகள் அனுக்கிரஹம் புரிய வேண்டும்,'' என்று வேண்டினார்கள். பிறகு சுவாமியிடம் உத்தரவு பெற்று சிறைக்குத் திரும்பினார்கள். அந்தக் கைதிகள் தங்களுக்காக சுயநலமுள்ள கோரிக்கைகளை வைக்காமல், தேசத்தின் நலனுக்காக கோரிக்கை வைத்தது கண்ட மகாசுவாமிகள் மகிழ்ந்தார்.