உள்ளூர் செய்திகள்

வெள்ளிக்கிண்ணம் தான் தங்கக்கைகளில்!

பெரியவரிடம் அத்யந்த பக்தி கொண்டது நடராஜ சாஸ்திரிகள் குடும்பம். அவர் தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில் டிரஸ்டியாக இருந்த சமயம், பெரியவர் தஞ்சாவூரில் முகாமிட்டிருந்தார். அவருக்கு ஒரு அழகான ரோஜா மாலையை அணிவிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை. பூக்கடையில் இதற்கென ஆர்டர் கொடுத்து மிக அழகான குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச் சொன்னார். மாலையுடன் பெரியவரைத் தரிசிக்கப் புறப்பட்டார். இவர் போய் சேருவதற்குள் தரிசன நேரம் முடிந்து, பெரியவர் <உள்ளே போய் விட்டார்.நடராஜ சாஸ்திரிகளுக்கு ரொம்ப வருத்தம்.மாலையோடு வீடு திரும்பி விட்டார். அவரது மனைவி, ''எல்லாமே பெரியவர் தானே! இந்த மாலையை அம்பாளுக்கு போட்டுடுங்கோ! பெரியவரும் அம்பாளும் வேற வேறயா என்ன?'' என்றார்.இதுகேட்ட சாஸ்திரி, ''நீ சொல்றது நிஜம் தான். பெரியவாளும் அம்பாளும் வேற வேறன்னு சொல்ல முடியாது. ஆனாலும், நாம் பிரத்யக்ஷமாக (கண்கண்ட தெய்வம்) பார்க்கிறது பெரியவரைத் தான். ஆமா! இது அவருக்கு மட்டும் தான்!'' என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டு, பூஜை அறையில் இருந்த ஒரு ஆணியில் தொங்க விட்டார்.மறுநாள் காலை விடிந்தும், விடியாமலும் இருந்த அதிகாலைப் பொழுது. பெரியவர் மேலவீதி சங்கரமடத்திலிருந்து, நடராஜ சாஸ்திரிகள் வீட்டுப் பக்கத்திலுள்ள பிள்ளையார் கோயிலில் தரிசனம் செய்ய வருவதாக தெருவே திமிலோகப்பட்டது. சாஸ்திரிகள் வீட்டிலும் ஒரே பரபரப்பு.பெரியவர் வரார்..பெரியவர் வரார்... தரிசனம் பண்ணிக்கிடுங்க!'' என்று மடத்தின் ஊழியர் உச்ச ஸ்தாயியில் சொல்லிக்கொண்டே போனார். வீடுகளுக்குள் இருந்து அவசர அவசரமாக குத்து விளக்கு, பூக்கள் சகிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர் பக்தர்கள்.பெரியவருடைய வேகம் அப்படி இருக்கும்! அவர் நடப்பது என்னவோ சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால், கூட வருபவர்கள் குதிகால் பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும். அந்த வேகம் மகான்களுக்கே உரித்தான லட்சணம்!பெரியவர் பிள்ளையாரைத் தரிசனம் பண்ணி விட்டு, யாரும் எதிர்பாராமல், டக்கென்று சாஸ்திரிகள் வீட்டுக்குள் நுழைந்து விட்டார். ரொம்பவும் சாதாரணமாக பூஜையறைக்குள் சென்றவர், ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையை தன் அருட்கரத்தால் தூக்கி தன் தலையில் சூடிக்கொண்டார்.சாஸ்திரிகளும் குடும்பத்தாரும் தாரை தாரையாக கண்ணீர் வடித்தனர். 'இப்படி ஒரு பரம கருணையா?' என்று இருதயம் முழுவதும் ஆனந்தம். பெரியவரின் அருள்மழையில் திக்கு முக்காடி போனார்கள்.எல்லாரும் நமஸ்கரித்ததும் வாசலுக்கு வந்த பெரியவர் சற்று நின்று திரும்பி,''எங்கே வெள்ளிக்கிண்ணம்?'' என்று சாஸ்திரிகளிடம் கேட்டார்.அவ்வளவுதான்! ஆடிப்போய் விட்டார் சாஸ்திரிகள்.நேற்று மனைவியிடம், 'பெரியவருக்கு ஒரு வெள்ளிக்கிண்ணம் குடுக்கணும்,' என்று சொல்லி, ஒரு புது கிண்ணம் கொடுத்து வைத்திருந்தார். அவர்கள் பேசியதை பக்கத்தில் இருந்து கேட்டதைப் போல், கிண்ணத்தை பெரியவர் கேட்க, பீரோவில் இருந்த கிண்ணத்தை ஓடிப்போய் எடுத்து வந்து, பெரியவரின் தங்கக்கரங்களில் ஒப்படைத்தார். பகவான் ஸர்வவியாபி (கடவுள் எங்கும் இருக்கிறார்) என்பதைக் கண்கூடாகக் கண்டனர் மக்கள்.