உள்ளூர் செய்திகள்

திருப்பணி செய்த நாயன்மார்

மார்ச் 20, 2023 - தண்டியடிகள் நாயனார் குருபூஜைசோழ நாட்டிலே சிறந்து விளங்கிய தலம் திருவாரூர். இங்கு பிறவிலேயே கண் பார்வையை இழந்த தண்டியடிகள் என்னும் சிவனருட் செல்வர் வாழ்ந்து வந்தார். தினமும் அடிகள் கமலாலய திருக்குளத்தில் நீராடி, அகக்கண்களால் திருவாரூர் தியாகேசப்பெருமானை வழிபட்டார். அப்போது சமணர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்ததால், குளத்தின் அருகே மடங்களை கட்டி சமயத்தை பரப்பினர். இதனால் குளத்தின் பரப்பும், கொள்ளளவும் குறைந்து கொண்டே வந்தது. இதனால் வருந்திய அடிகள், அதன் ஆழத்தை பெரிதுபடுத்த நினைத்தார். அதற்காக குளத்தின் நடுவிலும், வெளியே கரையிலும் கம்புகளை நட்டு அதில் கயிற்றினைக் கட்டினார். பின் மேட்டுப்பகுதி மண்ணை எடுத்து கூடையில் நிரப்பி, கயிற்றைப் பிடித்துக் கொண்டே நடந்து சென்று வெளியே கொட்டினார். இதைக் கண்ட சமணர்கள், ''உங்களது செயலால் மண்ணில் வாழும் உயிரினங்கள் அழிந்து விடும். உடனே நிறுத்துங்கள்'' என தடுத்தனர். அதற்கு அவர், ''கல்லில் உள்ள தேரைக்கும், கருவில் உள்ள உயிருக்கும் நல்லுணர்வு தந்து காக்கும் சிவபெருமானுக்கு மண்ணில் வாழும் உயிர்களையும் பாதுகாக்கத் தெரியும். இப்பணியால் தங்களுக்கும் தீங்கு நேராது'' என்றார். ''உங்களை பார்வையற்றவர் என்றுதான் எண்ணினோம். ஆனால் காதும் மந்தம் போல் தெரிகிறதே'' என கேலி செய்தனர். ''சிவபெருமானின் திருவடியை தினமும் நான் அகக் கண்களால் கண்டு களிக்கிறேன். அவரது திருநாமத்தை நாவால் சொல்கிறேன். கோயிலில் ஒலிக்கின்ற வேத முழக்கத்தை காதால் கேட்கிறேன். அவரது அருளையும், அன்பையும் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கிறேன். நீங்கள்தான் கண்ணிருந்தும், காதிருந்தும், நாவிருந்தும் பயனற்றவர்கள்'' என மறுமொழி கூறினார் அடிகள். இவரது பேச்சைக் கேட்டவர்கள் சிரித்தனர். கோபப்பட்ட அடிகள், ''சிவபெருமானின் திருவருளால் நான் கண் ஒளி பெற்று, நீங்கள் ஒளி இழந்தீர்களானால் என்ன செய்வீர்கள்'' எனக்கேட்டார். ''அவ்வாறு நடந்தால், இந்த ஊரிலேயே இருக்க மாட்டோம்'' என கோபத்துடன் கூறியவர்கள், கூடை, கயிற்றினை அறுத்து எறிந்தனர். வருந்திய அடிகள் திருவாரூர் தியாகேசப்பெருமானை வணங்கி, இரவு கவலையோடு துாங்கினார். கனவில் தோன்றிய சிவபெருமான், ''அன்பனே! மனம் கலங்காதே. உம்மைப் பழித்தது எம்மை பழித்ததற்கு சமம். உமது வாக்குறுதியை நிறைவேற்றுவோம்'' என திருவாய் மலர்ந்தார். அதேபோல் அரசர் கனவிலும் தோன்றியவர், ''தனது தொண்டரின் கருத்தை நிறைவேற்றி அவனுக்கு உதவுவாயாக!'' என கட்டளையிட்டார். பொழுது புலர்ந்தது. திருவாரூர் சென்ற சோழ அரசர், நடந்தவைகளை தண்டியடிகளை சந்தித்து கேட்டறிந்தார். பின் சமணர்களை அழைத்து விசாரித்தார். பின் தண்டியடிகளிடம், ''அருந்தவத்தீர். சிவபெருமானின் வேண்டி கண்பார்வை பெற்று காட்டுவீராகுக'' என பயபக்தியுடன் கேட்டார். அவரும் ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லி குளத்தில் மூழ்கினார். பின் எழும்போது அவருக்கு கண்ணொளி கிடைத்தது. அதே சமயம் சமணர்களுக்கு கண்பார்வை பறி போனது. அரசரும் அவர்களை ஊரில் இருந்து வெளியேற்றினார். தியாகேசப்பெருமானை கண்குளிர வழிபட்டார் தண்டியடிகள். பின் பல திருப்பணி செய்து இறுதியில் சிவபெருமானின் பாதத்தை அடைந்தார்.