உள்ளூர் செய்திகள்

கட்டளையிட்ட குல தெய்வம்!

காஞ்சிப்பெரியவரைத் தரிசிக்க கிராமப்பகுதியைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் வந்திருந்தார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவர் முன் பணிவுடன் நின்ற அவர் ''சுவாமி! உங்க உத்தரவுப்படி நான் நடக்கத் தயாரா இருக்கேன். நீங்க சொல்ற தர்ம காரியங்களுக்கு செலவு பண்ணவும் விரும்பறேன்,'' என்று தெரிவித்தார். அதற்கு பெரியவர், ''உன் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் பக்தி சிரத்தையுடன் பழகு. உன் மனைவி, பிள்ளைகளிடம் அன்பாக இரு. கூடிய வரையில் தப்பு, தண்டான்னு வேண்டாத விஷயங்களில் ஈடுபடாதே. உண்மையைப் பேசி நல்வழியில் நட. அதுவே போதுமானது,'' என்று அறிவுரை கூறினார்.இதைக் கேட்ட பணக்காரருக்கு ஆச்சரியமாகிப் போனது. பெரியவர் மடத்திற்கு ஏதாவது நன்கொடை கேட்பார் என்று எதிர்பார்த்தால் இப்படி நேர்மாறாகப் பேசுகிறாரே என்று எண்ணிக் கொண்டார். இருந்தாலும், அவருடைய எண்ணத்தை மீண்டும் அவருக்குத் தெரிவிக்கும் விதத்தில், ''சுவாமி! நீங்க சொன்னபடி பேச்சைக் கேட்பேன். எதிர்காலத்திலும் நீங்க காட்டுன வழியில் நடந்து கொள்வேன். மேற்கொண்டு நீங்க என்ன உத்தரவு போட்டாலும் அதைக் கேட்கவும் தயாரா இருக்கேன்,'' என்று சொல்லி கைகளைக் கட்டிக் கொண்டு நின்றார்.அவரை உற்றுப் பார்த்த பெரியவர், ''உங்க குலதெய்வம் அய்யனார். அவரோட கோயில் வாசலில் குதிரை சிலை இருக்கு. அதெல்லாம் பராமரிப்பு இல்லாமல் பழுதாகிட்டுது. அதையெல்லாம் சரி பண்ணி, வர்ணம் பூசி திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்து வை,'' என்று உத்தரவிட்டார். இதைச் சொன்னதும் பணக்காரர் பிரமித்துப் போனார். ''ஆமாங்க சாமி! எங்க ஐயாவும்(தந்தை) அந்திம காலத்தில இந்த விஷயத்தை என்னிடம் சொல்லி விட்டுப் போனார். இருந்தாலும் அதை நான் கண்டுக்காம விட்டுட்டேன். தகப்பனார் சொன்ன அதே விஷயத்தை நீங்களும் சொல்றதைக் கேட்டா அந்த அய்யனாரே வந்து கட்டளையிட்டது போல இருக்கு. நிச்சயம் உங்க ஆசியோடு திருப்பணியை இப்பவே ஆரம்பிக்கறேன்'' என்று சொல்லி புறப்பட்டார்.வந்த பணக்காரரின் குலதெய்வம் அய்யனார் என்பதையும், அந்தக் கோயில் பாழ்பட்டு கிடப்பதையும் மகாபெரியவர் எப்படித்தான் உணர்ந்தாரோ என்று அந்தப் பணக்காரர் ஆச்சரியப்பட்டது போல, நமக்கும் ஆச்சரியமாய்த் தான் இருக்கிறது. அவருக்கு அய்யனார் குலதெய்வம் என்றாலும், மகாபெரியவரையும் குலதெய்வமாய்த் தான் கருதியிருப்பார்!