உள்ளூர் செய்திகள்

காஞ்சிபெரியவரின் கர்ப்பவாசம்!

காஞ்சி மகாபெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பற்றி எவ்வளவோ அற்புதங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், அவர் கர்ப்பவாசம் அனுபவித்த சம்பவம் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது ஒரு 'எக்ஸ்குளுசிவ்' தகவல்.காஞ்சிபுரம் அருகில் தேனம்பாக்கம் என்ற கிராமம் இருக்கிறது. இங்கே பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கே சிவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். மகாபெரியவர், இந்தக் கோயிலுக்கு அடிக்கடி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.ஒரு குழந்தை தாயின் கருவறையில் பத்து மாதங்கள் தங்கி, பின் ஜனனமாவது வழக்கம். அதேபோல, மகா பெரியவர் இந்தக் கோயிலுக்குள் உள்ள குடிலுக்குள் பத்துமாதம் தங்கி அனுஷ்டானங்களை நடத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு, இருந்த காலத்தில் ஒருநாள் கூட, அந்தக் குடிலை விட்டு வெளியே வரவே இல்லை. இதுபற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. உள்ளே இருந்த காலத்தில், அவர் என்ன செய்தார் போன்ற விஷயங்கள் யாருக்கும் தெரியாது. சூரியவெளிச்சத்தைக் கூட பார்க்காமல் அவர் இவ்வாறு ஓரிடத்தில் தங்கி இருக்க வேண்டிய அவசியம் என்ன என்பதும் புரியாத புதிராகவே இன்றும் உள்ளது.ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது, வெளியுலகைப் பார்க்க முடிவதில்லை. அதுபோல், பெரியவரும் பத்துமாதம் அங்கு தங்கி வெளிவராமல் இருந்ததால் இதை 'கர்ப்பவாசம்' என்கிறார்கள்.பெரியவர் எதற்காக இவ்வளவு அரிய தவத்தை மேற்கொண்டார்? உலகத்திற்கு என்ன நன்மை கருதி இதை அனுஷ்டித்தார் என்பது, அவருக்கும், அவர் தினமும் பூஜித்த திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரருக்கு மட்டுமே வெளிச்சம்.பெரியவர் கர்ப்பவாசம் அனுபவித்த கோயில் என்பதால், குழந்தை இல்லாதவர்கள் தேனம்பாக்கத்திலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபடலாம். பெரியவர் அரும்பெரும் கோரிக்கைகளை முன்வைத்தே இங்கே கர்ப்பவாசம் செய்திருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில், இங்கே கன்னியர் நல்ல வரன் வேண்டியும், ஊனமுற்ற குழந்தைகள் தங்கள் எதிர்காலம் சிறக்கவும் பூஜை செய்து வரலாம்.