உள்ளூர் செய்திகள்

கோதாவிலும் இறங்குவாள் நம் கோதை நாயகி

கோதை...அழகான தமிழ்ப்பெயர். 'கோதை' என்றால் 'நல்வாக்கு அருள்பவள்'. ஆம்...அவள் வாயில் தானே அழகான திருப்பாவை முத்து முத்தாக வந்தது.'மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவார்!' என்று அவள் பாட ஆரம்பித்தால், கேட்காத காது கூட சற்று நேரம் திறந்து கொள்ளுமே! 'வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து நாரணன் நம்பி நடக்கின்றான் இன்று' என்று அவள் வாய் திறந்தால், நம் திறந்த வாய் மூடாமல் அப்படியே உள் வாங்கிக் கொண்டிருக்குமே!அந்தக் கோதை என்ற சொல் 'கோதா' என்ற வடசொல்லில் இருந்து வந்திருக்க வேண்டும். 'கோதா' என்றால் நம் பாஷையில் 'சண்டை' என்று கூட சொல்லலாம். இது கூட அவளுக்கு ஒத்து வருவது தான். அந்த நாராயணன் அவளை என்ன பாடுபடுத்தினான்! அவள் தன் காதலை வெளிப்படுத்த வெளிப்படுத்த அவன் அவளைச் சோதிக்கும் பொருட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போனானே! விட்டாளா நம் வீரத்தலைவி! அவனோடு கோதாவில் இறங்கி அவனை அடைந்தே விட்டாள்.கோதை என்ற அந்த திருச்செல்வி பூமாதேவியின் அவதாரம். அவளை லட்சுமி தாய் தன் மடியில் சுமந்து வந்து ஒரு தோட்டத்தில் போட்டு விட்டு போய்விட்டாள். அந்த நிலத்தின் மண்ணை பெரியாழ்வார் கோதிக் கொண்டிருந்த போது, அந்தக் குழந்தையின் மேல் 'உழுக்கை' என்னும் கோதும் ஆயுதம் பட்டதால் குழந்தை அழுதது. பெரியாழ்வார் அதை அள்ளி அணைத்து எடுத்தார்.''செல்லமே! தங்கமே! அழாதே!'' என்று கொஞ்சிப் பார்த்தார். குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. 'நாராயணா! கோவிந்தா...இது என்ன சோதனை?'' என்றார். என்ன அதிசயம்! குழந்தை அழுகையை நிறுத்தி விட்டது. தொடர்ந்து அவர்,'' பத்மநாபா, வேங்கடரமணா, ஸ்ரீரங்கா, கேசவா, மாதவா, வடபத்ரசாயி என்று அவன் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே, ''இது என்ன அதிசயம்' என்றார். குழந்தை கலகலவென சிரிக்கவே ஆரம்பித்து விட்டது.ஆஹா! ஆண்டாளை அன்னையாக மட்டுமல்ல! நம் குழந்தையாகவும் தத்தெடுத்து அவளிடம் பக்தி செலுத்தலாம்.