ராமானுஜ நந்தவனம்
ஸ்ரீரங்கத்தில் ரங்கநாத பெருமாளின் பக்தி தொண்டில் ஈடுபட்டவர் ராமானுஜர். இவரது மனதில் நீண்ட காலமாகவே ஒரு குறை இருந்தது. 'நாம் ஸ்ரீரங்கத்தில் நந்தவனம் அமைத்து பகவத் சேவையில் தினமும் ஈடுபட்டிருக்கிறோம். அதேபோல் திருவேங்கடத்திலும் அமைக்க வேண்டுமே' என எண்ணினார். ஒருநாள் அடியவர்களிடம் திருவாய்மொழிக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார் ராமானுஜர். அப்போது, 'சிந்து பூ மகிழும் திருவேங்கடம்' என்ற வரிகள் வந்தது. அப்போது, ''திருப்பதியில் வேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து, மலர்மாலை தினமும் சார்த்த உங்களில் யாரேனும் தயாரா'' எனக் கேட்டார். ஆனால் குருவை விட்டு பிரிய மனம் இல்லாததால் யாரும் வாய் திறக்கவில்லை. ''குருவின் மனக்குறையைப் போக்குபவர் யாருமில்லையா'' என மீண்டும் கேட்கவே, ஒற்றை ஆளாக எழுந்து நின்றார் அனந்தாழ்வார். இவர் ராமானுஜரின் அடியவர்களில் முக்கியமானவர். ''நந்தவனம் அமைக்கும் சேவையை சுவாமிகள் அடியேனுக்குத் தந்தருள வேண்டும்'' என பணிவுடன் கேட்டார். அவரை வாரி அணைத்து உச்சி முகர்ந்து திருவேங்கடத்திற்கு அனுப்பி வைத்தார் ராமானுஜர். அங்கு சென்றவர் நந்தவனம் அமைத்து, அதற்கு 'ராமானுஜ நந்தவனம்' என்றே பெயரிட்டார்.