உள்ளூர் செய்திகள்

மாடக்கோயில் கட்டிய மன்னர்

பிப்.20 - கோச்செங்கட் சோழ நாயனார் குருபூஜைவளம்மிக்க சோழநாட்டில் இருக்கும் தலம் திருவானைக்காவல். இங்கு காவிரி நதி வற்றாது ஓடியது. கரையில் இருந்த குளிர்ச்சோலையில் வெள்ளை நாவல் மரத்தின் கீழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. நாள்தோறும் வெள்ளை யானை ஒன்று துதிக்கையால் நீரும், மலரும் எடுத்து வந்து சிவலிங்கத்தை பூஜித்து வந்தது. இதனால் இந்த ஊருக்கு 'திருவானைக்காவல்' என்ற பெயர் வந்தது. அதே நேரத்தில் நாவல் மரத்தின் மீதிருந்த அறிவுடைய சிலந்தி ஒன்று சிவலிங்கத்தின் மீது சூரிய வெப்பம் படாமலும், சருகுகள் உதிர்ந்து விழாதவாறும் நுாற்பந்தல் அமைத்தது. இந்தப் பிராணிகளுக்கு எப்படி இவ்வளவு ஞானம் வந்தது?திருக்கையிலாயமலையில் புட்பதந்தன், மாலியவான் ஆகிய சிவகணங்கள் சிவபெருமானுக்கு சேவை செய்து வந்தனர். இதில் இவர்களுக்குள் சிவத்தொண்டில், 'தாமே சிறந்தவர்' என போட்டி வேறு இருந்தது. நாளடைவில் இது பொறாமையாக மாறியதால் புட்பதந்தன் மாலியவானைச் சிலந்தியாகவும், மாலியவான் புட்பதந்தனை யானையாகவும் பிறக்கும்படி சபித்தனர். என்னதான் பிராணிகளாக இருந்தாலும் முன்ஜென்ம வாசனை இருக்கும் அல்லவா! இதனால் சிவபூஜையும் தொடர்ந்தது. அதுமட்டும் அல்ல. போட்டியும். ஆம்! தினமும் சிலந்தி வலையை பார்த்து, குற்றச் செயல் நடந்துவிட்டதே என கோபப்பட்டது யானை. பின் நுாற்பந்தலை சிதைத்து வழிபட்டு சென்றது. இச்செயலைக் கண்டு வருத்தமுற்ற சிலந்தி, மீண்டும் முன்போல் வலைப்பின்னியது. இப்படி வலை பின்னுவதும், அதை சிதைப்பதுமான செயல்கள் தொடர்ந்தன. ஒருநாள் சிலந்திக்கு கோபம் வரவே, யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. யானையும் கோபத்துடன் துதிக்கையை ஓங்கி நிலத்தில் அடித்தது. இதனால் யானையும், சிலந்தியும் இறந்தன. யானைக்கு சிவபதத்தையும், சிலந்திக்கு சோழர் குலத்தில் பிறந்து சிவத்தொண்டு செய்யும்படி அருள்புரிந்தார் சிவபெருமான். காரணம் யானையைக் கொல்லச் சிலந்தி திட்டமிட்டது அல்லவா. அதனால் அதற்கு மறுபிறப்பு ஏற்பட்டது. சோழ மன்னரான சுபதேவர் மனைவி கமலாவதியாருடன் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த இவர்களுக்கு தில்லை நடராஜரின் பேரருளால் அந்தப் பாக்கியம் கிட்டியது. கரு வளர்ந்து குழந்தை அவதரிக்கும் தருணம் நெருங்கியது. அப்போது ஜோதிடர்கள், 'இக்குழந்தை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால், மூவுலகையும் ஆட்சி செய்யும் குழந்தையாக இருக்கும்' என்றனர். அதன்படி, ' உடனடியாக குழந்தை பிறக்காமல் இருக்க, தன்னை தலைகீழாகக் கட்டித் தொங்க விடுமாறு கட்டளையிட்டார் அரசி. அதன்படியே செய்தவர்கள், நல்ல வேளை வந்ததும் கட்டவிழ்த்தார்கள். அழகிய ஆண் குழந்தையும் பிறந்தது. தலைகீழாக தொங்கியதால் சிறிது நேரம் குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. குழந்தையை உச்சிமோந்து, 'என் செல்வக் கோச்செங்கணான்' என கொஞ்சினாள் அரசி. அந்த அன்பு கொஞ்ச நேரமே நீடித்தது. ஆம்! சிவபக்தனை உலகுக்கு கொடுத்துவிட்டு இறந்துபோனாள் அரசி. அந்தக் குழந்தைதான் கோச்செங்கட் சோழன். தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், சிவபெருமானின் அருளால் பல கோயில் கட்டினார். அதுவும் யானைகள் ஏறிவர முடியாதபடி மாடக்கோயில்களை எழுப்பினார். இப்படி சிவபெருமானுக்கு எழுபது கோயிலையும், பெருமாளுக்கு மூன்று கோயிலையும் கட்டி நாயன்மார்களில் ஒருவராக திகழ்ந்தார்.