உள்ளூர் செய்திகள்

கணவருக்கு பெருமை சேர்த்தவள்

மந்திர தேசத்து மன்னர் அஸ்வபதியின் மகள் சாவித்திரி. வீரமங்கையான அவள் வேட்டைக்குப் போன சமயத்தில் சாளுவ தேச மன்னரான சால்வன், அவரது மனைவி, மகன் சத்தியவானைச் சந்தித்தாள். போரில் நாட்டை இழந்த சால்வன் காட்டில் குடில் அமைத்து வாழ்ந்து வந்தார். சால்வனுக்கும் அவரது மனைவிக்கும் பார்வை குறைபாடு இருந்தது. பெற்றோரை அன்புடன் பராமரித்த சத்தியவானைக் கண்ட சாவித்திரி, அவன் மீது காதல் கொண்டாள். 'இவரே எனக்கேற்ற கணவர்' எனத் தீர்மானித்தாள். தன் விருப்பத்தை தந்தைஅஸ்வபதியிடம் தெரிவிக்க அவரும் சம்மதித்தார். மந்திர தேசத்திற்கு வந்த நாரதரிடம் மகளின் விருப்பத்தை அஸ்வபதி தெரிவித்த போது, ''சத்தியவானுக்கு அற்பாயுள் '' என எச்சரித்தார். ஆனாலும் சத்தியவானையே கணவராக அடைந்தாள் சாவித்திரி. அரண்மனை வாழ்வைத் துறந்து காட்டிற்குச் சென்றாள். காலம் வேகமாக ஓடியது. சத்தியவானின் ஆயுள் முடியும் காலம் நெருங்கியது. கணவரின் உயிரை எமன் கவர்ந்து செல்வதை நேரில் கண்டாள். கற்புத்திறத்தால் எமனைப் பின்தொடர்ந்தாள். போராடி கணவரின் உயிரை மீட்டாள். அப்போது மாமனார், மாமியாருக்கு கண் பார்வை, சால்வனின் இழந்த நாடு, தன் தந்தையாருக்கு ஆண் வாரிசு என பல வரங்களை எமதர்மனிடம் பெற்றாள். கணவரின் மீதுள்ள பக்தியால் 'சத்தியவான் சாவித்திரி' என அழைக்கப்படுகிறாள்.